
Written by S. NAGARAJAN
Date: 15 October 2016
Time uploaded in London: 5-43 AM
Post No.3252
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
பாக்யா 7-10-2016 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் (அத்தியாயம் 296) வெளியாகியுள்ள கட்டுரை
விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!
ச.நாகராஜன்

“சந்திரனில் இருக்கும் ஒரு மனிதன் தன் நினைவுக் குறிப்புகளை எழுத விரும்பினால் அவன் ஃபிஷர் பேனாவைத் தான் எடுத்து எழுத ஆரம்பிப்பான்!”
– ஃபிஷர் பென் கம்பெனி
விண்வெளியில் விண்வெளி வீரர் எழுதுவதற்கான பேனா ஒன்றை உருவாக்க நாஸா பல லட்சம் டாலர்கள் செலவழித்ததாகவும் இந்தப் பிரச்சினையை ரஷியா, விண்வெளி வீரருக்கு ஒரு பென்சிலைக் கொடுத்து எழுத வைத்து செலவே இல்லாமல் சமாளித்ததாகவும் ஒரு ஜோக் உண்டு.
(பாக்யாவில் ‘விண்வெளியில் மனித சாதனைகள்’ தொடரில் 85 மற்றும் 86ஆம் அத்தியாயங்களில் 23-6-2006, 30-6-2006 இதழ்களில் இது பற்றிப் படித்ததையும் இந்தச் சம்பவம் புகழ் பெற்ற ஒரு தமிழ் திரைப்படத்திலும் இடம் பெற்று விட்டதையும் இங்கு வாசகர்கள் நினைவு கூரலாம்!)
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த ஜோக் பற்றிய உண்மை என்ன? இதற்கு ஒரு ஆய்வே நடந்து விட்டது!
ஆரம்ப காலத்தில் விண்வெளியில் வீரர்கள் பயணப்பட்ட போது ஜீரோ கிராவிடியில் பால் பாயிண்ட் பேனாவை வைத்து அவர்களால் எழுத முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாஸா விஞ்ஞானிகள் பத்தாண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினர். சுமார் 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) செலவழித்து, தலைகீழாக இருந்த போதிலும் எழுதக் கூடிய பேனா கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் பேனா கண்ணாடி உட்பட்ட எந்த பரப்பிலும் எழுத வல்லது!
உறைபனி என்ற நிலையிலிருந்து மிக மிக வெப்பமான 300 டிகிரி செல்ஸியஸ் என்ற உஷ்ணநிலையிலும் இது எழுத வல்லது.
ரஷியர்களோ விண்கலங்களில் பென்சிலை உபயோகித்தனர்.
அமெரிக்கர்களின் வரிப் பணம் தண்டமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஜோக் எழுந்தது – உங்கள் வரியைத் தவறாமல் கட்டி விடுங்கள். அதைச் செலுத்துவதில் சந்தோஷப்படுங்கள் என்று!
உண்மையில் ரஷிய மற்றும் அமெரிக்க விண்வெளிவீரர்கள் முதலில் பென்சிலையே உபயோகப்படுத்தி வந்தனர்.
ஆனால் பென்சில்கள் தீப்பிடித்து எரியக் கூடிய தனமை வாய்ந்தது. பாதுகாப்பானது அல்ல. அத்தோடு அதன் முனை உடைந்தால் அது விண்வெளி வீரர்களுக்கு பேராபத்தை விண்கலத்தில் ஏற்படக் கூடும். மேலும் 1967இல் அபல்லோ 1 விண்கலம் தீ விபத்துக்குள்ளானது ஆகவே நாஸா இப்படிப்பட்ட ஆபத்தான தீப்பிடிக்கக் கூடிய தன்மை வாய்ந்த பென்சிலைத் தவிர்க்க எண்ணியது.
ஆனால் இந்தப் பேனாவை நாஸா உருவாக்கவில்லை. இதைத் தாமாகவே ஃபிஷர் பென் கம்பெனியைச் சேர்ந்த பால் சி.ஃபிஷர் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து உருவாக்க முன் வந்தார். ஆண்டி கிராவிடி ஸ்பேஸ் பென் எனப்படும் ஏ.ஜி 7 பேனாவை அவர் உருவாக்கினார்.
இந்தப் பேனா உலோகத்தினால் உருவாக்கப்பட்டது 200 டிகிரி செல்ஸியஸ் வரை தாக்குப் பிடிக்கக் கூடியது. அது வரை பேனாவில் உள்ள மை எரியாது.

இந்தப் பேனாவை நாஸா விண்வெளியில் பயன்படுத்தி சோதனை செய்த சில பேனாக்களை வாங்கியது. அபல்லோ 1 தீ விபத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இறந்ததால், நூறு சதவிகித ஆக்ஸிஜன் இருக்கும் சூழ்நிலையிலும் கூட எரியாத பேனா ஒன்றை நாஸா விரும்பியது
அப்படிப்பட்ட ஸ்பேஸ் பேனா காற்றில்லாத வெற்றிட சூழ்நிலையிலும் எழுத வேண்டும், ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் எழுதவும் வேண்டும், ப்ளஸ் 150 டிகிரியிலிருந்து மைனஸ் 120 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்ப நிலை மாறுபாட்டிலும் அது செயல்பட வேண்டும்.
பத்து லட்சம் டாலர்கள் செலவழித்து முதல் பேனா உருவாக்கப்பட்டது. அதை ஃபிஷர் நாஸாவில் ஹூஸ்டன் ஸ்பேஸ் மையத்தில் இருந்த மேலாளரான டாக்டர் ராபர்ட் கில்ருத்துக்கு அனுப்பினார். அவர் அதைச் சோதனை செய்த பின்னர் நாஸா 400 பேனாக்களை பேனா ஒன்றுக்கு 4 டாலர் என்ற விலையை நிர்ணயித்து வாங்கியது. இந்தப் பேனாவிற்கு அது டேடா ரிகார்டிங் பென் (data recording pen) என்ற பெயரைத் தந்தது..
சாதாரண காரீய பென்சில்கள் மெர்குரி மற்றும் ஜெமினி விண்கலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதே போல ரஷியர்கள் தங்கள் விண்கலங்களிலும் இதே பென்சிலையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் விண்வெளிப் பயணங்கள் விரிவு பட்டு பாதுகாப்பு முதலிடத்தைப் பெற்று உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் ஃபிஷர் பேனாக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்தப் பேனாக்களே சந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஃபிஷர் விண்கலப் பேனாக்களை உருவாக்குவதற்காகவே தனியாக ‘ஸ்பேஸ் பென் கம்பெனி’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் இன்றும் விண்கலப் பேனாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஃபிஷர் பேனா பற்றிய உண்மை டிவி காட்சிகளில் சொல்லப்பட்டாலும் விண்வெளி பேனா ஜோக் சொல்வதற்கு அருமையான ஒன்றாக அமைந்து விட்டது. மாற்றி யோசிப்பதற்கு நாடகபாணியில் உதாரணமாகச் சொல்ல நல்ல ஜோக்காக இது இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. நாமும் கேட்டு மகிழ்கிறோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
ஆர்.டபிள்யூ. உட் (R.W.Wood) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி. (தோற்றம் 2-5-1868 மறைவு 11-8-1965) அவர் புதுப் புதுக் கருவிகளைச் செய்து மகிழ்வது வழக்கம். ஒரு முறை அவர் பிரம்மாண்டமான ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமரா ஒன்றைச் செய்ய விரும்பினார். அப்படியே 42 அடி நீளமும் ஆறு அங்குல குறுக்குளவும் கொண்ட ஒரு குழாய் அமைப்பை வைத்து பெரிய கேமராவை வடிவமைத்துச் செய்தார். அதில் ஒரு பக்கம் சிறியதாக ஒரு பிளவும் இன்னொரு பக்கம் ஒளிவிலகல் கொண்ட அமைப்பையும் செய்தார். லாங் ஐலேண்டில் இருந்த கோடை காலப் பண்ணை வீட்டில் அவரது பசு மாட்டுத் தொழுவத்தில் அதை நிறுவினார். வசந்த காலம் வந்தது. ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமராவைப் பார்த்த அவர் திடுக்கிட்டார். நிண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்ததால் குழாய் முழுவதும் சிலந்திகள் வலைகளைப் பின்னியிருந்தன. இதை எப்படி சுத்தப்படுத்துவது என்றே அவருக்குப் புரியவில்லை. கடைசியாக அவருக்கு ஒரு யோசனை உதித்தது. குழாயைத் தன் வீட்டின் முற்றத்திற்குக் கொண்டு போனார். அங்கு அவரது செல்லமான குட்டிப் பூனை இருந்தது. அதை அரட்டி உருட்டி அந்தக் குழாயின் ஒரு பக்கத்தில் நுழைய வைத்தார். இன்னொரு முனையில் பூனைக்கு மிகவும் பிடித்தமான மீனை மாட்டி வைத்தார். அவ்வளவு தான், சில வினாடிகளிலேயே பூனை அடுத்த பக்கம் வந்து மீனைக் கவ்வியது. குழாய் நெடுகிலும் இருந்த சிலந்தி வலைகள் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.
தனது யோசனை பலித்ததைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.
பூனையும் தான் மகிழ்ந்தது. கஷ்டப்பட்டு குழாய்க்குள் ‘பயணப்பட்டாலும்’ மீன் கிடைத்ததே!
********
You must be logged in to post a comment.