கொள்கை என்ன என்று கேட்ட கோமாளிகள்! (Post No. 2622)

circus2

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 12 March 2016

 

Post No. 2622

 

Time uploaded in London :–  6-14 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நையாண்டி மடல் எண் 4

 

 

கொள்கை என்ன என்று கேட்ட கோமாளிகள்!

.நாகராஜன்

 circus 8

என் இனிய முட்டாள்களே!

நியாயமாக CUTTING  பற்றித் தான் இந்த மடலை உனக்கு வரைய வேண்டுமென்று விரும்பியிருந்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டியது; சிரிக்கவும் வைத்தது!

நமது முட்டாள்கள் கழகத்தைச் சேர்ந்த தீவிரத் தொண்டர்கள் மூன்று பேர் என்னை நோக்கி நமது கழகக் கொள்கைகள் என்ன என்று கேட்டு விட்டனர். கேள்விகளா? என்னிடமா? விழிகள் சிவக்கும் முன்னர் அவர்கள் இருந்த இடத்தின் போர்டு என்னைக் கவர்ந்தது.சிரித்தேன். சிலிர்த்தேன்

 

அது டாஸ்மாக் கடை! அங்கு வேறு என்ன தான் முட்டாள்களால் கேட்க முடியும்?!

சுருக்கமாக, நமது கொள்கை என்னெவென்றால் நமக்குக் கொள்கையே கிடையாது என்பது தான். மாறி வரும் உலகில், கொள்கை ஒன்றை நிரந்தரமாகக் கொள்வது பகுத்தறிவுக்கு உகந்ததா? ஒத்ததா? நீயே சிந்தி! சீரிய முடிவை எடு.

 

இருந்தாலும் கேட்பவர்க்கு என்ன பதில் சொல்வது என்று சில முட்டாள்கள் கேட்கலாம். அதற்காகவே இந்த மடல்.

மதுரை! சங்கம் வளர்த்த மதுரை!! தமிழ் வளர்த்த மதுரை!!! ஆறு கடந்தன்ன அகல் நெடும் தெருக்கள் இருந்த மதுரை! ஐயகோ! இன்று அங்கு அனுப்பானடி சாக்கடை ஒன்று மட்டுமே அகன்று இருக்கிறது!

இந்த இழிநிலை மாற வேண்டாமா? சாக்கடைகள் சடுதியில் மறைய வேண்டாமா?

 

 

ஆகவே கொண்டேன் கோபம்! கண்டேன் விடையை!! ‘மதுரையைத் துறைமுகமாக்கு’ என்ற கொள்கை முழக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

இது என்ன கிறுக்குத் தனமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் வடவர்கள் என்று புரிந்து கொள்! நாம் வாழ்வதை விரும்பாத மடையர்கள் என்று தெரிந்து கொள்!

மதுரையைத் துறைமுகமாக்க கழகப் பொறியாளர்கள் விரிவான திட்டம் பல வைத்திருக்கின்றனர். அருகிலிருக்கும் கடலில் இருந்து ஒரு கால்வாயை வெட்டு; அதில் கடல் நீரைக் கொட்டு; பாராட்டாக, உன் முதுகில் ஒரு சொட்டு!

 

 

கால்வாய் அமைக்கிறேன் என்பதில் எனக்கு எவ்வளவு காசு பெயரும் தெரியுமா? அதில் உங்களது – கழகக் கண்மணிகளின் பங்கு பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஆண்டுகள் பல கழிந்தாலும் அமைக்க முடியாத திட்டம் என்று கோமாளிகள் கொக்கரித்தால் பதில் இதோ:- கடற்கரை அருகே உள்ள ஏதேனும் ஒரு நகரம் ஒன்றுக்கு மதுரை என்று பெயர் சூட்டி விட்டால் போயிற்று!

 

 

ஆக அடுத்த கொள்கை அமேஸான் நதியையும் அழகர் கோவில் ஆகாச கங்கையையும் இணை என்பது தான்!

ஆகாச கங்கை மறைந்தல்லவா உள்ளது என்று கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்! அதைக் கண்டுபிடி; பிறகு அமேஸானை இணை என்கிறோம் நாம்,!

 

circus usa

அமேஸானை சந்திரனுக்கு குழாய் மூலம் அனுப்பி அதை அழகர்கோவிலுடன் இணைக்க பத்து லட்சம் கோடி அளவில் நமது திட்டம் தயார்!

சுரண்டல் திட்டம் என்கிறார்களா, சுயநலமிகள்? அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அறிவேன் நான். சந்திரனிலிருந்து நாம் உழைத்துக் கொண்டு வரும் நீருக்குச் சந்திர தீர்த்தம் என்று பெயர் வைக்கத் தீர்மானிக்கிறார்கள் கொடூர சாணக்கியர்கள்.

 

 

அதை மதி நீர் என்றே அழைப்போம் என்பதை அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன்.

அன்பர்களே! நண்பர்களே!! ‘கொண்டையிலே ரோஜாப்பூ, கூடையிலே தாழம்பூ; தாழம்பூவில் பாம்பூ’ என்ற அரிய தமிழ் படத்திற்கு நான் திரைக்கதை, பாடல், வசனம் எழுதியது உங்களுக்கே தெரியும். அது நமது தியேட்டரில் நூறு நாட்கள் ஓடுகிறது. ஆனால் குல்லுக பட்டர்கள் மற்ற அனைத்து தியேட்டர்களிலும் இதை ஒரே காட்சியுடன் நிறுத்தி விட்டனர்.

 

 

அவர்களுக்கு ஒன்று சொல்வேன்; அதுவும் நன்று சொல்வேன். அமெரிக்க ஆலிவுட்டிலிருந்து வந்த ஆங்கிலேய திரைக்கதை வசனகர்த்தா ஆர்னால்ட் எப்படி அரிய தமிழில் இப்படி ஒரு டைட்டிலை டைட்டாக வைத்தீர்கள் என்று கேட்டு வியந்தார்.

அதற்கு என் பதில் என்ன தெரியுமா? ஒரு புன்சிரிப்பூ!

ஆனால் இதில் நான் எழுதிய அரிய தமிழ்ப் பாடல்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்!

 

 

வஞ்சியின் நெஞ்சமே! கொஞ்சமாய் கொஞ்சுமே! – இனி

உன் மடி மஞ்சமே! நான் தஞ்சமே!!

ஙொய்யாலோ! கொய்யாலோ! டிகி டிகிப்பி டிங்காலோ

 

என்ற இந்த இலக்கணத்துடன் கூடிய பாடலுக்கு தமிழ் அறிஞர்களும் முனைவர்களும் எப்படி கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்; இதன் சிறப்பான பொருள் என்ன என்பது பற்றிச் சந்துக்குச் சந்து சிந்து பாடி பட்டி மன்றம் அமைத்துக் கொண்டாடி வருவதை நீங்களே அறிவீர்கள்.

 

ஒரு கழக முட்டாள் இதைத் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருப்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டு விட்டது என்றே கொள்ளலாம்; (இல்லாவிடில் என்ன நடக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை)

 

முனைவர்களைப் பற்றி மட்டுமே ஒரு தமிழ் மடல் எழுத என் கை துடிக்கிறது! அதையும் விரைவில் எழுதி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்!

 

circus 1

உலக ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி துரோகிகளின் தூண்டுதலின் பேரில் என்னைப் பேட்டி காண வந்தது – இந்தப் படம் விஷயமாக!

அவர்களை வரவேற்றேன். அவர்களுக்கு வாகை மலர் சூடினேன். பேப்பரையும் கொடுத்தேன். என்ன இது என்றனர். நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் என்றேன்.மயங்கி விழுந்தனர் மாபெரும் பேட்டியாளர்கள்!

 

 

இப்படி நாங்கள் பார்த்ததே இல்லையே, நாங்கள் அல்லவா கேள்விகளைத் தயாரிக்க வேண்டும் என்று அவர்கள் திகைக்க இந்தக் கேள்விகளுக்கு துணைக் கேள்விகள் மட்டும் நீங்கள் கேட்கலாம்; ஆனால் நான் அதற்கு பதில் கூற மாட்டேன் என்றேன்.

அவர்கள் போன இடம் தெரியவில்லை; இனி வரமாட்டார்கள் என்பது என் கணிப்பூ! இவர்கள் நம்மைப் பற்றி ஆய்வு செய்து வருபவர்கள்! அது எனக்குத் தெரியாதா, அவர்களை என்னால் முறிக்க முடியாதா, என்ன?!

 

அடுத்த மடலில் கட்டிங் பற்றிச் சொல்ல விழைவேன். தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் வழக்கம் போல உரிய கட்டிங்கை கொடுத்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நண்பர்களையும் அன்பர்களையும் இப்படி நிறையக் கொடுக்க ஊக்குவியுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்

 

–subham-

Leave a comment

Leave a comment