
Compiled by london swaminathan
Date: 19 March 2016
Post No. 2646
Time uploaded in London :– 15-14
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நஜருதீன் என்ற மன்னன் டில்லியை ஆண்டு வந்தபொழுது பிரயாகை (இப்பொழுது அதன் பெயர் அலஹாபாத்) அருகிலுள்ள அர்கால் என்னும் பிரதேசத்தை கௌதமன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் டில்லி அரசனுக்குக் கப்பம் கட்ட மறுத்தான். உடனே நஜருதீன், தன் கீழிருந்த டில்லி கவர்னர் தலைமையில் பெரும்படையை அனுப்பினான். ஆனால், கௌதமன் அவர்களைக் கொன்று குவித்தான். டில்லி கவர்னர் படை தோற்றோடியது.
கௌதமனின் முன்னோர்களும் மாவீரர்கள்; தோல்வியே கண்டறியாதவர்கள். ஆகையால் குல வழக்கப்படி வெற்றி விருந்து நடத்தினான். நகர மக்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து கொண்டாடினர். அன்றைய தினம் பௌர்ணமி. முழு நிலவு ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது.
அர்கால் மஹாராணி, அதவது கௌதமனின் மனைவி, ஒரு மஹா பதிவிரதை; தெய்வ பக்தி மிகுந்தவள்; முன்னோர்கள் பின்பற்றிய பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடிப்பவள்; சத்திய விரதை; உண்மை விளம்பி. வழக்கம்போல கங்கையில் புனித நீராடி விரதம் அனுஷ்டிக்க எண்ணினாள். ஆனால் கணவனிடம் அனுமதி கேட்டால், போகாதே என்பான். ஏனெனில் இன்னும் எதிரிப்படைகள் கங்கையின் மறு புறத்தில் நிலைகொண்டிருந்தன. மேலும் டில்லியிலிருந்து மேலும் படைகளைப் பெற்று டில்லி கவர்னர் தாக்கக்கூடும். கணவன் சொல்லையும் மீறி எந்தச் செயலையும் செய்யும் பழக்கமும் அவளுக்குக் கிடையாது. ஆகையால் அர்கால் மஹாராணி வேறொரு திட்டம் போட்டாள். தோழிகளுடன், நைஸாக நழுவி, கங்கைக்குப் போய் புனித ஸ்நானம் செய்து, கணவன் நலனுக்கும், நாட்டு மக்கள் நலனுக்கும் விரதம் இருக்க எண்ணினாள்.

ஒவ்வொரு தோழியும் சந்தடி செய்யமல் விருந்திலிருந்து நழுவி மஹாராணியுடன் கங்கை நதிக்கு வந்தனர். ஒரு ராணி குளிப்பதானால் ரஹசியமாகவா குளிக்கமுடியும்? ராணிக்கே உரிய பரிவாரங்களுடன் ஆரவாரத்துடன் குளித்தாள். இதற்குள் டில்லி கவர்னரின் காதுக்கு இந்தச் செய்தி போய்விட்டது. அவன் தனது மகளை அனுப்பி உளவு விவரங்களச் சேகரித்தான். உண்மை தெரிந்தவுடன் ராணியைப் பிடித்து பணயம் வைத்து பேரம் பேசலாம், கௌதமனை மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, படைகளுடன் வந்தான்.
மஹாராணி, இதற்குள் குதிரை மீது புறப்பட்டாள். அவளை விரட்டி வந்த, டில்லிப் படையினர் அவளைச் சுற்றி வளைத்தனர். அவள் தோழிகளின் நடுவே நின்று கவர்னரை நோக்கிக் கூறினாள், “ சீச்சீ! நீ ஒரு ஆண் மகனா அல்லது பேடியா? என் கணவனிடம் தோற்றோடிவிட்டு, தனிமையில் நிற்கும் ஒரு பெண்ணைப் பிடிக்கிறாயே, இதுதான் உன் வீரமா? நான் ரஜபுத்ர குலத்தில் உதித்தவள்; என் கணவனும் ரஜபுத்ர வீரன். இங்கே கூடியிருக்கும் மக்களில், யாரேனும் ரஜபுத்ரர்கள் இருந்தால், உங்கள் சகோதரியாகிய என்னைக் காப்பாற்றுங்கள்”.
இதைக் கேட்டவுடன் அங்கேயிருந்த இந்துக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களில் நிர்பயசந்தன், உபயசந்தன் என்ற இரண்டு வீரர்கள் முன்னுக்கு வந்து தாக்குதலுக்குத் தலைமை வகித்தனர். பெரும் சண்டை நடந்தது. இரு படைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதற்குள் கௌதமனுக்கும் தகவல் போனது. அவன் பொறுக்கியெடுத்த சில வீரர்களுடன் குதிரையில் விரைந்து வந்து முஸ்லீம் படைகளை ஓட ஓட விரட்டினான்.
மன்னன் கௌதமனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உபயசந்தன், மன்னர் குலத்தில் பிறக்காவிடினும், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்வித்து, ராவ் (ராய= ராஜ) என்ற பட்டத்தைக் கொடுத்தான். ராஜஸ்தான் கிராம மக்கள் இன்றும் இந்த வீர,தீரச் செயல்களைக் கிராமீயப் பாடல்களாகப் பாடி ஆனந்தக் களிப்பு அடைகின்றனர். நிர்பயன், உபயன் ஆகிய இவ்விருவரின் புகழ் ஒரு புறம் பரவியது.மறு புறமோ பெண்ணிடம் ‘வீரம்’ காட்டிய டில்லி மன்னன், டில்லி கவர்னர் ஆகியோரின் இழிசெயல் தூற்றப்பட்டது.
புராதன இந்தியர்களின் சரித்திரம் ஒரு வீர காவியம்!
தீரத்திலே படை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு
தருவதிலே உயர்நாடு – இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு – (மஹாகவி சுப்ரமண்ய பாரதி)

–சுபம்-
You must be logged in to post a comment.