அதிசய புத்த துறவி ஸு யுன்! – 14 (Post No.3275)

buddha-lotus

Written by S. NAGARAJAN

Date: 22 October 2016

Time uploaded in London: 5-17 AM

Post No.3275

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 14

By ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 69. வருடம் முழுவதும்  சூத்ரங்களை விளக்குவதிலும் மக்களைச் சந்திப்பதிலும் அநேக இடங்களுக்குச் செல்வதுமாகக் கழிந்தது. சீடர்களாகத் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டவர்களின் எண்ணிக்கையோ கூடிக் கொண்டே போனது.  புது வருடத்தை மடாலயத்திலேயே அமைதியாகக் கழித்தார் ஸு யுன்.

 

 

ஒரு ஆண்டு வேகமாக ஓடி விட்டது. இப்போது ஸு யுன்னுக்கு வயது 70. ரங்கூனுக்கு அவர் வந்த போது உபாசகர் காவ் அவரை வரவேற்றுத் தன் வீட்டிலேயே ஒரு மாதம் தங்க அழைப்பு விடுத்தார். அவர் சாய்ந்த நிலையில் இருக்கும் ஒரு மரகத புத்தரைக் கொண்டு வந்து தந்து அதை ஷூ-ஷெங்

மடாலயத்திற்குக் கொண்டு சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

 

திரிபிடக சூத்ரங்களைக் கொண்டு செல்லும் அரிய பணிக்கு இப்போது ஸு யுன் தயார். திரிபிடகத்துடன் மரகத புத்தரையும் கூட பத்திரமாக காக்ஃபுட் மலைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்!

 

சூத்திரங்களைக் கொண்டு செல்ல நல்ல குதிரைகளாக முந்நூறு குதிரைகள் தேவைப்பட்டன. ஆனால் செய்யப்பட்டிருந்த சிலையோ மிகவும் கனமாக இருந்தது. அதைக் கொண்டு செல்ல நல்ல் வலுவான ஆட்கள் இல்லாததால் அவலோகிதேஸ்வரா ஆலயத்திலேயே அதை விட்டுச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. இன்னும் சில வருடங்களில் அதை காக்ஃபுட் மலைக்கு ஒரு வேளை கொண்டு செல்ல முடியும்.

 

நாற்பது நாட்கள் இடைவிடாமல் உழைத்ததோடு அனைத்தையும் மேற்பார்வை பார்த்தார் காவ். ஆயிரம் பேர்களையும் முந்நூறு குதிரைகளையும் கொண்ட பெரும் படை தயாராகி விட்டது. காவ் போன்ற இன்னொருவரைக் காணவே முடியாது.

 

டெங்குயு மற்றும் ஜியாகுவான் மாகாணங்கள் வழியே சென்ற பெரும் ஊர்வலத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. அனைவரும் ஆங்காங்கே ஆரவாரத்துடன் திரிபிடகத்தை வரவேற்றனர். பல நாட்கள் பயணத்தில் கழிந்த போதும் கூட குதிரைகளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி களைப்பே ஏற்படவில்லை!

 

 

ஜியாகுவானிலிருந்து தலிக்குச் செல்லும் போது மழை இல்லையென்றாலும் பெருத்த இடியோசை கேட்க ஆரம்பித்தது.மேகங்களினூடே மின்னல் கீற்றுகள்! எர் ஹாய் ஏரியில் அலைகள் ஆர்ப்பரித்து உயர எழும்பின! ஒரு பனி மூட்டம் படர்ந்தது. பார்த்தவர்கள் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்கள்.

 

 

தலியில் மடாலயத்தின் வாசலை அடைந்த போது திரிபிடகத்தை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழையோ மழை. பின்னர் வானம் வெளுத்தது.  எர் ஹாய் ஏரியிலிருந்த பழைய டிராகன் திரிபிடகத்தை வரவேற்கத் தானே வந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.

 

வைசிராய் திரிபிடகத்தை வரவேற்கத் தலிக்குத் தனது முக்கியமான ஆட்களை அனுப்பினார். அனைவரும் புத்த தர்மரின் எல்லையற்ற கருணையைப் பற்றிப் பேசிப் பேசி ஆனந்தமடைந்தனர்.

 

 

தலியில் பத்து நாட்கள் தங்கிய பின் ஷூ செங் மடாலயம் நோக்கி ஊர்வலம் சென்றது.

buddha-1

வழியில் ஒரு வித தடையுமில்லை. திரிபிடகம் மடாலயத்தில் வைக்கப்பட்டது. மாதத்தின் இறுதி நாளில் ஊதுபத்தி ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.

 

மங்கலமான திரிபிடகம் வந்து சேர்ந்ததில் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. திரிபிடகம் நிறுவப்பட வேண்டும் என்ற சங்கல்பம் பூர்த்தியாகி விட்டது.

 

டெங்குயுவில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு சொல்லத்தான் வேண்டும்.

 

சாங் ஸ்ன் லின்னினிடம்  மடாலயத்தில் ஸு யுன் பேசிக் கொண்டிருந்த போது ப்சு ஒன்று அங்கே வந்தது. அது அதன் எஜமானரிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டதாம்!

அதைத் தொடர்ந்து அதன் எஜமானரான யாங்கும் ஓடி வந்தார்.

யாங் ஒரு கசாப்புக் கடைக்காரர்.

 

 

அவர் பசுவை நோக்கி, “நீ (தலை வெட்டுப்படாமல்) தப்பிக்க வேண்டுமென்றால்  மூன்று வைரங்களில் நம்பிக்கை வை. தப்பி ஓடு” என்று சொன்னாராம்.

பசுவும் தலை அசைத்ததாம்!

 

ஓடிவந்த பசு அங்கு கண்களில் நீர் மல்க மண்டியிட்டது.

உடனடியாக ஸு யுன் மூன்று சரணாகதி சூத்திரங்களை பசுவுக்கு ஓதினார்.அது ஒரு மனிதரைப் போலவே நடந்து கொண்டது.

ஸு யுன் சிறிது பணத்தை எடுத்து பசுவின் சொந்தக்காரரான யாங்கிற்கு அளித்தார். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்தார்.

நடந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.

 

 

தனது தொழிலை இனி மாற்றிக் கொள்வதாக சபதம் எடுத்தார். தன்னை தர்மத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு இறைஞ்சினார்.  அவர் சைவ உணவுக்கு  மாறியவுடன் கமாண்டர் ஜாங் அந்த கசாப்புக்கடைக்காரரின் மனமாற்றத்தைக் கண்டு வியந்தார். அத்துடன் ஒரு கடையில் அவருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார். இந்த அதிசய நிகழ்ச்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது!

-தொடரும்

 

Leave a comment

Leave a comment