
WRITTEN BY S NAGARAJAN
Date: 3 November 2016
Time uploaded in London: 6-00 AM
Post No.3314
Pictures are taken from various sources; thanks.
28-10-2016 பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
உலக நடப்பு
உலகம் அழியுமா? அணு ஆயுதப் போர் மூளுமா?
ச.நாகராஜன்

சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக அமெரிக்காவும் ரஷியாவும் ஒரு நிழல் யுத்தத்திற்குத் தயாராக ஆகிறதா?
இந்த சந்தேகத்தை எழுப்பும் விதமாக 2016 அக்டோபரில் ரஷிய ராணுவத்தின் அறிவிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்பு ஒத்திகையையும் உலகப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன.
40 மில்லியன் – 4 கோடி ரஷியர்கள் இந்த போர்க்கால்த் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். அவசர நிலையைச் சமாளிக்கும் இரண்டு லட்சம் நிபுணர்களும் ஐம்பதினாயிரம் தற்காப்புச் சாதனங்களை ஏந்தும் பிரிவுகளும் இந்த் அணு ஆயுதப் போர் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்கும் என்றும் இது நான்கு நாட்கள் நீடிக்கும் என்றும் ரஷிய ராணுவ்ம் அறிவித்திருக்கிறது.
இது ஒரு ஒத்திகை தான் என்றும் ஜனங்கள் அவசரநிலைக்கு எப்படி ஈடு கொடுக்கிறார்கள் என்பதைக் கணிக்கவே இது நடைபெறுகிறது என்று சிவில் டிஃபன்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர் ஓலக் மனுலாவ் (Olec Manuilov) கூறி இருக்கிறார்.
அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால் என்ன நடக்கும்?
உலகெங்கும் புகை மண்டலம் சூழும்.
புழுதியும் இடிபாடுகளும் பூமியின் ஸ்ட்ராடோஸ்பியரை மாசு படுத்தும்.

சூரிய ஒளியை பல மாதங்களுக்கு, ஏன் பல வருஷங்களுக்கு பூமியில் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு ந்யூக்ளியர் விண்டர் – அணுக் குளிர்காலம் –என்று பெயர்.
50 அணு ஆயுதங்கள் ஏவி விடப்பட்டாலே போதும், உலகம் அவ்வளவு தான்!
ஒரு கிலோ டன் அணு வெடிப்பு என்பது ஆயிரம் டன்கள் டிஎன் டி வெடிப்புக்குச் சமம். ஹிரோஷிமா நாகசாகியில் ஏற்பட்ட அழிவை வைத்துக் கணக்கிட்டுப் பார்க்கையில் பல கோடி மனிதர்கள் அழிய நேரிடும்.
முதலில் அனைவருக்கும் பார்வை போய் விடும். மிருகங்கள் பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பார்வையை இழக்க நேரிடும்.இது அணு ஆயுத வெடிப்பினால் உருவாகும் நைட்ரஜன் ஆக்ஸைடினால் ஏற்படும்.
தாவரங்கள் அழுகி விடும். உணவு நாசமடையும்.
உயிரோடிருப்பவர்கள் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டும் விசேஷ தடுப்பு உடைகளை அணிந்து கொண்டும் தான் பல வருடங்கள் உயிர் வாழ வேண்டியிருக்கும்! ஆனால் உயிரோடிருப்பது என்பதே பெரிய கொடுமையாக இருக்கும்
100 மெகா டன் பயன்படுத்தப்பட்டாலோ பூமியே உறைந்து போகும். மொத்த உயிரினமும் முடிவுக்கு வரும்!
இதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
1982இல் நடந்த சம்பவம் இது!
அமெரிக்காவைக் கண்காணித்துக் கொண்டிருந்த ரஷியர் ஒருவர் திகைத்து விட்டார்.

ஏனெனில் ஐந்து அணு ஆயுதங்கள் அமெரிக்காவினால் ஏவப்பட்டிருப்பதாக அவர் முன்னால் இருந்த் கண்காணிப்புத் திரை காண்பித்தது,
பதிலுக்கு உடனுக்குடன் அவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அவர் சற்றுத் தயங்கினார். இது சரிதானா என்று சரிபார்க்க வேண்டும் என்று ஒரு கணம் அவர் நினைத்தார்.
உலகமே பிழைத்தது. மெக்கானிகல் எர்ரர் எனப்படும் இயந்திரக் கோளாறு தான் அப்படி ஒரு தவறான தகவலைத் திரையில் காட்டி இருந்தது.
ஒவ்வொரு கணமும் மனித குலம் செத்துப் பிழைக்கும் நிலைக்குக் காரண்மான அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க உலகத் தலைவர்கள் ஒன்று கூடி நடவடிக்கை எடுத்தால் இப்படிப் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
இன்னொரு மஹாத்மா பிறப்பாரா? அஹிம்சை வழியை மீண்டும் காண்பிப்பாரா?
வருவார் காந்திஜி! எதிர்பார்ப்போம், பிரார்த்திப்போம்!!
************