பாபாவின் அருள் விளையாடல்கள்!(Post No.2350)

baba-kalam

Baba with President Abdul Kalam

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை! ஞான ஆலயம் நவம்பர் இதழில் வெளியானது.

WRIITEN BY S NAGARAJAN

Date: 22 November 2015

Post No.2350

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பாபாவின் அருள் விளையாடல்கள்!

.நாகராஜன்

 

லட்சக்கணக்கானோர் அருள் பெற்ற நவீன அவதாரம்

 

நம்முடைய காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து வந்த ஶ்ரீ சத்ய பாபாவின் அவதாரம் ஒப்பற்ற தனித் தன்மை உடைய ஒரு அவதாரமாக இலங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக் கணக்கான பக்தர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகி உபதேசித்தவர். பல நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மந்திரிகள், தொழில் துறை கோடீஸ்வரர்கள், ஞானிகள், விளையாட்டு வீரர்கள், நடிக, நடிகையர், பாடகர்கள், வேத விற்பன்னர்கள், சமயப் பெரியோர், கலைஞர்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் அவரிடம் வந்த பிரபலங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் உண்டு; அருளாசியுடன் உத்வேகமும் பெற்று அவர்கள் தம் பணியைத் தொடர்ந்ததை நம் கண் முன்னாலேயே கண்டோம் என்பது அவரது அவதார மஹிமைகளில் தனிச் சிறப்பு கொண்ட ஒன்று. முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா வாஜ்பாயி, பிரபல பாடகி பாரத் ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிரபல கிரிக்கட் வீரர் பாரத் ரத்னா சச்சின் டெண்டுல்கர் போன்ற ரத்தினங்கள் அவரைப் போற்றி வணங்கி அவர் அருள் சங்கமத்துள் இணைந்த காட்சியைக் கோடிக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்தது நிதரிசனமான சரித்திர உண்மை!

 

baba-stamps

மர்யாதா புருஷோத்தமனான கம்பீர ராமனாகவும், தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணனாகவும் அவர் திகழ்ந்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.

அவதாரங்களின் நகைச்சுவை உணர்வு (Humour sense) பாபாவிடம் இருந்ததைப் போல இன்னொரு அவதாரத்தில் நாம் பார்த்ததில்லை.

 

 

நீங்கள் அனைவருமே எனது மிராக்கிள் தான்!

அணுக்கத் தொண்டரான கஸ்தூரி அவர் அருகில் கூடவே பழகினாலும் அவர் ஒரு நெருப்புப் பிழம்பு என்ற பயத்துடனேயே இறுதி வரை பழகி வந்தார். சாதாரண மனிதர் போல அவர் இருந்தாலும், ஒவ்வொரு க்ஷணத்திலும்  தெய்வீகப் பொறி அவரிடமிருந்து தெறிக்கும் என்பது அவரது அனுபவம்.

 

ஒரு நாள் கஸ்தூரி பாபாவிடம், ‘இன்று பௌர்ணமி. சித்ராவதி நதிக்குப் போகலாம்’ என ஆவலுடன் தெரிவித்தார். அங்கு மாலை நேரங்களில் செல்லும் பாபா, குழுமியோருக்கு மணலிலிருந்து லாக்கட், மோதிரம் போன்ற எதையாவது ‘உருவாக்கி’ அற்புதங்கள் நிகழ்த்துவது வழக்கம்.

 

பாபா சிரித்தவாறே, ‘சித்ராவதி மணல் இருந்தால் தான், நான் அற்புதங்களை நிகழ்த்துவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் போலும்!” என்றார்.

‘இல்லை, பௌர்ணமி நிலவில் உங்களுடன் இருக்க ஆசை’, என்றார் கஸ்தூரி.

“மிராகிள்! மிராகிள்!  அற்புதங்களுக்காக அலைகிறீர்கள்!” என்று நிறுத்திய பாபா பளீரென்று கூறினார்:” நீங்கள் ஒவ்வொருவருமே என் மிராகிள் தான், தெரியுமா?!”

baba-vibhutim

ஒரு கணம் கஸ்தூரி அசந்து நின்று விட்டார். மனித சரித்திரத்திலேயே ஒரு பிரம்மாண்டமான அவதாரம் தசை, எலும்பு, ரத்தத்துடன் தன் எதிரில் இருப்பதை எண்ணிய அவர் உடலும் உள்ளமும் சிலிர்த்தது.

அனைத்துக்குமான ஆதி விதை – ஆதி பீஜம் தான் தான் என்ற இரகசியத்தை ஒரு க்ஷணத்தில் மின்னல் வெட்டுவதைப் போலக் கூறி விட்டாரே!

 

 

கேமரா ட்ரிக்!

பக்தர்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பார்; ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் அவதார மஹிமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்!

ஒரு முறை பார்த்தசாரதி என்ற அன்பர், சோபாவில் பாபா அமர்ந்திருக்க, அவர் அருகில் அனைவரும் இருப்பதை போட்டோ எடுக்க எண்ணித் தன் கேமராவை எடுத்தார்.

பாபா, ‘அந்தப் போட்டோவை நானே எடுக்கிறேன். நீங்கள் அவரவர் இடத்தில் அமருந்திருங்கள்’ என்று கேமராவை வாங்கி சோபாவின் எதிரில் சென்று நின்றார்.

 

பாபாவே போட்டோவை எடுத்தால், அவர் அதில் விழ மாட்டாரே! அழாக்குறையாக அப்படி அவரே எடுக்க வேண்டாம் என்பதைச் சொன்ன போதும் அவர் கேட்கவில்லை.

‘போட்டோவை பிரிண்ட் போடு. அதில் நான் நிச்சயம் இருப்பேன்’ என்று அருளினார் பாபா. சொன்னபடியே பிரிண்ட் போட்ட போது நடுநாயகமாக போட்டோவில் அவர் இருந்தார்.

 

எங்குமே  எல்லாமாய் ஒரே சமயத்தில் இருப்பவருக்கு பிரிண்டில் ‘உட்கார்வது’ கஷ்டமான காரியமா என்ன?

ஒரு நாள் கஸ்தூரியை அழைத்த பாபா ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் நாளிதழ் ஒன்று கஸ்தூரியின் போட்டோவைக் கேட்டிருப்பதாகவும் போட்டோவைத் தானே எடுக்கப் போவதாகவும் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கஸ்தூரி வேக வேகமாகச் சென்று நல்ல ஆடை அலங்காரம் செய்து கொண்டு பாபாவின் முன்னர் வந்து நின்றார்.

 

 

கேமராவுடன் இருந்த பாபா, ஸ்டடி, ரெடி என்று அவரைத் தயாராகுமாறு கூறி க்ளிக் செய்தார். அப்போது திடீரென்று வாலுடனும் முடியுடனும் இருந்த ஒரு சின்ன கறுப்பு உருவம் அவர் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கஸ்தூரி அலறினார். எலியா? வேறு ஏதாவதா? எது தன் மீது பாய்ந்தது?

மெதுவாக பயத்துடன் கீழே விழுந்ததை அவர் ஆராய்ந்த போது அது பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை எலி என்று கண்டார். மிகவும் தந்திரமாக கேமராவுக்குள் அது வைக்கப்பட்டிருந்தது. க்ளிக் செய்தால் பாயும் படியான ஏற்பாடுள்ள கேமரா அது!

 

கஸ்தூரியின் பயத்தைக் கண்டு பாபா சிரித்தார். கஸ்தூரியும் சிரித்தார். அதில் அடங்கி இருந்த செய்தியை கஸ்தூரி உணர்ந்து கொண்டார். சனாதன சாரதியின் ஆசிரியர் பொறுப்பால் அவருக்கு அகங்காரம் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த  விளையாட்டு செய்யப்பட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னால் மிகப் பெரும் பொறுப்பையெல்லாம் பாபா அவரிடம் தந்த போது அவருக்கு அகங்காரமே தோன்றவில்லை. அவர் மீது பாய்ந்த எலி தந்த படிப்பினை அவரிடம் கடைசி மூச்சு வரை இருந்தது.

sathya-sai-padapujya-deva

பாத நமஸ்காரத்தில் ஒரு லீலை!

பாபா நிகழ்த்திய இன்னொரு எளிய விளையாட்டு சுவையான ஒன்று. பிரசாந்தி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறந்த காலம் அது. அடிக்கடி மாணவர்களைப் பார்க்க வந்து விடுவார் பாபா. சுய தேவைப் பூர்த்தி என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர் விடுதியில் பராமரிப்பு, சமையல் போன்ற பல பிரிவுகள் அங்கு உருவாயின. ஒரு புது ஸ்டோரை  உருவாக்கி அங்கு பாபாவை அழைக்கலாம் என மாணவர்கள் திட்டம் போட்டனர். இன்னொரு முறை பாபாவை அருகிலிருந்து தரிசனம் செய்ய அவர்களின் டெக்னிக் திட்டம் அது! அதில் “முக்கிய” மாணவர்கள் ஸ்டோரை நிர்வகிக்கும் சாக்கில் பாபாவின் பாத நமஸ்காரம் பெறவும் தீட்டம் தீட்டப்பட்டது.

 

ஆனால் அவர்களிடம் மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது. பாபா அனுமதி கொடுத்தால் மட்டுமே பாத நமஸ்காரம் பெறலாம்!

 

தங்களுக்குள் அவர்கள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர் : அப்படி அனுமதி தந்தால் சில விநாடிகளுக்குள் அவரை நமஸ்கரித்து எழ வேண்டும். நெடுநேரம் அவர் பாதங்களின் முன் இருந்தால் பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக் கூடும். எச்சரிக்கை! ஓரிரு வினாடிகள் தான் ஒவ்வொருவருக்கும்!

 

பாபாவும் வந்தார். ஸ்டோருக்கும் விஜயம் செய்தார். திரும்பிப் போகையில் கதவருகே சென்று விட்ட அவரிடம் பாத நமஸ்காரம் செய்ய அனுமதி கேட்டனர் மாணவர்கள். ‘சரி’ என்றார் அவர்.

முதல் மாணவன் ஓரிரு விநாடிகளில் பாத நமஸ்காரத்தை முடித்தான். அடுத்தவன் பாதங்களிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அனைவருக்கும் ஆத்திரம், கோபம், அவசரமும் கூட!

fdc-baba

ஒரு ஊழிக் காலம் கடந்தது. மெதுவாக அந்த மாணவன் எழுந்தான். அவன் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீரோ! மூக்கு சிவந்திருந்தது. மற்ற அனைவரும் விரைவில் பாத நமஸ்காரம் செய்ய, பாபாவும் புறப்பட்டார்.

எல்லோரும் இப்போது அந்த மாணவன் பக்கம் திரும்பினர் கோபத்துடன்!

“கோபப்படாதீர்கள்! என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். அவர் பாதங்கள் இரண்டிலும் என் முகம் பட்டவுடன் இரு கால்களுக்கு இடையே என் மூக்கு சிக்கி விட்டது. அவர் அதை விடவே இல்லை. எனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அவரே விட்டார், எழுந்தேன். அதனால் தான் என் மூக்கு சிவந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கோகுலத்தில் அந்த அவதாரத்தில் கோபியருடன் லீலை செய்தது கிருஷ்ணன். இங்கோ பிரசாந்தியில் இளம் சிறுவர்களிடையே ஆனந்த விளையாடலை அருளாகப் புரிந்தவன் சாயி கிருஷ்ணன்.

stamp-baba-project

உள்ளத்தில் நிலையாக என்னை பிரதிஷ்டை செய்

பிரபல விஞ்ஞானியான பகவந்தத்திடம் தங்கத்தையும் கரைக்கும் ராஜ திரவத்தில் சாயி போட்ட தங்க மோதிரம் கரையவில்லை! விநாடியில் நூற்றில் ஒரு பங்கு நடக்கும் எதையும் படம் பிடிக்கும் அதி நவீன கேமாராவின் துணை கொண்டு பிரபல விஞ்ஞானி கார்லிஸ் ஓஸிஸ் சாயி கை அசைவில் எப்படி எந்தக் கணத்தில் செயின், விபூதி  உருவாகிறது என்பதை எடுக்க முடியவில்லை!

 

பாரத் ரத்னாக்கள் ஆனாலும் சரி, விஞ்ஞானிகள் ஆனாலும் சரி, சாமானியரானாலும் சரி, பக்தர்கள் என்ற நிலையில் அவர்களிடம் பகவானின் அணுகுமுறை ஒன்றே தான்; அதுவும் தனித்தன்மை கொண்டது தான்! அருள் விளையாடலே அது! கணம் தோறும் ஆனந்தம் பூரிக்கும் அவர்கள் உள்ளத்தில் நிலையாக நிற்பதே அவரது அவதார நோக்கம்!

 

அவரது ஜயந்தி நாளில் அவரை மனதில் பிரதிஷ்டை செய்து இருத்துவோம்; ஆனந்த அருளைப் பெறுவோம்!

*******************

 

 

Leave a comment

Leave a comment