
Written by London Swaminathan
Date: 15 November 2016
Time uploaded in London: 6-26 AM
Post No.3355
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
உலகம் எப்படி அழியும்?
பூகம்பத்தால் அழியும்.
எப்போது அழியும்?
பண்புடையவர்கள் இல்லாவிடில் அழியும்.
இப்படிக்கூறியது திருவள்ளுவர். பொய்யாமொழிப் புலவன் சொல்லுவது பொய்யாகுமா?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)
பொருள்:-
நல்ல பண்புகள் (குணங்கள்) உடையோர் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. சான்றோர் இல்லாவிடில் நிலநடுக்கம் (பூகம்பம்) உண்டாகி எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிடும்.
அதாவது கலியுகம் முற்றிப்போய், நல்லவர்கள் குறைந்துவிட்டால், உலகம் அழிந்துவிடும். புராணங்களும், மஹாபாரதமும் சொன்ன அதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதில் வியப்பொன்றுமில்லை.
இதற்கு ஆறு குறள்களுக்கு முன், வள்ளுவன் அபாயச் சங்கு ஊதுகிறான்:-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை (குறள் 990)
பொருள்:-
வேலியே பயிரை மேய்ந்தால் பூமாதேவி பொறுக்கமாட்டாள். சான்றோரின் குணங்கள் நீங்குமானால் இந்தப் பெரிய நிலம் பாரத்தைத் நிச்சயமாகத் தாங்காது.
இதையே அவ்வையார் வேறுவிதமாக விளம்புவார்:-
நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.
நல்லவர் இல்லாவிடில் மழை பெய்யாது.
அந்தக் காலத்தில் வறட்சி நிலவினால் உடனே ஊருக்குள் முனிவர்களையும், சாது சன்யாசிகளையும் அழைத்து வருவர் என்பதை ராமாயணம் மூலம் அறிவோம். ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக் கோட்டு முனிவர் வந்தபின்னர் மழை பெய்தது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்
ஆயினும் வள்ளுவன் உறுதியாக் கூறுவது என்னவென்றால், எப்போதும் கொஞ்சம் நல்லவர்கள் மிச்சம் இருப்பார்கள்; உலகமே தலைகீழாகப் போனாலும் அவர்கள் நிலைபெயர மாட்டார்கள்!
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 989
உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல், கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.
வாழ்க வள்ளுவன்! வளர்க சான்றோர்!!
–subham–