
Compiled by London swaminathan
Date: 24 November 2015
Post No. 2357
Time uploaded in London :– 9-04 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை 2 (முதல் கதை நேற்று வெளியாகியது)
தர்மராஜ ஜோஸியர், சிப்பாயைப் புலியின் கையில் ஒப்படைத்துவிட்டு அமிர்தபுரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தாசிகள் வசிக்கும் தெரு வழியாகச் செல்லுகையில் ஆங்குள்ள ஒரு பெரிய மாடி வீட்டில் நுழைந்தார். அந்த இடத்தில் வரைந்த படத்தைப் பார்த்து, அதன் கீழே எழுதியிருந்ததை வாசித்தார். “ஜெகம் புகழ், சங்கீத பரத நளின, சரச உல்லாச லீலாவமிர்த பூஷணியாகிய சரசவல்லி என்ற மனோன்மணியிடம் வரப் பிரியப் படுபவர்கள் இரவு ஒன்றுக்கு ரூபாய் இரு நூறு கொடுக்கவேண்டுமென்று கண்டிருக்க இவளையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உள்ளே நுழைந்தார்.
அங்கேயிருந்த தாய்க்கிழவியுடன் சம்பாஷித்து, சம்மதித்த பின்னர் சரசவல்லியிடம் சாதுர்யமாகப் பேசினார். அப்போது கிழவியைக் கூப்பிட்டு, இந்தா அரை ரூபாய், இதற்கு குதிரைக்குப் போட நயமான கொள்ளு வாங்கிவா வென்று அனுப்பினார். அவள் பின்னாலேயே அவளுக்குத் தெரியாமல் சென்றார். அவள் கால் ரூபாய்க்கு கொள்ளு வங்கியதைக் கண்டறிந்தார். சட்டென்று தாசி வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

அன்றிரவு அம்மனோகரியிடம் மனம்போனபடி சுகானுபவங்களை அனுபவித்துவிட்டு, இரவு இரண்டு மணிக்கு குதிரை லாயத்துக்கு வந்து, குதிரை லத்திகளைக் கையிலெடுத்து ஆயிரம் ரூபாய் நாணயங்களை அதனுள்ளே திணித்தார். பின்னர் படுக்கச் சென்றார். விடிந்ததும் காப்பி சாப்பிட்டுவிட்டு கிழவியை அழைத்தார். அவளை ஒரு பெரிய அண்டாவைக் கொண்டுவரச் செய்து, அதில் குதிரை லத்திகளைப் போட்டு தண்ணீர்விட்டுக் கலக்கினார். அப்போது கிழவிக்கு முன், ஆயிரம் ரூபாய் நாணயங்களையும் எடுத்து வைத்தார் அதைக் கண்ட தாசி சரசவல்லி, குதிரை லத்தியில் ஆயிரம் ரூபாய் நாணயங்கள் எப்படி வந்தன என்று வியப்புடன் கேட்டாள்.
ஜோஸியர்: ஏ கிழவி! நீ கால் ரூபாய்க்குத் தானே கொள்ளு வாங்கினாய்?
கிழவி: இல்லை, சாமி. தாங்கள் கொடுத்த அரை ரூபாய்க்கு வாங்கினேன்.
ஜோஸியர்: ஏ, துஷ்டி! பொய் சொல்லாதே. அரை ரூபாய்க்கு கொள்ளு வாங்கியிருந்தால் 2000 ரூபாய் கிடைத்திருக்குமே, பொய் சொல்லாமற் சொல் என்றார். கிழவியும் உண்மையை ஒப்புக்கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்த தாசிக்கு குதிரையை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை எழுந்தது.
சரசவல்லி: என் பிராண நாதரல்லவா நீங்கள்! அந்தக் குதிரை என் வீட்டிலேயே இருக்கட்டும்.நான் 16,000 ரூபாய் தருகிறேன் என்றாள்.
ஜோஸியர்: இந்தா சரசம்! அதெல்லாம் சொல்லாதே. இந்தக் குதிரையை நான் சம்பாதிக்க பட்டபாடு பகீரதப் பிரயத்தனமென்பது போல் நிரம்பக் கஷ்டப்பட்டுக் கிடைத்தது. அதையன்றி வேறு சமாச்சாரம் பேசு, இன்னும் ஐநூறு வேண்டுமேனாலும் நான் உனக்குத் தருவேன் என்றான். ஆசை யாரை விட்டது? வெகுநேரம் தர்க்கமாடிப் பிறகு 20,000 ரூபாய் பெறுமான நகைகளையும், ரொக்கம் 16000 ரூபாயையும் பெற்றுக் கொண்டு குதிரையைக் கொடுத்துவிட்டு ஜோசியர் கம்பிநீட்டினார்.

அப்படிப் போகையில் ஒரு ஊரில் ருது சாந்திமுகூர்த்தம் – அதாவது ருதுவான பெண்ணுக்குச் சாந்தி செய்யக் கூட்டம் கூடியிருந்தது. இந்த தர்மராஜ ஜோசியரும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போஜனம் முதலானவற்றைச் செய்துமுடித்தார். கலியாண மாப்பிள்ளையை தனியாக அழைத்து வேடிக்கையாகப் பேசி கையில் கஞ்சா லேகியத்தைக் கொடுத்தார். இது ஒரு சஞ்சீவி மருந்து சாப்பிட்டால் நல்ல சுகம் கிடைக்குமென்று சொல்ல மாப்பிள்ளையும் அதை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜோசியர் அவனுடைய புது வஸ்திரங்களைப் போட்டுக்கொண்டு, கலியாண வீட்டுக்குப் போய்நி ற்க, ஒருவர் அவரை “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்றழைக்க இவர் என்ன கூப்பிட்டீர்களா? என்று முன்னால் சென்றார். முகூர்த்த லக்னம் தவறிவிடப் போகிறதேயென்று கவலைப்பட்ட புரோகிதர் ஜோசியரை மாப்பிள்ளை என்று நம்பி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து இருவரையும் சயன கிருகத்துக்கு (படுக்கை அறை) அனுப்பிவைத்தார். ஜோசியர் காலையில் எழுந்து புதுமணப்பெண்ணை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தார்.
சில நாட்கள் சென்றதும், ஜோசியரிடம் ஆட்டை விலைகொடுத்து வாங்கிய பிராமணனும், குதிரை வாங்கிய தாசியும், கஞ்சா லேகியம் சாப்பிட்ட மாப்பிள்ளையும் ஜோசியரைத் தேடி வந்தார்கள். அபோழுது ஜோசியர், போஜனம் முடிந்து வெற்றிலைச் செல்லத்துடன் திண்ணையில் வந்து அமர்ந்தார். அவகளைப் பார்த்து, எப்படி இங்கே வெகு தூரம் வந்தீர்கள்? சாப்பாடு ஆகிவிட்டதா? இல்லாவிட்டால் ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே பசிக் களைப்பு தெரிகிறது என்றார். இதெல்லாம் பசப்பு வார்த்தைகள் என்று அறிந்து, சாப்பிடச் செல்வதாக வெளியே வந்தனர். மறைவாக நின்றுகொண்டு, ஜோதிடர் வெளியே வரும்போது, அவரைப் பிடித்து ஒரு சாக்கில் போட்டுக் கட்டினர். ஜோதிடர் இருந்த சாக்குப் பையை மலையிலிருந்து உருட்டிவிட ஏற்பாடு செய்தனர்.
ஒரு வேலைக்காரன், ஜோதிடர் அடைக்கப்பட்ட மூட்டையை தலைமேல் சுமந்து சென்றான். அவனுக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்பதால், மூட்டையைக் கிழே வைத்துவிட்டு வயல் வரப்புக்குச் சென்றான். ஜோதிடர் யாரோ நடந்து வரும் காலடிச் சப்தம் கேட்டு, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்”, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்” என்று கத்திக் கொண்டேயிருந்தார். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறத்தான், அந்த மூட்டையை அவிழ்த்துவிட்டு என்ன செய்தி? என்று கேட்டான்.
அப்பா! எனக்கு ஒரு அழகிய ராஜா மகளைக் கலியாணம் செய்துவைத்து ராஜாவாகப் பட்டபிஷேகம் செய்ய வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். நான் வேண்டாமென்கிறேன் என்றார். அதைக் கேட்ட நாட்டுப்புறத்தான, ஐயா, கவலைப்படாதீர்கள் என்னை மூட்டையில் வைத்துக் கட்டுங்கள். நான் போகிறேன் என்றான். உடனே ஜோஸியர், அவனை சாக்குப் பையில் கட்டிவைத்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் மறைவாக நின்று வேடிக்கை பார்த்தார். சிறுநீர் கழித்துவிட்டுக் கைகால் கழுவிய வேலைக்கரன் அந்த மூட்டையைச் சுமந்து சென்றதைப் பார்த்தபின்னர் நிம்மதியாக வீடுபோய்ச் சேர்ந்து சுகமாக வாழ்ந்தார்.
–சுபம்–
You must be logged in to post a comment.