இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S NAGARAJAN

Date: 25 September 2015

Post No: 2187

Time uploaded in London :– 11-20 am

(Thanks  for the pictures) 

 

 

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

 

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

.நாகராஜன்

இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!

மௌலானா ஜலாலுத்தீன் ஷம்ஸ் (J.D.Shams)  என்பவர் “Where did Jesus Die” என்ற ஆய்வுப் புத்தகத்தில் இயேசுவின் மறைவு குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்தப் புத்தகத்தை எஸ்.எஸ். ஹஸன் அபூபக்கர் என்பவர் தமிழில் ‘இயேசுவின் மரணம் காஷ்மீரிலே’ என்று மொழி பெயர்த்துள்ளார்,.(அக்டோபர் 1970  அஞ்சுமன் அஹ்மதியா, மேலப்பாளையம், திருநெல்வேலி-5, தமிழ்நாடு வெளியீடு, 215 பக்கங்கள்)

இந்த நூலில் லண்டனிலிருந்து வெளி வரும் சைகிக் நியூஸ் தனது ஏப்ரல் 20, 1946 தேதியிட்ட இதழில் இயேசுவின் கல்லறை காஷ்மீரில் ஶ்ரீநகரில் .இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டதோடு கல்லறையின் போட்டோவையும் வெளியிட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.

அஹ்மதிய்யா இயக்கத்தவர் இயேசுவின் வாழ்க்கையில் பெரிதும் ஆர்வம் கொண்டு இது சம்பந்தமான பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.’The Tomb of Jesus என்ற 55 பக்கங்கள் அடங்கிய ஒரு குறு நூல் ஜனவரி 2010  வெளியீடாக சூஃபி முதியூர் ரஹ்மான பெங்காளி (Sufi Mutiur Rahman Bengalee) என்பவரால் எழுதப்பட்டு 2013ஆம் ஆண்டு (பெங்களூரில்) நடந்த புத்தக கண்காட்சியில்  இலவசமாகத் தரப்பட்டது.

இந்த நூலிலும் ஏராளமான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

போட்டோக்களைக் காட்டும் ஒரு தளம்

சரி, கல்லறையின் போட்டோ மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் படிக்க முடியுமா என்று கேட்டாலோ ஏராளமான தளங்கள் விவரங்களைத் தருகின்றன.

குறிப்பிடத் தகுந்த ஒரு தளத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

https://mail.google.com/mail/u/0/#inbox/147283ca00435afd

இந்த தளத்தில் ‘Jesus In India’ என்ற தலைப்பில் வந்துள்ள ஆய்வுக் கட்டுரை அனைத்து விவரங்களையும் சுருக்கமாகத் தருவதோடு கல்லறையின் போட்டோக்களையும் தருகிறது.

கருத்துக்களின் சுருக்கம்

இப்படி ஏராளமாகக் கிடைக்கும் தகவல்களைச் சுருக்கினால் வரும் விஷயம் இது தான்:-

  • இயேசு காஷ்மீரில் வசித்தார். 80 வயது வரை வாழ்ந்தார்.
  • ஜெர்மானிய விஞ்ஞானிகள் இயேசுவின் மீது போர்த்தப்பட்டிருந்த சவப் போர்வையை விரிவாக எட்டு ஆண்டுகள் ஆராய்ந்தனர். ஆய்வு முடிவை அவர்கள் போப் அரசருக்குத் தெரிவித்தனர். அவர் மௌனமாகவே இருக்கிறார்.
  • இந்தச் சவப் போர்வை ஒரு வெள்ளிப் பேழையில் இருந்தது. இத்துணியை பிரான்ஸ் மக்கள் பிரான்ஸில் காட்சிப் பொருளாக்கிப் பெரும் பணத்தைப் பெற்றனர். 1898ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் பயா (Pia) என்பவர் அதைப் போட்டோ பிடித்தார்.
  • 1931ஆம் ஆண்டில் அது மீண்டும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டபோது கிசிப்பி என்ரிக் (Guisepe Enric) என்பவர் திருச்சபையின் முக்கியமான பிரமுகர் ஒருவர் முன்னிலையில் 6000, 20000 வோல்ட்டுகள் ஒளிதரும் மின்சார சிம்னிகளின் உதவியோடு அத்துணியை ஒரு புகைப்படம் பிடித்தார்.இந்தத் துணி இரத்தத்தை உறிஞ்சி இருக்கும் அடையாளங்களைத் தருகின்றன. ஆகவே இதன் அடிப்படையில் பெறப்படும் உண்மை சிலுவையில் இயேசு உயிரோடு இருந்திருக்கிறார். அவர் கீழே சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்ட போதும் உயிருடனேயே இருந்திருக்கிறார் என்பது தான்.
  • ரஷிய ஆராய்ச்சியாளரான நோடோவிச் இந்தியாவில் புத்த மடாலயம் ஒன்றில் பழைய புத்தக பிரதி ஒன்றைப் பார்த்தார். அதில் இயேசு இந்தியாவில் ஒர்சிஸ் (orsis ஒரிஸா) மாநிலத்தில் ஜக்கர்நாத்திற்கு (ஜகன்னாதர்) சென்றார். பிரம்மாவைத் துதிக்கும் வெள்ளைப் பூசாரிகள் அவருக்கு வேதங்களை வாசித்து விளங்கிக் கொள்வதற்கும் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

  • சிலுவையிலிருந்து மீண்ட பின்னர் – அதாவது “உயிர்த்தெழுந்த” பின்னர் அவர் காஷ்மீரை வந்தடைந்தார். அவரது இறப்பிற்குப் பின்னர் அவர் செய்யத் நாஸிருத்தீன் அவர்களுடைய கல்லறைக்கு அடுத்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
  • இந்திய அரசாங்கம் “The Roza Bal Shrine of Srinagar” என்ற டாகுமெண்டரியை வெளியிட்டுள்ளது. இதில் யுஸா ஆஸஃப் – அதாவது – இயேசு கிறிஸ்துவின் கல்லறை பற்றி குறிப்பிடப்படுகிறது. இந்தியாவிற்கு வந்த பின்னர் இயேசு பஞ்சாப், ராஜஸ்தான் வழியே சென்று பூரி ஜகன்னாத், ராஜ்கிரஹம், இமாயலப் பகுதி ஆகிய இடங்களில் வசித்தார். இந்த டாகுமெண்டரி அராபிய, பாரசீக, சம்ஸ்கிருத நூல்கள் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது.
  • இந்த ‘ரோஜா பால் கொள்கையின்’ படி காஷ்மீரில் வாழ்ந்த இயேசு மணமுடித்துக் கொண்டார். பல குழந்தைகளைப் பெற்றார். இங்குள்ள காஷ்மீரிகளில் பலர் தாங்கள் இஸ்ரேலின் 10 பூர்வீக குடிகளின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
  • இந்த டாகுமெண்டரியை எழுதி இயக்கியவர் யஷேந்த்ர ப்ரஸாத். அவர், ஒரு பேட்டியில், “இயேசு காஷ்மீரில் இருந்தது பற்றிய பிரச்சினையில் இந்திய அரசு நடுநிலைமை வகிக்கிறது. இந்தப் பிரச்சினையில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது இந்திய அரசின் கொள்கை. தனிப்பட்ட முறையில் எனது விருப்பம் இந்திய அரசு நவீன மரபணு சோதனைகளை கல்லறையில் கையாள வேண்டும் என்பது தான். ஆனால் சூழ்நிலை இதற்கு ஒத்து வரவேண்டும். பல சக்திகள் இதை விரும்பவில்லை.” என்றார்.
  • பல கிறிஸ்தவ ஆராய்ச்சி நிபுணர்கள், “இத்தகைய கூற்றிற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதால் விஞ்ஞான முறையிலான சோதனை தேவையற்றது” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அழியாது புகழ்

ஆக இயேசுவின் மரணம் காஷ்மீரில் தான் என்ற ஆய்வு ஒரு புறம் தீவிரமான கருத்துக்களை முன் வைக்க அதை அதிகாரபூர்வமான கிறிஸ்துவின் தலைமை இடம் ஏற்கவில்லை.

இந்த ஒரு ஆராய்ச்சியால் இயேசுவின் போதனைகள் சிறிதளவும் கீர்த்தியில் குறைவு படப் போவதில்லை. இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அவர் காஷ்மீரில் இறந்தார் என்பதை ஏற்றாலும் அவர் புகழ் அணுவளவேனும் மாசுபடப் போவதில்லை.

ஆனால் அவரது சத்தியமான போதனைகளுக்கு அப்பாற்பட்டு ‘உயிர்த்தெழுதல்’ போன்ற சம்பவங்களைக் கூறி வரும் தேவாலயத் தலைமைக்கு ஒருவேளை இதனால் சங்கடங்கள் நேரிடலாம். ஆகவே அவர்கள் இதை ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளுவதில் ஆச்சரியமும் இல்லை.

என்றாலும் தகவல் புரட்சியுடன் கூடிய மரபணு சோதனை யுகத்தில் மக்கள் இதில் ஆர்வம் காட்டுவது இயல்பே!

நாளைய உலகில் என்னென்ன சோதனைகள் தோன்றுமோ, அதில் என்னென்ன முடிவுகள் வெளி வருமோ, யார் அறிவார்?!

இயேசு காப்பார் – எப்போதும்! இது கிறிஸ்தவர்களின் உள்ளார்ந்த நம்பிக்கை!!

நன்றி: இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பல்வேறு நூல் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், படங்கள், இணைய தளங்களுக்கு இந்த ஆய்வாளரின் நன்றிகள்.

**************                                                                   இயசுவின் மரணம் பற்றிய இந்த ஆய்வு முற்றும்

Leave a comment

Leave a comment