உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

here on arth

Compiled by S NAGARAJAN

Post No.2245

 

Date: 15 October 2015

Time uploaded in London: காலை 8-54

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 2-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 241ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

.நாகராஜன்

எல்லோரும் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டாலும் கூட இரண்டு விஷயங்களைப் பற்றித் தான் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை. காதலும், காலநிலையும் தான் அந்த இரண்டு விஷயங்கள்!  

 

 –  ஆலிஸ் ஹாஃப்மேன் (பிரபல பெண் எழுத்தாளர் ‘Here on Earth’ என்ற நாவலில்)

காலநிலை மாறுபாடு என்பது சாதாரண விஷயமில்லை. மனிதகுல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும் புயல்கள், சுனாமி, தீவிரமான பருவமழை போன்றவை பல நாடுகளின் சரித்திரப் போக்கையே அதிரடியாக மாற்றியுள்ளன. ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தது முதல் நெப்போலியனின் குதிரைப்படை அழிந்தது வரை பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பித்தது முதல் ஜார்ஜ் வாஷிங்டன் அதிர்ஷ்டவசமாக தோல்வி அடையாமல் இருந்தது வரை காலநிலையை மட்டுமே வரலாறு காரணமாகக் குறிப்பிடுகிறது.

காலநிலை மாறுபாடு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறும் சரித்திரப் போக்கின் மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்.

 

பன்னிரெண்டாம் சார்லஸின் ரஷ்யப் படையெடுப்பு  

1709ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் சார்லஸ் ரஷியாவின் மீது படையெடுத்தார். ஐரோப்பாவிலிருந்து ரஷியா மீது படையெடுத்த முதல் ஆள் இவர் தான்! அதுவும் ரஷியாவின் கடுங்குளிர் காலத்தில் தன் படைவீரர்களை மரணத்தை நோக்கி நடை போட வைத்தார் இவர். ஸ்வீடன் தேசத்துப் படைகளுக்கு ரஷிய குளிர் என்றால் என்ன என்று புரிந்தது. ஏராளமானோர் மடிந்து விழ  ரஷிய மன்னர் முதலாம் ஜார் பீட்டர் வெற்றி வாகை சூடினார்.

 wasshingtom

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் ஒரு அதிசயம்!

அமெரிக்க ராணுவத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அவரது படைவீரர்களுக்கு யூனிஃபார்மே கிடையாது. அவர்களிடம் ஆயுதமும் கிடையாது. தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள். ஆனால் அவர்களை எதிர்த்த பிரிட்டிஷ் ராணுவமோ அசுர பலம் பொருந்திய ஒன்று. ஏராளமான ஆயுதங்கள். அவர்களை ஜெயிப்பது நிச்சயமாக முடியாத ஒன்று. 1776ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி லாங் ஐலேண்டில் பிரம்மாண்டமான போர் ஒன்று நடக்க இருந்தது. போர் மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்குமானால் அமெரிக்கா மண்ணைக் கவ்வுவது நிச்சயம். ஆனால் என்ன ஆச்சரியம். திடீரென்று கடும் பனிப் போர்வை ஒன்று தோன்றியது. பிரிட்டிஷ் வீரர்கள் திகைத்தனர். எதுவுமே கண்ணுக்குத் தெரியாத நிலையில் யாருடன் எங்கு சண்டை போடுவது. அவர்கள் பின் வாங்கிச் சென்றனர். சரித்திரம் காலநிலை மாறுபாடு காரணமாக அமெரிக்காவை வாழ வைத்தது. அந்தப் பனியை திடீரென்று உருவாக்கியவர் யார்?இயற்கையா, கடவுளா?

 11-old-french-postage-stamp-howard-hershon

பிரெஞ்சு புரட்சி எப்படி உருவானது?

பிரான்ஸ் நாட்டில் பொருளாதாரம் பயங்கரமான வீழ்ச்சியைக் கண்ட காலம் அது! அமெரிக்கர்கள் பிரிட்டிஷாருடன் போர் புரிந்த சமயமும் அது தான்! ஏகப்பட்ட கடன் சுமை! பிரான்ஸில் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது. கடைசி மரண அடியாக ஒரு பெரும் புயல் வந்தது. நாடு முழுவதும் இருந்த பயிர்களை அது நாசப் படுத்தியது. கொஞ்ச நஞ்சமிருந்த பயிர்களும் காலி; அவர்களின் நம்பிக்கையும் காலி! ஒட்டு மொத்த ஜனங்களும் கிளர்ந்தெழுந்தனர். வெடித்தது பிரெஞ்சுப் புரட்சி. இதைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அனைவரும் அறிவர். அந்த கடைசிப் புயலை உருவாக்கி உலகத்தையே மாறுதலை அடையச் செய்தது எது? காலசக்தியா???!!!

 nuclear stamp

ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டு!

நல்ல கோடைக்காலம். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் வழக்கம்போல இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காலை மணி 7.09 

ஹிரோஷிமா மீது பறந்த விமானம் ஒன்று செய்தி ஒன்றை பரிபாஷையில் அனுப்பியது. அதன் உண்மையான அர்த்தம் இது தான்:- பத்தில் மூன்று பகுதிக்கும் குறைவாகத் தான் மேகம் இருக்கிறது. குண்டைப் போட்டு விடலாம்!

அதாவது குண்டு போட சரியான காலநிலை உள்ளது. போட்டு விடலாமா என உத்தரவு கேட்கப்பட்டது. போடலாம் என்று பதில் வந்தவுடன் ஹிரோஷிமாவின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. அதன் மீது அணுகுண்டு போடப்பட்டு உலக வரலாற்றின் ஒரு கோரமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி. கோகுரா என்ற ஜப்பானிய நகர் மீது குண்டு போட அமெரிக்க விமானம் பறந்தது.ஆனால் அந்த நகரின் மீது குண்டு போட முடியாதபடி மேகமூட்டம் இலக்கை மறைத்து விட்டிருந்தது. விமானம் மாற்று இலக்கான நாகசாகி நோக்கி பறந்தது. காலநிலையால் கோகுரா பிழைத்தது!

இன்னும் சில மாறுதல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்!

kelvin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

லார்ட் கெல்வின் பெரிய விஞ்ஞானி. அவர் பெயரால் தெர்மாமீட்டரில் கெல்வின் என்ற உஷ்ணநிலை அளவீடே குறிக்கப்படுகிறது.

ஒரு நாள் அவர் ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு திடீரெனச் சென்றார். தன்னை யார் என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு ஃபோர்மன் அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்த நிலையம் முழுவதும் சுற்றிக் காண்பித்தார். ஒவ்வொரு இடமாக நன்கு விளக்கியதோடு மின்சாரம் பற்றிய அனைத்தையும் எடுத்துரைத்தார்.

மின் நிலையம் முழுவதும் சுற்றிப் பார்த்து விட்ட நிலையில் விடை பெறும் நிலையில் இருந்த கெல்வின் ஃபோர்மனை இறுதியாக ஒரு கேள்வி கேட்டார்: அது சரி, அப்படியானால் மின்சாரம் என்றால் என்ன?”

இது வரை விளக்கி வந்த ஃபோர்மன் வாயடைத்துத் திகைத்துப் போய் நின்றார்.

அன்புடன் அவரை நோக்கிய கெல்வின், “பரவாயில்லை, அந்த ஒன்று தான் உங்களுக்கும் எனக்கும் தெரியாது!” என்று சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் தான் ஃபோர்மனுக்கு வந்தவர் லார்ட் கெல்வின் என்பது தெரிய வந்தது.

************

Leave a comment

Leave a comment