உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை! (Post No.3070)

saltpans

Written by London swaminathan

Date: 18th August 2016

Time uploaded in London: 5-14 AM

Post No.3070

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியில் பிறந்தார். தந்தை குமார சுவாமி தேசிகர் இறந்த பிறகு, சகோதரர்கள் வேலாயுதம், கருணைப் பிரகாசம் ஆகியோருடன் திருவண்ணாமலைக்குச் சென்று கல்வி பயின்றார். அருணாசல மலையை வலம் வருகையில் அண்ணாமலையான் அருளால் அருட் கவிகள் இயற்றினார். 100 செய்யுட்களால் “சோண சைல மாலை” என்ற நூலை இயற்றினார்.

 

பின்னர் இலக்கணம் கற்பதற்காக தென் திசையை நோக்கிப் பயணம் செய்கையில் திருச்சிக்கு அருகிலுள்ள துறை மங்கலத்தில் ஒரு தோட்டத்தில் சிவ பூஜை செய்துகொண்டிருந்தார். அவருடைய வருகையை அறிந்த கிராமாதிபதி அண்ணாமலை ரெட்டியார் அவரை அங்கேயே தங்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ தாமிரபரணி தீரம் வரை சென்று வெள்ளியம்பலவாண சுவாமிகளிடம் இலக்கணம் கற்க விரும்புவதாகச் சொன்னார். உடனே அண்ணாமலை ரெட்டியார் 400 பொற்காசுகள் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

 

கு-வில் துவங்கி கு-வில் முடியும் கவிதை!

 

வெள்ளியம்பல வாண சுவாமிகளிடம் சென்றவுடன் அவர் ஒரு தேர்வு வைத்தார். “எங்கே பார்ப்போம். கு – என்னும் எழுத்தில் துவங்கி அதே எழுத்தில் முடிவடையும் ஒரு வெண்பா இயற்று. இடையில் ஊருடையான் என்ற சொல் இருக்க வேண்டும் என்றார்.

 

சிவப்பிரகாச சுவாமிகள் உடனே

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்

முடக்கோடு முன்ன மணிவாற்கு – வடக்கோடு

தேருடையான றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள

லூருடையா நென்னு முலகு

என்று பாடி முடித்தார்.

 

அம்பலவாணர், அந்தக் கவிதையைக் கேட்டு வியந்து, அவரைப் பாராட்டி சகோதரர் இருவருக்கும் இலக்கண பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார். அண்ணாமலை ரெட்டியார் தமக்களித்த பணத்தை  — 400 பொன்னை — குருதட்சிணையாக தட்டில் வைத்து வணங்கினார் சிவப்பிரகாசர்.

 

“அப்பனே, எமக்கு இந்த தட்சிணை வேண்டாம். திருச்செந்தூரில் உள்ள ஒரு தமிழ் புலவன் என்மீது வசை பாடுதலையே தொழிலாகக் கொண்டுள்ளான். அவனை வென்று என்னிடம் கொணர்க. அதுதான் குருதட்சிணை என்றார்.

 

உடனே சிவப்பிரகாசரும் திருச்செந்தூர் சென்று, அப்புலவரை வாதுக்கு அழைத்தார். இருவரும் சபதம் செய்து, முருகன் மீது நீரோட்டக யமக அந்தாதி பாடத் துவங்கினர் (உதடு ஒட்டாத எழுத்துகளை அமைத்து அந்தாதி பாடுவது). சிவப் பிரகாசர் 30 பாடல்களை ப் பாடி முடித்தபோதும், அந்தப் புலவர் ஒரு நீரோட்டகப் பாடல் கூடப் பாட முடியவில்லை.

salt1

அந்தப் புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவரை இட்டுக்கொண்டு போய் அம்பலவாணர் காலடியில் வணங்கி விழச் செய்தார். குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர் சிவப் பிரகாசருக்கு, சிதம்பரத்திற்குச் சென்று மேலும் பயில அனுமதி கொடுத்தார்.

 

போகும் வழியில் துறை மங்கலத்துக்குச் சென்று அண்ணாமலை ரெட்டியாரை சந்தித்து, திருவெங்கை நகரத்தில், அவர் கட்டிய மடத்தில் சில காலம் தங் கி பல நூல்கள் இயற்றினார். பின்னர் தல யாத்திரை செய்துகொண்டு, திருக்காட்டுப் பள்ளியை அடைந்தார்.

 

ஒரு நாள் அவ்வூர் வீதியில் கல்வியிற் சிறந்த ஒரு பெண் உப்பு வியாபாரம் செய்வதைக் கண்டார். அவருக்கு நயன தீட்சை கொடுத்தார். பலருக்கும் அப்பெண்மணியின்  புலமையைக் காட்டுவதற்காக

 

நிறைய வுளதோ வெளிதோ கொளுவேம்

பிறையை முடிக்கணிந்த பெம்மா – நுறையுந்

திருக்காட்டுப்பள்ளி திரி பாவாய் நீயிங்

கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு

 

என்ற வெண்பாவைப் பாடினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அப்பெண்,

 

தென்னோங்கு தில்லைச் சிவப் பிரகாசப் பெருமான்

பொன்னோங்கு சேவடியைப் போற்றினோ – மன்னோன்

றிருக்கூட்ட மத்தனைக்குந் தெண்டனிட்டோம் தீராக்

கருக்கூட்டம் போக்கினோங் காண்

 

— என்னும் வெண்பாவைப் பாடிக்கொண்டு வந்து நமஸ்கரித்து கைகூப்பி நின்றார். அப்பெண்ணுக்கு அன்று முதல் மெய்ஞ்ஞானம் ஏற்பட்டது. சிவப் பிரகாசர் அருளினால் ஆன்மீக பாதையில் நடக்கத் தொடங்கினார்.

–சுபம்–

Leave a comment

Leave a comment