
Compiled by London swaminathan
Date: 28 December 2015
Post No. 2434
Time uploaded in London :– 5–34 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; கொடுத்துதவியவர்: சென்னை எஸ். சீனிவாசன்
எங்கள் பக்கத்து வீட்டில் வெங்கடசுப்பி என்றொரு பெண் புருடன்கூடி இல்லறம் நடத்தி வந்தாள். புருடன் மண்டூதரன். மனைவிக்குப் பயந்த மரியாதை ராமன். பெண்சாதியோ “மூக்குப் பிடிக்க யாரடா சோற்றின் மறைவிலே! என்றால் நான் தான் நோயாளி பத்தியம் பண்ணுகிறேன்” என்றவனையும் ஜெயிக்கப்பட்ட பேர்வழி. பண்டுபலாதிகளை வேண்டியமட்டும் தண்டிக்கொள்பவளும் “உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு” என்ற வாக்கியத்தை அபத்தம் செய்யக்கூடியவளுமாகையால் சதாகாலமும் மொக்குவதிலேயே முழுப் ப்ரீதி
ஒருநாள் சுங்கிடிசேலையுடுத்தும் வெங்கடசுப்பம்மாளுக்கு வயிர்வீங்கத் தின்று தெறிக்க எண்ணமுண்டாச்சுது. ஆகையால் ஏழையாகிய தன் கணவனை நோக்கி, “நாளைய தினம் புரட்டாசி சனிக்கிழமை, மலையப்பனுக்கு, அதாவது வெங்கடாசலபதிக்கு சமாராதனை செய்ய வேண்டும். சென்ற வருஷத்தைக்காட்டிலும் இவ்வருஷம் திறமாயிருக்கவேண்டும்” என்றாள். அதற்குக் கணவன், “அடியே! கையிலொரு காசுமில்லை; கடன் கொடுப்பாருமிலை. ஆகையாலினி வருஷத்துக்கு நான்கு புரட்டாசி சனிக்கிழமைகளையும் விட்டுவிட எண்ணியிருக்கிறேன்” என்றான்.
மனைவியோ எப்போதும் திண்டிப்போத்தாதலால் ஆவேசம் வந்தவள் போல் நடித்து உதட்டை மடித்துக் கண்விழி பிதுங்குமாறு உற்றுநோக்கி, “ அட பயலே! என்னை யாரென்று நினைத்தாய்? நான் தான் மலையப்பன். வருடா வருடம் செய்துவந்ததை மறந்து இவ்வருடம் அபராதம் செய்யாதே”- என்றாள். கண்வன் மனைவியின் சூழ்ச்சியை நிஜமென நம்பி, “அம்மா, தாயே! அடியேனைக் காவாய்” என்று பயந்து வேண்டிக்கொண்டு வீட்டிலுள்ள தட்டுமுட்டு சாமான்களை அடகுவைத்துச் சம்பிரமமாய் மலையப்பனுக்கு பூஜை நடந்தேறியது. அங்கு வந்திருந்த பேர்க்குக் கொஞ்சம் போட்டுவிட்டு மனைவியாள் தன் குக்ஷி நிறைய பக்ஷித்துவிட்டு மீதியை அடுக்குப் பானையிலிட்டாள். அடுத்த சனிக்கிழமையன்று கணவன் கையில் பணமில்லாததால், இந்தச் சனிக்கிழமை பூஜையை கணவன் விட்டுவிடுவானோ என்று எண்ணி, ஆ, ஊ, என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அடுத்தவீட்டு ஆம்பிளை, இவள் கொட்டத்தை அடக்க வேண்டுமென்று எண்ணி, அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கணவன், மனைவியின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு, “ஸ்வாமி! நான் அபராதம் செய்யவில்லை. மலையேற வேண்டும்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். அடுத்தவீட்டுக்காரர் ஆவேசம் வந்தாற்போல தலையை விரித்துக்கொண்டு, “தாட் பூட், தெற்காலே வடக்காலே என்று ஆர்ப்பரித்து நின்றான். புருடன் பயந்துபோய் “நீங்கள் யார்?” என்றான்.
“என் பேர் அலர்மேல் மங்கை. பொழுதுவிடிந்தால் என் புருஷன் மலையப்பன் உன் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அழைத்துப்போக வந்தேன்”என்று அடுத்த வீட்டுக்காரர் சொன்னார். அத்தோடு மனைவியைப் பரபரவென அடுத்தவீட்டுக்கு இழுத்துப் போய் அவள் கொட்டமடங்குமட்டும் நையப் புடைத்தனுப்பினான். அந்த அம்மாளுக்கு நாக்கு நீளமென ஏற்கனவே சொல்லியிருப்பதால் மற்றொரு சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள். புருஷனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.
“சுவாமீ! மரியாதையாய் மலையேறுகிறீரா? இல்லாவிட்டால் அடுத்தவீட்டு அலர்மேல் மங்கையைக் கூப்பிடட்டுமா?” என்றான். உடனே அவள், “வேண்டாம், வேண்டாம். நானே போய் விடுகிறேன்” என்று அன்றுமுதல் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டாள்.
–சுபம்–
You must be logged in to post a comment.