ஆவிகள் மூலம் அற்புத இசை! Post No. 2371

pepito2

 

Written  by S NAGARAJAN

Date: 8 December 2015

Post No. 2371

 

Time uploaded in London :– 5-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் நவம்பர் 27,2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியானது.

ஆவிகள் மூலம் அற்புத இசை வழங்கிய இசை மீடியம்கள்!

 

.நாகராஜன்

இருபதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் ஆவி உலக ஆராய்ச்சி உச்ச கட்டத்தை அடைந்தது.விஞ்ஞானிகள் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் சென்று மீடியம் என்று அழைக்கப்படும் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்வோரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

 

பல மீடியம்கள் மோசடிப் பேர்வழிகள் என்பதை அவர்கள் நிரூபித்தனர். பல கேஸ்களில் நடந்த நிகழ்வுகளுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திகைத்தனர்;

இந்த மீடியம்களில் இசைத்துறை விற்பன்னர்களாக இருந்த சில ஆவிகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

 

 

உணர்வுடன் தன் இயல்பில் இருக்கும் போது அவர்களால் பாட முடியவில்லை. ஆனால் ஆவி உலகத் தொடர்பால் ஆவிகளுடன் தொடர்பு கிடைத்த போது பிரமிக்க வைக்கும் இசை மேதைகளாக அந்த நிலையில்  மட்டும் அவர்கள் மாறினர்!

1900 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. பெபிடோ அரியோலா (Pepito Ariola) என்ற ஸ்பெய்ன் தேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் இண்டர்நேஷனல் சைக்கிகல் காங்கிரஸில் பேராசிரியர் ரிச்சட் (Professor Richet) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டான். அவர் பாரிஸில் பிஸியோலோஜி துறையில் பேராசிரியராக இருந்தார்.

குழந்தை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதாவது இரண்டரை வயதில் பியானோவை இசைக்க ஆரம்பித்தது. தன் பிஞ்சு விரல்களால் எப்படியோ பியானோவில் உயர்ந்த ரக இசையைத் தந்தது. பியானோவை இசைக்கும் போது மட்டும் அதன் விரல்கள் வளர்ந்தது போல இருந்தது. இல்லாவிட்டால் எப்படி அந்தக் குட்டி விரல்கள் அப்படிப்பட்ட இசையை அள்ளித் தர முடியும்! ஒவ்வொன்றும் மணி மணியான இசைப் பாடல்!

 

நமது திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தோடுடைய செவியன் எனப் பாட ஆரம்பித்து பல்லாயிரம் பாடல்களைத் திருநெறிய தமிழாகத் தந்ததை இங்கு நினைவு கூரலாம்.

 

ப்ளைண்ட் டாம் என்னும் நான்கு வயதுக் குழந்தை சவுத் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ குழந்தை. அந்தக் குழந்தையை முட்டாள் என்றே சொல்லி விடலாம்; ஒன்றுமே அதற்குத் தெரியாது. ஆனால் பியானோவில் வெள்ளை மற்றும் கறுப்பு ‘கீ’களை இரண்டு கைகளாலும் அமுக்கி இசையைத் தர ஆரம்பித்து விட்டால் அது தேவ கானமாக இருக்கும், தனது ஐந்தாம் வயதில், அவன் ‘ரெய்ன் ஸ்டார்ம்’ (Rainstorm) என்ற இசையைக் ‘கம்போஸ்’ செய்து பியானாவோல் இசைக்க ஆரம்பித்தான். இதை மழையும் காற்றும் இடியும் தன்னிடம் சொன்னதாக அவன் கூறினான்.

 

ஒரே சமயத்தில் இரண்டு டியூன்களை அவனால் பியானோவில் இசைக்க முடிந்தது. ஒரு கையால் ஒரு டியூனும் இன்னொரு கையால் இன்னொரு டியூனையும் அவன் இசைத்துக் காட்டி வாயால் இன்னொரு பாடலைப் பாடி அனைவரையும் அசத்தினான். அரங்கத்தில் குழுமி இருந்தோரில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க அதற்கேற்றபடி டியூனை அவன் வாசித்துக் காட்டினான்.

 

பிரான்ஸை சேர்ந்த மீடியம் ஒருவரின் பெயர் ஜார்ஜ் ஆல்பர்ட்.. இவருக்கும் இசைத்துறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஆவி உலகில் இருக்கும் அற்புதமான இசை மேதைகளால் பியானோவை வாசிப்பதாகக் கூறி பியானோவை வாசித்துக் காட்டினார். 1906ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜெனரல் சைக்கோலொஜிக்யூ’ என்ற நிறுவனம் இவரை ஆராய முன் வந்தது.

 

 

அவர் சுய உணர்வுடன் தன் திறமை மூலமாக பியானோவை வாசிக்க இயலாதபடி பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வை நடத்தியவர்கள் மொஜார்ட் சொனாடாவை இசைக்கும் படி வேண்டினர். அவர் கண்களைக் கட்டினர். இரண்டு கிராமபோன்கள் ஒரே சமயத்தில் இசைக்க, அதிலிருந்து டியூபுகள் அவர் காதில் செருகப்பட்டன. அவரோ மொஜார்ட் இசையை கச்சிதமாக அப்படியே வாசித்து அவர்களை பிரமிக்க வைத்தார்.

 

இன்னொரு சோதனையில் அவரிடம் தரப்பட்ட ஒரு பெரிய தத்துவ நூலை அவர் மெதுவாகப் படித்துக் கொண்டே பியானோவை இசைத்துக் கொண்டிருந்தார்! அவரிடம் வந்த ஆவி உலக இசை மேதைகள் : பீத்தோவன், பெர்லியாஸ், மெண்டெல்ஷான், மொஜார்ட், சோபின், ஷுமன், லிஸ்ஜ்ட், வேக்னர் உள்ளிட்ட பல இசை மேதைகள்!

 

அவரது சுய கல்பனைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்ஸ்டிடியூட்டால் ரிகார்ட் செய்யப்பட்ட அவரது இசை தொலைந்து போய் விட்டது. 1920ஆம் ஆண்டு பாரிஸில் லா மெடிமின்டே ஸ்ப்ரிட் என்ற இடத்தில் ஒரு நிகழ்வில் தனது ஆவி உலகத்துடனான தொடர்பையும் எப்படி இசைமேதைகள் தன்னுள் ‘பிரவேசித்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 

1903 ஆம் ஆண்டு டீ பாயொன் என்ற பிரான்ஸ் தேசத்து இசை மீடியத்தை லண்டனில் கவுண்ட் ஹாம்மன் என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் விக்டோரியா காலத்து சிறப்பு இசையான சர்டோ உள்ளிட்ட இசையை அவர் பிரமாதமாக வழங்கினார். தான் என்ன இசைத்தோம் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவரது விரல்கள் விளையாடும்! ஒரு தரம் இசைத்ததை மறு தரம் அவரால் இசைக்க முடியாது!

 

இப்படிப் பலரும் ஆவிகளின் உதவியால் ‘இசை மேதைகளாக’ மாறியதைத் துல்லியமாக ஆய்வேடுகள் விளக்குகின்றன. சிலரைப் பொய் என்று விஞ்ஞானிகள் நிரூபித்த போதும் மேலே கூறப்பட்ட பல இசை மீடியம்களை விஞ்ஞானிகள் வியப்புடன் தான் பார்க்க முடிந்தது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

விண்வெளியில் பறந்த விண்வெளி வீரர்களின் மீது பல விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 1992இல் கெல்லி மற்றும் கனஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வில் 54 விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். இவர்கள் அனைவருமே விண்வெளியில் பறந்தது பரவசமான ஒரு அனுபவம் என்று கூறினர். விண்வெளியில் பறந்த அனுபவம் தகவல் தொடர்பில் மிகப் பெரும் முன்னேற்றத்தைத் தங்கள் வாழ்க்கையில் தந்ததாகவும் அவர்கள் கூறினர். 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தால் தாங்கள் சிறந்த ஆன்மீகவாதிகளாக ஆகி விட்டதாகத் தெரிவித்தனர். அத்தோடு நாடு மொழி என்ற குறுகிய எல்லையை விட்டு உலகளாவிய அளவில் எதையும் நோக்கும் பிரபஞ்ச பார்வை தங்களுக்கு வந்து விட்டதாகக் கூறினர்.

 

இன்னொரு ஆய்வு உளவியல் மற்றும் நடத்தை ரீதியாக நடத்தப்பட்டது. இதில் நடத்தையில் 34 விதமான மாற்றங்கள் விண்வெளி வீரர்களிடம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மனச் சோர்வு, விரக்தி, ஞாபக மறதி,  உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் இந்த 34 மாற்றங்களில் அடங்கும். இவர்கள் அனைவருக்குமே பொதுவாக இருந்த ஒரு மாற்றம் அட்ஜஸ்ட்மெண்ட் டிஸ்ஆர்டர் என்பதாகும். நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டதால் நேரம், நாள், பேச்சு, நினைவு உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வது பெரிய காரியமாகி விட்டது என்பது இவர்களின் அனுபவம்!

 

 

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தீர்க்கமான ஆய்வை நடத்திய பின்னரே விண்வெளியில் இன்றைய வெற்றியை விஞ்ஞானம் கண்டுள்ளது!

**************

 

Leave a comment

Leave a comment