
யாகத்தீயில் ராதாகிருஷ்ணன்
Written by London Swaminathan
Date:2 November 2016
Time uploaded in London: 15-11
Post No.3312
Pictures are taken from various sources; thanks.
இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —
1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,
2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,
3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,
4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,
5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.
எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.

யாகத் தீயில் அனுமார்
வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)
பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.
மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.
ஏழு பாக யக்ஞங்கள்
பாக யக்ஞங்கள் ஏழு வகை; பாக என்றால் சமைக்கப்பட்ட என்று பொருள்; பல வேள்விகளுக்குப் பலருக்கும் பொருள்கூடத் தெரியாது. நானும் அனுபவத்திலன்றி நூல்களில் படித்ததையே எழுதுகிறேன். முதல் இரண்டும் நீத்தார் நினைவாக செய்யப்படுபவை. இப்போதும் பழக்கத்தில் உள. மற்றவை அபூர்வம்
1.பித்ரு சிராத்தம்
2.பார்வண சிராத்தம்
3.அஷ்டகா
4.சிராவணீ
5.அஸ்வயுஜி
6.ஆக்ரஹாயணீ
7.சைத்ரீ

வேள்வித் தீயில் கிருஷ்ணன்
14 ச்ரௌத யக்ஞங்கள்
இந்த 14 வேள்விகளும் 7 ஹவிர் யக்ஞங்கள், 7 சோம யக்ஞங்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏழு ஹவிர் யக்ஞங்கள்
ஏழு ஹவிர் யக்ஞங்களில் பால், நெய், பல வகை தானியங்கள், அப்பம் முதலியன தீயில் இடப்படும். பிராமணர்கள் தினமும் காலையிலும்மா லையிலும் அக்னி ஹோத்ரம் செய்ய வேண்டும் என்கிறார். ஒவ்வொரு பக்ஷத்தின் முடிவிலும் தர்ச, பூர்ணமாச செய்யவேண்டும் என்று மனு பகர்வார். ஆக்ராயன என்பது புது தானியம் அறுவடையாகும் போது செய்யப்பட வேண்டும். சாதுர்மாஸ்யம் என்பது மழைக்காலத்தில் செய்யப்படுவது. நிரூட பசு பந்த யக்ஞம் என்பது தட்சினாயண, உத்தராயண புண்யகாலங்களில் (ஜூன் 21, டிசம்பர் 22) செய்யப்படவேண்டும்.
1.அக்ன்யாதேயம்
2.அக்னிஹோத்ரம்
3.தர்ச பூரணமாசம்
4.ஆக்ரயணம்
5.சாதுர்மாஸ்யம்
6.நிரூட பசு பந்த:
7.சௌத்ராமணி

ஏழு சோம யக்ஞங்கள்
1.அக்னி ஷ்டோம:
2.அத்யக்னிடோம:
3.உக்த்ய:
4.ஷோடஷீ
5.வாஜபேய:
6.அதிராத்ர:
7.ஆப்தோயாம:
சோமயாகங்களில் சோம ரசம் பயன்படுத்தப்படும். எல்லா யாகங்களிலும் புரோகிதர்கள் இருப்பர். அவர்களின் எண்ணிக்கை சக்திக்கேற்பவும், வேள்விக்கேற்பவும் மாறுபடும். யாகத்தைச் செய்பவர் யஜமானன் எனப்படுவார்.
வீட்டில் மூன்றுவகை அக்னி இருக்க வேண்டும் ஆஹவனீயம் என்பது கிழக்கு திக்கிலும் (தேவ பூஜைக் கானது), தட்சிணாக்னி என்பது தெற்கு திக்கிலும் ( இறந்தோருக்கு கடன் செலுத்த), கார்ஹபத்யம் என்பதூ மேற்கு திக்கிலும் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கவேண்டும். இதில் 14 ச்ரௌத வேள்விகளும் செய்யப்படும். சங்க இலக்கியப் புலவர்கள் அந்தணர்களைப் போற்றுகையில் முத்தீ அந்தணர் என்று புகழ்வது இதனால்தான். இதுதவிர சில நூல்கள் நாலாவது தீ பற்றியும் கூறும்.
மனு தர்ம சாத்திரத்தில் 3-70/75; 3-80; 3-92/94;4-25/26 ஆகியவற்றில் இவற்றின் விவரங்களை காஅண்லாம்.
எனது பழைய கட்டுரையையும் படிக்கவும்:–
400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை
By London Swaminathan லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் — 890 தேதி 6 மார்ச் 2014
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 2, 2016இந்த யாக-யஜ்ஞங்களைப் பற்றிப் படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது! அந்தணர்களின் ஆறு தொழிலும் வேள்வி சம்பந்தப்பட்டவையே.
ஆனால் கலிகாலத்தில் வேள்விகள் செய்வது-செய்விப்பது பெரும்பாலும் இயலாது என்ற கருத்து பாகவதத்தில் வருகிறது. இதற்கேற்ப ஸ்ரீமத் பகவத் கீதையிலும் பலவித யஜ்ஞங்களைப் பற்றிச் சொல்லி, திரவிய யஜ்ஞத்தைக் காட்டிலும் ஞான யஜ்ஞமே சிறந்தது என இறுதியாகக் கூறப்படுகிறது. [4.33]
இக்கருத்துக்கு ஆதாரமாக 17ம் நூற்றாண்டில் இரு பெரியவர்கள் இருந்து காட்டினர். காஞ்சிபீடத்தின் 59வது ஆசார்யரான ஸ்ரீ பகவன் நாம போதேந்திரர், காசி-வட இந்திய யாத்திரையின் போது தனது குருவின் ஆக்ஞைப்படி ஒரிசாவில் பக்தி க்ரந்தங்களைச் சேகரித்தார். மடத்திற்குத் திரும்பியபின், கலிகாலத்தில் யாக- யஜ்ஞங்கள் செய்வது இயலாது என்ற கருத்தினால் “நாம சங்கீர்த்தனம்” என்ற புதிய வழியைத் துவக்கினார்.
கலி கல்மஷ சித்தானாம் பாபத்ரவ்ய ஜீவினாம்
விதி கர்ம விஹீனானாம் கதிர் கோவிந்த கீர்த்தனம்
என்ற ஶ்லோகத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். [ கலியில் மக்களின் மனது-சித்தம் மாசடைந்துவிட்டது. பாபச் செயல்களின் வழியே பொருளீட்டி ஜீவிக்கிறார்கள். முறைதவறி கர்மாக்களைச் செய்கிறார்கள். பகவானைக் கீர்த்தனம் செய்வதுதான் உய்வதற்கு ஒரே வழி.]
இதைச் சரியாகச் செய்வதற்கு ஒரு நெறிமுறை வகுத்துத் தந்தார். ஸம்ப்ரதாய பஜனை என்று இது வழங்கி வருகிறது.
மராட்டிதேசத்தில் சிவாஜி மஹராஜ் ஸ்வராஜ்யம் ஸ்தாபிக்கக் காரணமாக இருந்த சமர்த்த ராமதாசர், காசியில் பண்டிதர்களின் சபையில் ‘யஜ்ஞம்’ என்பது பஞ்ச மஹாயஜ்ஞங்களையே தான் குறிக்கும்- பிறவற்றைச் செய்வது இக்காலத்தில் சாத்தியமில்லை என்று வாதிட்டார். சாஸ்திர நூல்களிலிருந்தே ஆதாரம் காட்டினார். எதிர்த்து முழக்கிய பண்டிதர்கள் அனைவரும் இறுதியில் இக்கருத்தை ஏற்றுக் கொண்டனர். இதன் விவரங்களை, ஸ்ரீ ஸ்வாமினாத ஆத்ரேயர் எழுதிய ஸ்வாமி ராமதாசர் சரித்திரத்தில் கொடுத்திருக்கிறார்.
த்ரவ்ய சுத்தி, யஜமான சுத்தி, மந்திர சுத்தி, ஸ்தல சுத்தி போன்ற பல விஷயங்களில் இன்று சரியான நிலை இல்லை. இதை ஸ்ரீ போதேந்திரர் எழுதிய “ஸ்ரீ பகவன் நாம ரஸோதயம் ” என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறார், இதற்கு மூன்று நூற்றாண்டுகள் கழிந்த இன்றைய நிலையில் பல யஜ்ஞங்கள் [ ஹோமங்கள்] தாந்திரீக முறைப்படிதான் செய்யப்படுகின்றன.
முடிந்தவர்கள் செய்யக்கூடாது என்பது இல்லை- ஓரிரு பரம்பரையினர் செய்தே வருகின்றனர். ஆனால் இது அருகியே வருகிறது- 40 ஸம்ஸ்காரங்களே 16, 12 எனக் குறுகிவிட்டனவே!. அதேசமயம் ஒவ்வொரு குடும்பத்தினரும் செய்யவேண்டிய எளிய பஞ்ச மஹாயஜ்ஞங்களைச் செய்யாமலிருக்க எந்தச் சாக்கும் சொல்லமுடியாது!
காலம் என்ற வலிய சக்தியின் முன் தலைதாழ்த்தியே தீரவேண்டி இருக்கிறது!