Compiled by London swaminathan
Date: 10 November 2015
Post No:2317
Time uploaded in London :– காலை 5-13
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
இன்று தீபாவளித் திருநாள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
உலகில் இந்துக்களின் தனிச் சிறப்பு கடவுளை ஒளிரூபத்தில் வழிபடுவதாகும்; இதன் முத்தாய்ப்புதான் தீபாவளியும் கார்த்திகையும்! தமிழர்கள் கார்த்திகை நாளன்று வீடெங்கும் தீபங்களை ஏற்றி வைப்பர். வடக்கில் வாழும் நம் சகோதரர்கள் தீபாவளித் திருநாளன்று இவ்வாறு அகல் விளக்கு ஏற்றி வைப்பர்.
இந்த ஒளி வழிபாடு உலகம் முழுதும் இந்துமதம் இருந்த காலத்தில், எல்லா தேசங்களிலும் இருந்தது. மோசஸ் ஒளிரூபத்தில் ஆண்டவனைக் கண்டதும், பிற மதத் தலைவர்கள் ஒளிரூபத்தில் தேவதைகள் வந்ததாகக் கூறுவதும் இதையேதான். இந்துமதம் மறந்துபோன நாடுகளில் இந்த ஒளி வழிபாடு இப்போது இல்லை. ஆனால் பாரதத்தில் இன்று வரை அது நீடிக்கிறது.
சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்புகள் உண்டு; ஆனால் தீபாவளி பற்றி நேரடிக் குறிப்புகள் இல்லாவிடினும் மனைவியைக் குடும்ப விளக்கு என்று பாடும் சங்க இலக்கியப் பாடல்கள், விளக்கின் முக்கியத்துவத்தைக் காட்டும்.
இது எப்போது துவங்கியது?
உலகிலேயே மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம்; அதில் காயத்ரீ மந்திரம் இருக்கிறது. அது கடவுளை ஒளி உருவத்தில் வழிபடும் மிகப் பழைய துதி! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதிக்கரையில் ஒலித்த அந்த மந்திரம் இன்று வரை ஒலிக்கிறது. உலகில் வேறெங்கும் காணாத புதுமை இது. காயத்ரீ மந்திரத்தில் துவங்கிய ஒளி வழிபாடு பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் தொடர்கிறது.
“அஸதோ மா சத் கமய
தமஸோ மா ஜோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய!”
உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது பிருஹதாரண்யக உபநிஷத்! அதில் “இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” — என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய).
பகவத் கீதையில் ஒளி வழிபாடு
அர்ஜுனனின் ஐயங்களை அகற்ற கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்தபோது அது ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது (கீதை 11-12) போலிருந்ததாம்! கீதையைப்படித்து அதில் ஊறிப்போன அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர் முதல் அணுகுண்டு சோதனையின் போது தோன்றிய ஒளியைப் பார்த்து அசந்து போய், இந்த (திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12) ஸ்லோகத்தைச் சொன்னார்.
கண்ண பிரான் ஒளி ரூபத்தில் தோன்றியது மட்டுமின்றி பகவத் கீதையில் ஞானதீபம் (அறிவு ஒளி) என்ற உவமையைப் பல இடங்களில் கையாளுகிறான் (10-11; 4-3, 4-19)
ஆழ்வார்கள், நாயன்மார்கள்
பகவத் கீதையைத் தொடர்ந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞான விளக்கு பற்றிப் பாடுகின்றனர். விளக்கு, திரி உருவகத்தை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடுகிறார். பூதத்தாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பாடுகிறார்.
ஞான தீபம்= ஞான விளக்கு ( பகவத் கீதை 10–11)
“பக்தர்களின் உள்ளத்தில் நிலைபெற்று என் அருளால் பிரகாசிக்கும் ஞான தீபத்தால் அஞ்ஞான இருளை நாசம் செய்கிறேன்:– இதற்கு அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை) எழுதிய உரையில் சில பாடல்களை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது:–
போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)
ஞான அக்னி = ஞானத் தீ ( கீதை 4-19 )
“எவனுடைய எல்லா கருமங்களும் ஆசையும், அதற்குக் காரணமான சங்கல்பமும் அறுபட்டு, ஞானத் தீயில் பொசுங்கிய வினைகளை உடைய அவனை பண்டிதன் என்று அறிவாளிகள் கூறுவர்”.
திருமூலர் பாடுகிறார்:
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
– திருமந்திரம்
இதற்கெல்லாம் பின்னர்வந்த அருணகிரிநாதர் சந்தத் தமிழில் அழகாகப் பாடுகிறார்:
தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோ நம- அருள்தாராய்
பாரதியார், காயத்ரீ மந்திரத்தை தமிழில் மொழிபெயர்த்த வரிகளுடன் கட்டுரையை நிறைவு செய்வோம்:
“செங்கதித் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்–அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக”
–சுப்பிரமணிய பாரதி
–சுபம்–




You must be logged in to post a comment.