
WRITTEN BY S NAGARAJAN
Date: 16 November 2016
Time uploaded in London:9-09 AM
Post No.3360
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
ச.நாகராஜன்
பிரான்ஸ் நாட்டைச் சேர்நத இவாரிஸ் கலோயிஸ் (Evariste Galois) ஒரு இளவயதுக் கணித மேதை. (தோற்றம் 25-10-1811; மறைவு : 31-5-1832) அருமையான குடும்பத்தில் பிறந்த அவர் இளமையிலிருந்தே இரண்டு விஷயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்தார். ஒன்று புரட்சி அரசியல் மீது ஈடுபாடு இன்னொன்று கணிதத்தில் ஈடுபாடு. 12 வயதிலேயே அவரது கணிதத் திறமை நன்கு புலப்பட்டது.
அவரது தந்தை திடீரென்று இறக்கவே மேல் படிப்பு படிக்கக் கையில் பணமில்லாது போனது. கணித டியூஷனுக்கு வருமாறு ஒரு நோட்டீஸை மளிகைக் கடை வாசலில் தொங்க விட்டார். மாணவர்கள் வந்தனர். ஆனால் அவர்களுக்கு கலோயிஸின் உயர் அறிவு புரியவே இல்லை. ஓடி விட்டனர்.
பிரான்ஸோ புரட்சிவாதிகளால் இரண்டாகப் பிரிந்து சண்டையில் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது..
அந்தக் காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் முடிவு கட்ட டியூயல் எனப்படும் சண்டை நடைபெற்று வந்தது. நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் படி பெரும்பாலும் கத்திச் சண்டையில் போட்டியாளர்கள் ஈடுபடுவர். ஒருவர் சாகும் வரை சண்டை தொடரும்!

கோழி காணாமல் போயிற்று என்றாலும் சரி, அரசியல் கொள்கை பற்றிய முடிவு எடுக்க வேண்டுமென்றாலும் சரி, பிரான்ஸில் டியூயல் தான். முதல் உலக மகாயுத்தம் வரை இந்த டியூயல் பிரான்ஸில் பிரபலமாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக கலோயிஸும் இந்த டியூயலில் ஈடுபட வேண்டி வந்தது. சிலர் இதை காதலுக்காக என்கின்றனர். சிலரோ அரசியல் புரட்சி காரணங்களுக்காக என்கின்றனர்.
இறப்பதற்கு முதல் நாள் முடிக்காத தனது கணித ஆய்வுப் பேப்பர்களை எடுத்து வைத்துக் கொண்டு இரவு முழுவதும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். பல இடங்களில் பலவற்றை விளக்காமல் மார்ஜினில் நேரம் இல்லை, நேரம் இல்லை என்று எழுதி விடைகளை மட்டும் எழுதிக் கொண்டே போனார்.

மறு நாள் இறந்து விடுவோம் என்பதைத் தெரிந்து கொண்டவர் போல இரு கடிதங்களை எழுதி, “நான் நாட்டுக்காக உயிர் விடுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று உருக்கமாக அறிவித்தார். மறுநாள் நிர்ணயித்த படி சண்டை நடைபெற்றது. அதில் அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 21 தான். க்ரூப் தியரியைக் (Group Theory) கண்டுபிடித்த இந்த இள வயது மேதையின் அகால மரணம் விஞ்ஞான வரலாற்றில் சோகமான ஒன்று!
******