
Written by S NAGARAJAN
Date: 26 September 2016
Time uploaded in London:5-40
Post No.3190
Pictures are taken from various sources; thanks.
பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! என்ற கட்டுரையை முதலில் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!
ச.நாகராஜன்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
ஔவையாரின் இந்த பாடலைப் பல முறை படித்தால் பல விஷயங்கள் தெரிய வரும்.
நான்கு தந்து மூன்று கேட்ட ஔவையாரைப் பற்றிச் சற்று யோசித்த போது ஔவையார் ஒரு தீர்க்கதரிசி என்பது புலனாகிறது.
இயல், இசை, நாடகத் தமிழ் என முத்தமிழை பால், தெளி தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கைத் தந்து கேட்ட ஔவையாரின் வணிக பேர நேர்த்தியைக் கண்டு மனம் மகிழும் போதே எதற்கு அவர் பருப்பையும் சேர்த்து விநாயகருக்குப் படைத்தார் என்பது முதலில் புலனாகாது தான்!
ஆனால் ஔவையாரின் காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பின்னர் இன்று தமிழில் புதிய சேர்க்கையாக அறிவியல் தமிழ் இணைந்து விட்டது.
இயல், இசை, நாடகம் ஆகியவற்றோடு அறிவியல் தமிழும் சேர்ந்து விட்டதால் இப்போது முத்தமிழ், நாற்றமிழ் – அதாவது – நான்கு தமிழாகி விட்டது!
தமிழர்கள் விநாயகரை நான்கு தமிழைக் கேட்க வழி வகை செய்யும் வகையில் பருப்பையும் சேர்த்துப் படைத்து விட்டார் போலும் ஔவையார். அறிவியல் தமிழுக்காக அவர் பருப்பை ரிஸர்வ் செய்த அதிசயத்தை நினைத்து வியக்க வேண்டியதாக இருக்கிறது.
இனி என்ன கவலை?
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
என்பதைச் சற்றே மாற்றி
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
தங்கத் தமிழ் நான்கையும் தா
என்று இனிமேல் பாடி வேண்டலாம்!
இயல் – பால்
இசை – தெளி தேன்
நாடகம் – பாகு
அறிவியல் – பருப்பு
ஆக அறிவியல் தமிழ் உருவாவதைக் கண்ட தீர்க்கதரிசி ஔவையாருக்கு நன்றி சொல்லி அதை விக்னமின்றி நமக்கு அருளும் விநாயகருக்கும் நம் பயபக்தியுடன் கூடிய வணங்குதலைச் செய்து வேண்டுவோம்.
வாழ்க ஔவையார்! வளர்க அறிவியல் தமிழ்!!
**********
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 26, 2016இது வளமான கற்பனை/ சிந்தனை. ஆனால் ‘அறிவியல்’ தமிழ் என்று ஒன்று இருக்கிறது, அது வளர்கிறது என்பதை ஏற்றுக் கொள்வது எளிதாக இல்லை. மேலை நாட்டில் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு லத்தீன் / கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குகிறார்கள். இது ஆங்கிலத்தில் மிக எளிதாகவும் இயல்பாகவும் புழக்கத்திற்கு வருகிறது. இதிலிருந்து புதிய சொற்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தமிழில் அப்படி யில்லை. இங்கு புதிய கண்டுபிடிப்புக்கள் இல்லை! ஆங்கிலப் பெயரைத் தமிழில் ஆக்கவே திணருகிறார்கள்; இது சரளமாகப் பழக்கத்திற்கு வருவதில்லை. நீங்களே ஐஸக் அஸிமாவ் பற்றி எழுதினீர்கள். அவர் அறிவியல் பற்றி எழுதியதுபோல் தமிழில் எழுத இயலுமா? How easily technical jargon and ideas can be rendered in popular language ! Can this happen in Tamil? கலைச் சொற்களை எளிய தமிழில் எழுதமுடியாத நிலையில், அறிவியல் தமிழ் இருக்கிறது, அது வளர்கிறது என்பதை எப்படி ஏற்கமுடியும்? Most Tamil words relating to science seem to lead to a dead end! அவற்றிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவது கடினம். சென்ற தலைமுறையில் இருந்த சொற்களுக்கு [ eg, கணிதம், ஜியோமிதி, பூகோளம், பௌதிகம், ரஸாயனம், பொருளாதாரம் ] , தூய தமிழில் சொற்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். புதிதாக என்ன செய்தார்கள்? தமிழ் முக்காலும் இலக்கிய மொழி. நமது விஞ்ஞானிகளும் ஆங்கிலத்திலேயே பயின்று ஆங்கிலத்திலேயே சிந்திக்கிறார்கள்.இந்த நிலையில் ‘அறிவியல்’ தமிழ் எப்படி வளர முடியும் ? Can mere imitation or translation amount to original work?
ஆனால், நான்காவது தமிழ் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை! 50களில் திராவிடக் கட்சி நாத்திக வாத அரசியல்வாதிகள் பேசியதைக்கேட்ட திரு.வி.க அவர்கள் “வசைத்தமிழ் ” என்ற நான்காவது தமிழ் வந்துவிட்டது என்று சொன்னார் ! இதுவே அறிவியல் தமிழுக்கு முன் வந்த மூத்த கொடி ! பாவம், ஔவையார் ! இதைக் கற்பனை செய்திருப்பாரா !
K S Venkataraman
/ September 26, 20161. அறிவியல் தமிழை வளர்ப்பது கடினம் என்பது உண்மை. ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழுக்கு வளம் சேர்த்துவருகிற சம்ஸ்க்ருதச் சொற்களையே நீக்க முற்படும் குறுமதியாளர்கள், ஆங்கிலம் முதலான அயல்மொழிச்சொற்களை இணைத்து, அறிவியல் தமிழை வளர்ப்பதிலும் தங்களது எதிர்மறைக் கருத்துக்களைக் கூறுவர். ஆயினும் உண்மை என்னவென்றால், இத்தகையத் தடைகள் பொருட்படுத்தத் தக்கனவல்ல. உண்மையான தமிழன்பர்கள் அறிவியலைத் தமிழ்மொழி வளர்ச்சிக்கு நாங்காம் துறையாக ஏற்றுக்கொள்வார்கள், என்பதில் ஐயம் தேவையில்லை.
2. திராவிட, நாத்திக வாதிகளின் தமிழைக்குறித்து திரு.வி.க அவர்கள் கூறியது, அதன் தரம் குறித்த விமரிசனம். அது ஒரு கேலிக் குறிப்பு. நான்காவது துறையாக அதை வகைப்படுத்தியதாகாது. வகைப்படுத்தும் தகுதியும் அதற்கு இல்லை.
3. வெண்பாவில் ஒரு சிறிய தவறுகூட இருத்தலாகாது. நூற்றுக்கு நூறு வாங்கினால் வெற்றி. 99 என்றாலும் ஃபெயில். எனவே,
‘சங்கத் தமிழ்மூன்றும் தா’ என்றிருப்பதை, ‘தங்கத் தமிழ்நான்கையும் தா’ என மாற்ற இயலாது.
‘தங்கத் தமிழ்நாலும் தா’ என மாற்றலாம்.
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 27, 2016நீங்கள் சொல்வது சரியே. நானும் ஒரு பேச்சிற்காகத்தான் திரு.வி. க கருத்தைச் சொன்னேன், அது விமர்சனம் தான் . ஆனாலும் அடுத்த 50/60 ஆண்டுகளில் அது மேலும் வளர்ந்துதானே வந்திருக்கிறது? இன்றைய அரசியல் வாதிகளின் பேச்சும் எழுத்தும் அதே பாணியில் தானே இருக்கிறது !
ஆங்கிலத்தில் உள்ள விஞ்ஞானச் சொற்களை அப்படியே தமிழில் எழுதலாம்; இதனால் தமிழில் விஞ்ஞானம் பயில்வது எளிதாகும் என்று ராஜாஜி சொன்னார். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. 50 களில் தமிழ் விஞ்ஞான பாடத்தில் அனேகமாக அப்படித்தான் வரும். Internal combustion engine என்பதை ‘அக தகன எஞ்சின் ” என்று சொல்வார்கள். சில வாக்கியங்களை ஆசிரியர் அப்படியே ஆங்கிலத்திலேயே எழுதிக்கொள்ளச் சொல்லுவார். இவற்றை எளிதில் புரியும்படி தமிழில் மொழிபெயர்ப்பது கடினம், உதாரணம்- ஒரு வரி இன்றும் நினைவில் இருக்கிறது : ” High-frequency alternating current in a wire sends out radio waves in the surrounding space.” இதை இன்று எப்படித் தமிழில் எழுதுகிறார்களோ தெரியவில்லை.
ஆங்கிலத்தில் உள்ள உச்சரிப்பை தூய தமிழில் கொண்டுவர இயலாது. சம்ஸ்க்ருதம் இல்லாமல் இதை எழுத முடியாது. குஜராத்தில் டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனை குஜராத்தி லிபியிலேயே எழுதுவார்கள். Chloromycetin, Chloramphenicol , Debendox என்றெல்லாம் எழுதுவார்கள் [ நான் பார்த்தது 70களில் ] சம்ஸ்க்ருதம் கலக்காத தமிழில் இது சாத்தியமாகுமா?
உண்மையான அறிவியல் தமிழ் என்றால் அதைப் படித்தாலே பிறமொழியின் துணையில்லாமல் கருத்துக்கள் விளங்கவேண்டும். மேலும் பயில்வதற்கு வழிவகுக்கவேண்டும். இது தமிழில் சாத்தியமில்லை. It is said that our knowledge base doubles now in less than three years. தமிழ் மூலம் இதற்கு ஈடுகொடுக்க முடியுமா? விஞ்ஞானத்தை விடுங்கள்- எந்தத் துறையிலும் இது சாத்தியமில்லை!
Oh yes, we surely can strive to seek to find, to bridge the gap and not to yield !
Santhanam Nagarajan
/ September 27, 2016மிக அருமையான விமரிசனங்கள்.திரு நஞ்சப்பா அவர்களுக்கும் திரு கே.எஸ்.வெங்கடராமன் அவர்களுக்கும் என் பணிவான வணக்கத்துடன் கூடிய நன்றி உரித்தாகுக. முதலில் வெண்பாவின் ‘நாலாம்’ அடி பற்றிய திருத்தம்.தங்கத் தமிழ் நாலும் தா என்பதே சரி. ஏற்றுக் கொள்கிறேன்.இரண்டு மூன்று விதமாக ‘நாலாம்’ அடியை எனத குறிப்பேட்டில் 5-6-2007இல் எழுதி வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் எழுந்தது இந்தக் கட்டுரை. தங்கத் தமிழ் நான்கும் தா நவீனத் தமிழ் நான்கும் தா நற்றமிழ் நான்கும் தா என்று எழுதி வைத்திருந்தேன். துங்கக் கரிமுகத்து என வரும் போது தங்கத் தமிழ் என்று இருப்பதே சரி என்று தங்கத் தமிழ் நான்கும் தா என அமைத்திருந்தேன். நானகையும் என்று எப்படி வந்தது எனப் புரியவில்லை. எனது தவறே. நான்கு மருவி நாலு ஆயிற்று.ஆக ஔவை பயன்படுத்திய் பாலும் – நாலும் என்பதை எடுத்தாள்வது சிறப்பே.வெண்பா புனைவது கத்தி முனையில் நடப்பது போல. வேறு எந்த மொழியிலும் வெண்பா அமைப்பு கிடையாது. மேலதிக விவரங்களுக்கு ரமணர் – வாசிஷ்ட கணபது முனி சம்பவம் காண்க.அடுத்து அறிவியல் தமிழ் இதை நான்காம் வகையாக ஏற்றுக் கொள்வதில் என்ன இடர்ப்பாடு இருக்கிறது? புரியவில்லை. சுமார் 10000 சொற்களைத் தமிழ்ப்படுத்தியுள்ளேன். (வெளி நாட்டு ப்ராஜெக்ட் – சீனா மற்றும் ம்லேசியா) காலப் போக்கில் பல சொற்கள் வழக்கத்தில் வருகின்றன. தமிழ் வளர்வது தமிழர்கள் கையிலே தான் உள்ளது. திராவிட தீய் சக்திகள் தமிழைத் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துக் கொண்டதால் – கொள்வதால் தமிழ் வளர்ச்சியில் பலருக்கும் அக்கறையின்றிப் போய் விட்டது. ஆங்கில மொழி வளர்ச்சி அபூர்வமான ஒன்று. அங்கு இப்படி வாதங்கள் இல்லை. அறிவியல் தமிழ் வளர்கிறது. அதை வளர்ப்பது நமது பொறுப்பே மீண்டும் நன்றி. ச.நாகராஜன்