
Written by S NAGARAJAN
Date: 14 September 2016
Time uploaded in London: 6-28 AM
Post No.3152
Pictures are taken from various sources; thanks.
நடைச் சித்திரம்
எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!
ச.நாகராஜன்
காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?
பொய்.
வடிகட்டிய பொய்!
எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் விஞ்ஞானிகள்! எல்லோரும் டாக்டர்கள்! எல்லோரும் பேராசிரியர்கள்!
எந்த ஒரு சப்ஜெக்டிலும் யார் வேண்டுமானாலும் எப்போதும் வயது, அந்தசஸ்து, பால்,மதம், மொழி என்ற வேறுபாட்டையெல்லாம் கடந்து ‘அட்வைஸ்’ செய்யலாம்!
பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!
காலையில் எழுந்து இத்யாதி காரியங்களை முடித்து விட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தேன்.இட்லிக்கு சட்னி என்ற பெயரில் தேங்காயை மிக்ஸியில் ஒரு அலசு அலசி உப்பு போடாமல், கடுகு தாளிக்காமல் வந்தது ஒரு வஸ்து.
முழித்தேன்.
கடுகு சேர்த்தால் எட்டு கலோரி கூடி விடும்! உப்பு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்!
அப்பாவியாக நான், “வாட்ஸ் ஆப்பா? க்ரூப் அட்வைஸா’ என்று சகதர்மிணியை நோக்கிக் கேட்க தன் வாட்ஸ் ஆப் தகவலை அமுல் படுத்தியதை தோழிகளுக்குப் பெருமிதத்துடன் தெரிவிக்க அவள் விரைந்தாள்.
கடைக்குப் போக வேண்டும். ஸ்கூட்டர் சாவியைத் தேடினேன். மகன் ஓடி வந்தான் கையில் லாப் டாப்புடன், ஏதோ ஒரு சைட்டைப் பார்த்தவாறே
‘சாவி என் கையில் இருக்கிறது. தினமும் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும். நடப்பதே நல்லது. இன்னிக்கு ஒரு பத்தாயிரம் ஸ்டெப் போட்டால் போதும்’ கையில் ஒரு வாட்சைக் கட்டி விட்டான். அது நடக்கும் போது எத்தனை ஸ்டெப் போட்டோம் என்பதைக் காண்பிக்கும் வாட்ச் போன்ற ஒரு வஸ்து. விஞ்ஞான விபரீதம்!
ஆமாம் என்றேன். நடக்க முடியாமல் நடக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.
அப்பாடா, நிம்மதியாக நியூஸ் சானலை ஆன் செய்தேன். பேரன் ஓடி வந்தான்.
அதை மாற்றி டிஸ்கவரி சானலுக்குப் போனான்.
‘தாத்தா, ரொம்ப பார்க்கக் கூடாது. கண் கெட்டு விடும். என் மிஸ் சொன்னாள்.’
ஓஹோ, அப்படியா?!

காலிங் பெல் அடித்தது. ஆஹா, பேப்பர் வந்து விட்டது!
சரி , கதவைத் திறந்து பேப்பரை வாங்கப் போனேன். இதை யாரும் தடை செய்து விட முடியாதல்லவா! நிம்மதியாகப் படிக்கலாம்!
அடுத்தவீட்டுக்காரர் பணிவுடன் ஒரு குட் மார்னிங் போட்டார்.
பேப்பர்காரரை நோக்கி அதட்டல் உருட்டலான பார்வையுடன், ‘நாளையிலிருந்து இங்கு பேப்பர் போடாதே!’ என்றார்.
பதறிப் போன நான், ‘ஏன்’ என்று பார்வையாலேயே கேட்டேன். பேச முடியவில்லை. அதனால்!!
‘ஸார் யார் தெரியுமா? ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை காலை மலர் நிகழ்ச்சியில் தினமும் பெசி வருபவர். ஒரு பேப்பரைத் தயாரிக்க எவ்வளவு மரங்கள் காடுகளில் அழிக்கப்படுகிறது, உனக்குத் தெரியுமா? பேசாமல் நீ கூட வேறு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளலாம். உனக்கும் நல்லது, நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது!’
அவன் அரண்டு போய் ஓட ஆரம்பித்தான்.
நானோ! – ஙே என்று முழித்தேன்.
வேர்க்க விறுவிறுக்க வீட்டினுள் நுழைந்தேன்.
என் மருமகள், ‘ இந்த ஆல் இந்தியா ரேடியோவிற்குக் ஸ்கிரிப்ட், பாக்யாவிற்குத் தொடர் எழுதுவது என்ற வேலை எல்லாம் வேண்டாம். இப்ப தான் என் ஃபிரண்ட் – அதான், பிஸியோதெராபிஸ்ட் பிரேமா ஸ்கைப்பிலே கூப்பிட்டு டெமோ செய்து காண்பித்தாள். நூறே நூறு பயிற்சிகள் தான். முதல் ஐந்தை இன்று ஆரம்பிக்கலாம். உடம்புக்கு ரொம்ப நல்லது!’
அடடா! என்ன அக்கறை!!
உலகத்திற்குத் தான் நம் மீது எத்தனை அக்கறை!!
சும்மாவா சொன்னார்கள் இரத்த பாசம் என்று!
எல்லோரும் அறிஞர்களே!
இப்போது சொல்லுங்கள், காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?
பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!
***********
You must be logged in to post a comment.