
Written by S. NAGARAJAN
Date: 18 October 2016
Time uploaded in London: 6-24 AM
Post No.3263
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
வலை வாசம்!
பாக்யா 14-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
புத்த தரிசனம்
By ச.நாகராஜன்
இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள்! வலைகளில் பூக்கும் மலர்களின் வாசமே தனி தான்!
அறிவியல் ஆன்மீகம், உள்வியல், திரைப்படம், கவிதை, கதை, ஜோக் என எந்தப் பொருளிலும் அறிய வேண்டிய ஆர்வமூட்டும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
சாம்பிளுக்கு ஆன்மீகத்தில் ஒன்று ஜோக்கில் ஒன்று பார்ப்போம்:
புத்த தரிசனம்
முன்னொரு காலத்தில் சீனாவில் நடந்தது இது. யுங் ஃபு என்ற ஒரு இளைஞன் சிசுவான் என்ற இடத்தை நோக்கிப் பயணமானான். அவனது இலட்சியம் போதிசத்வர் வூஜியைத் தரிசிப்பது தான்!
வூஜி என்றால் எல்லையற்ற அல்லது அளவே இல்லாத என்று பொருள்.
செல்லும் வழியில் பிட்சு ஒருவரை அவன் பார்த்தான்.
“நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார் பிட்சு.
இளைஞன் போதிசத்வர் வூஜியைத் தரிசித்து அவரிடம் சிஷ்ய்னாகப் போவதாக பதிலிறுத்தான்.
“புத்தரைப் பார்ப்பது என்பது போதிசத்வர் வூஜியைப் பார்ப்பதற்கு இணையாகாது:”என்றார் துறவி.
இளைஞன் ஒத்துக் கொண்டான். ஆனால் புத்தரை எப்படிப் பார்க்க முடியும்.
அது இறுதியான ஞானம் அடையும் போதல்லவா முடியும்!
‘புத்தரை எங்கே பார்ப்பது?” என்று திகைப்புடன் வினவினான் இளைஞன்.
“ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய பிட்சு, “இப்போது புத்தர் உங்கள் வீட்டிலே தான் இருக்கிறார்!” என்றார்.
திகைத்துப் போன இளைஞன்.” அப்படியா! அவர் புத்தர் தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அடையாளம் என்ன?” என்று கேட்டான்.

“ஒன்றும் சிரமமில்லை. ஒரு போர்வையைத் தாறுமாறாகப் போர்த்திக் கொண்டு செருப்பை யார் மாற்றி அணிந்திருக்கிறாரோ அவர் தான் புத்தர். அடையாளம் காண்பது எளிது!” என்றார் பிட்சு.
மனம் மகிழ்ந்த இளைஞன் அவரை அடி பணிந்து வணங்கி உட்னே தன் வீட்டிற்குத் திரும்பினான்.
ஒடோடி வந்த அவன் தன் வீட்டுக் கதவைத் தடதடவென்று தட்டி அம்மா என்று அழைத்தான்.
தன் பிள்ளையின் குரலைக் கேட்ட வயதான தாய் மனம் மகிழ்ந்தாள். வயதான அவள் ஒரு பாயில் படுத்துக் கிடந்தாள். மனமோ நெடுந்தூரம் சென்றிருந்த தன் மகன் ந்ல்லபடியாக இருக்க வேண்டுமே: என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தது. அவன் நலத்தைப் பற்றியே ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த அவள் தன் மகனின் குரலைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
போர்த்தியிருந்த போர்வையை அப்படியே மூடிக் கொண்டாள். விரைவாக ஓடோடி வந்த அவள் செருப்பைத் தாறுமாறாக மாற்றி அணிந்தாள். கதவைத் திறந்தாள்.
இளைஞன் தன் தாயைக் கண்டான். போர்வை தாறுமாறாக, செருப்புகள் மாறி இருக்க;… அவரே புத்தர்! பிட்சுவின் வாசகங்கள் நினைவிற்கு வந்தன.
தனது தாயின் முகத்தைப் பார்த்தான்.
எல்லையற்ற ஆனந்தம் பூத்திருக்கும் முகத்தைக் கண்டான். அங்கிருந்து பொழியும் அன்பை உணர்ந்தான்.
அந்த கணத்தில அவன் மனதில் அமைதி நிலவியது. ஆனந்தம் பொங்கியது. அவனுக்கு பரிபூரண ஞானம் ஏற்பட்டு விட்டது;
புத்த தரிசனமும் ஞானமும் அவனுக்குக் கிடைத்து விட்டது.
எனக்கும் அந்தத் தொழில் தான்!
இனி வலையில் ப(பி)டித்த ஒரு ஜோக் ..
ஒரு மூளையியல் நிபுணர் தன் காரை ரிப்பேருக்குக் கொடுத்திருந்தார்.
மெக்கானிக்கை அணுகிய அவர், “என்ன எல்லா வேலையும் முடிந்ததா? கியர் சரியாகி விட்டதா? சார்ஜ் எவ்வளவு?” என்று கேட்டார்.
“எல்லாம சரியாக இருக்கிறது” என்று உறுதிபடக் கூறிய மெக்கானிக், “சார்ஜ் அதிகமில்லை. எழுநூறு ரூபாய் தான்” என்றான்.
திகைத்துப் போன நியூரோ சர்ஜன், “ எழுநூறா! எனக்குக் கூட அவ்வளவு கிடைப்பதில்லையே!” என்றார்.
“டாக்டர், அதனால் தான் அந்தத் தொழிலிலிருந்து நான் இதற்கு மாறி விட்டேன்!” என்றான் முன்னாள் நியுரோ சர்ஜனான அந்த இந்நாள் மெக்கானிக்!
*******
You must be logged in to post a comment.