
Compiled by london swaminathan
Date: 3 April, 2016
Post No. 2691
Time uploaded in London :– 16-20
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

ஆதி காலத்தில் தமயந்தியும் நளனும் அன்னப் பறவை மூலம் செய்தி பரிமாறிக்கொண்டார்கள். இதே போல புறாக்கள் மூலமும் செய்திப் பரிவர்த்தனை நடந்தது. இப்பொழுதும்கூட பூகம்பம், பெரு வெள்ளம் ஏற்பட்டுச் செய்தித் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் புறாக்கள் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. உலக மகா யுத்தங்களின் போது புறாக்கள் மூலம் சங்கேத மொழியில் ரஹசியங்களைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் லண்டனில் சென்ற வாரம், வேறு ஒரு புதிய பணியில் புறாக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நகரங்களில் மிக மோசமான அசுத்தக் காற்றுடைய நகரம் லண்டன்தான். இதனால் 120 நிலையங்களை அமைத்து நவீன கருவிகளைக் கொண்டு அவ்வப்பொழுது காற்றின் தூய்மையை கணக்கிடுகின்றனர். ஆயினும் இந்த நிலையங்கள் அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதால், இவைகளின் வீச்சுக்குள் வராத பல பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்குள்ள காற்றின் சுத்தம் பற்றி அறிய ஒரு கம்பெனி ஒரு புது யோசனையைத் தெரிவித்தது.

அமெரிக்காவில் யுடா பகுதி மலைகளில் சுற்றுலாச் சென்று வருவோரை புகைப்படமெடுக்க, பயிற்றுவிக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப் படுகின்றன. மலைகளில் ‘வாக்கிங்’ முடித்துவிட்டுத் திரும்புவதற்குள் நம்மை வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கும் புறாக்கள், அவைகளை தரை நிலயத்துக்கு அனுப்பும். அதை அங்குள்ளோர் நாம் திரும்பிவந்தவுடன் புகைப்படமாகக் கொடுப்பர். இதே யோசனையை லண்டனில் பயன்படுத்த ஒரு கம்பெனி முன்வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் பத்து பந்தயப் புறாக்களின் முதுகில் 35 கிராம் மட்டுமே எடையுடைய கருவிகளைப் பொருத்தி பறக்கவிட்டனர். மூன்று நாட்களுக்குப் பறக்கும் இந்த புறாக்கள் கற்றிலுள்ள நைட்ரஜன் ஆக்ஸைட், ஓசோன் அளவுகளைப் பதிவு செய்யும். யார் ‘ட்வீட்” செய்தாலும் அந்த பகுதியிலுள்ள காற்றின் சுத்தத்தை உடனே ட்வீட் செய்துவிடும்.
பந்தயப் புறாக்கள், சாதாரணப் புறாக்கள் அல்ல. தெருக்களில் நாம் காணும் புறாக்கள் நாலு வருடம்தான் உயிர்வாழும். பந்தயப் புறாக்களோவெனில் 20 ஆண்டுகள் வரை வாழும். மேலும் மணிக்கு 60 முதல் 80 மைல் தூரம் பறக்கும்.

லண்டன் அபாயம்
லண்டனில் காற்றின் அசுத்தம் மிகவும் மோசமாக இருப்பதால் ஆண்டுக்கு 9500 பேர் சாகின்றனர். டீசல் கார்களில் இருந்து வெளியாகும் விஷப் புகையே இதற்கு முக்கியக் காரணம். அருகாமை நாடுகளான, ஜெர்மனி, ஹாலந்து, போலந்து நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வரும் விஷத் துகள்கள், லண்டன் டீசல் புகையுடன் கலந்து, மேலும் விஷத் தன்மை அடைகின்றன. இதிலுள்ள பி.எம்2-5 என்னும் விஷத் துகள் நுரையீரலின் திசுக்களையும் தாண்டி உள்ளே புகுந்துவிடும். உடலிலுள்ள எந்தப் பொருளும் இதை வெளியே தள்ள முடியாது. இதில் எந்த அளவுக்குப் போனால் ஆபத்து என்பதும் தெரியாது. இதனால் நுரையீரல் புற்று நோய் வருவது மட்டும் தெரியும். இந்த ஆபத்துக் காரணமாக காற்றின் அசுத்தத்தை அவ்வப்போது அவதானித்து வருகிறனர்.
புறாக்கள் மூலம் லண்டனில் நடைபெறும் சோதனை மூன்றே நாட்கள்தான் நடந்தன. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியைப் போல கழுகுகளையும் பயன்படுத்தலாம் என்று லண்டன் மாநகரப் போலீசார் கருதுகின்றனர். ஜெர்மனியில் கூட்டத்தைக் கண்காணிக்க கழுகுகளின் மீது சென்ஸார் கருவிகளைப் பொருத்திவிடுவர்.
லண்டனில் புறாக்களைப் பயன்படுத்தும் நிறுவனம், மனிதர்கள் மீதும் இவைகளைப் பொருத்தி, அவர்களைப் பல தெருக்களில் உலவவிட்டு, ஆராயலாமே என்று கூறினர். இதுவும் வரவேற்கத் தக்க யோசனையே.
லண்டன் புறாக்கள் – காற்றின் சுத்தத்தை அளக்கின்றனவோ, இல்லையோ! ஆனால் காற்றின் தூய்மை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.
புறா விடு தூது வெற்றி!!
–சுபம்–
You must be logged in to post a comment.