
WRITTEN BY S NAGARAJAN
Date: 17 November 2016
Time uploaded in London:5-11 AM
Post No.3361
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
பாக்யா 18-11-16 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை
நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!
ச.நாகராஜன்
“சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்” –
நாடோடி மன்னன் படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம அவர்களின் பாடல்
அதிர்ஷ்டமே இல்லை என்று அலட்டிக் கொள்பவர்களில் ஒருவரா நீங்கள்? இனி கவலையை விடுங்கள். அதிர்ஷ்டத்தை நீங்கள் அழைக்கலாம். அறிவியல் அதிர்ஷ்டத்தை அலசி ஆராய்ந்து துணை புரிய வருகிறது.
இப்போது உலகெங்கும் பரபரப்பாகப் படிக்கப்படும் புத்தகங்கள் சான்ஸ் எனப்படும் அதிர்ஷ்டத்தைத் தரும் வாய்ப்பைப் பற்றி புத்தகங்களே!
கேய்ட் சுகெல் (Kayt Sukel)என்ற பெண்மணி தன் குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் அடி அடியாக அளந்தவர். ரிஸ்க் எனப்படும் அபாயம் என்றால் அவருக்கு வெல்லக்கட்டி. துணிந்து ரிஸ்க் எடுத்து வாழ்ந்து பழகிய இவர் ‘தி ஆர்ட் ஆஃப் ரிஸ்க்’ (The Art of Risk) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது அதிர்ஷ்ட விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஸ்கை – அபாய முடிவுகளை – எடுங்கள் என்பதே இவரது அறிவுரை.
மனிதர்களிடம் ஒவ்வொருவரிடமும் ஒரு ரிஸ்க் கால்குலேடர் இயல்பாகவே இருக்கிறது என்கிறார் அவர். சூழ்நிலை, அனுபவம், அவசியம் ஆகியவற்றோடு நிலைமையை சரியாகக் கணிக்கும் மூளைத் திறனும் உள்ளவர்கள் ஜெயிப்பது நிஜம் என்கிறார் இவர். அதிக ரிஸ்கை இயல்பாக எடுக்கும் பலருக்கு ஜீன்கள் எனப்படும் மரபணுவும் ஒரு காரணம். DRD4 GENE இன் மாற்றுரு (Variant) ஒன்றைக் கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் லாபரட்டரி சோதனைகளில் மிகவும் துணிச்சலுடன் புதிய சோதனைகளைச் செய்து பார்ப்பது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.
அபாயகரமான முடிவுகளை அதிகம் எடுப்பவர்கள் நல்ல திறம்படத் திட்டமிடும் திறன் உடையவர்கள் என்பது இவர் தரும் சுவையான செய்திகளுள் ஒன்று.
புத்தகத்தை முடிக்கும் போது, “ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கின்ற முடிவுகளில் அது பெரிதோ சிறிதோ, வாழ்க்கையை மாற்றுவதோ அல்லது சாதாரணமானதோ, அதில் ஒரு ரிஸ்க் – அபாயம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். ஆக அதிர்ஷ்டத்தை அழைக்க அடிப்படைத் தகுதி கவனமுடன் ரிஸ்கைத் தேர்ந்தெடுத்துச் செயல்படும் திறனே!

அடுத்து அதிரடியாக வாய்ப்பைப் பற்றிச் சொல்லும் இன்னொரு கலக்கல் புத்தகம் ‘தி பெர்ஃபெக்ட் பெட்’ (The Perfect Bet) இதை எழுதியவர் பிரபல கணித மேதையான ஆடம் குர்சார்ஸ்கி (Adam Kucharski) . லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றில் மறைந்திருக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து, என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிச்சயமற்ற தன்மையுடன் நாம் புத்திசாலித்தனமாக பேரம் பேசினால் வெற்றி தான் என்கிறார்.
அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியும் எழுத்தாளருமான ராபர்ட் மாத்யூஸ் எழுதிய ‘சான்ஸிங் இட்’ என்ற புத்தகம் (Chancing It by Robert Mathhews) அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.
இவர் தெள்ளத் தெளிவாக வெற்றிக்கான வழிகளை அடுக்குகிறார். சூதாட்டத்தையும் லாட்டரியையும் நடத்துவோர் கணிதத்தின் ப்ராபபலிடி (Probability) எனப்படும் இயலும் நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் வணிகத்தில் தோற்கவே மாட்டார்கள். அவர்கள் நம்புவது சூதாட வருவோரின் தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வெறி கொண்ட மன நிலையையே. ஆகவே ஓரிரு முறை வெற்றி பெற்றவுடன் சூதாட்ட களத்தை விட்டுக் கடையைக் கட்ட வேண்டும் என்கிறார் ராபர்ட்.
அடுத்து குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் ரிச்சர்ட் வைஸ்மேன் (Richard அதிர்ஷ்டம் பற்றி முறைப்படி பல ஆண்டுகள் ஆராய்ந்தவர் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.
இவர் அதிர்ஷ்டசாலிகளைத் தேடிப் பிடித்து ஆராய்ந்தார். 400 தன்னார்வத் தொண்டர்களைத் தன் ஆய்வுக்காக அழைத்தார். இதில் 18 முதல் 84 வயது வரை உள்ளவர்கள் அடக்கம்! இவர் ஆய்வின் முடிவில் கண்டு பிடித்தது அதிர்ஷ்டசாலிகளுக்கும் ஏனையோருக்கும் அடிப்படையிலேயே அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது என்பதைத் தான். யார் வேண்டுமானாலும் அதிர்ஷ்டசாலியாகலாம் என்று கூறும் இவர் நான்கு பயனுள்ள குறிப்புகளைத் (டிப்ஸ்) தருகிறார்.

- அதிர்ஷ்டசாலிகள் தங்களது நல்ல காலத்தைத் தாங்களே உருவாக்குகிறார்கள் அவர்கள் நல்ல வாய்ப்புகள் வரும் போது நழுவ விடுவதே இல்லை. நல்ல வாய்ப்புகள் வரும் போது அதை அவர்கள் சிறப்புடன் இனம் காணுகிறார்கள்.
- தங்கள் உள்ளுணர்வு அல்லது அந்தரங்க குரலை அவர்கள் கேட்கிறார்கள். மதிக்கிறார்கள். அதன் படி முடிவெடுக்கிறார்கள். பகுத்தறிவுடன் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் அவ்வளவாக மதிப்புக் கொடுப்பதில்லை!
- தங்களது வெற்றிக்கான இலக்கை நிர்ணயிப்பதோடு அதை அடைந்து விட்டதாக கணிப்பையும் செய்து விடுகிறார்கள் அந்த அதிர்ஷ்டசாலிகள். வரப்போகும் வெற்றியை பாஸிடிவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.
- தங்கள் பயணத்தில் தடைகள் வந்தால் அவர்கள் தளர்வதில்லை. மோசமான தோல்விகளை அல்லது துரதிர்ஷ்டங்களை அல்லது சவால்களை அவர்கள் கடுமையாக எதிர்கொண்டு நிற்பதோடு அவற்றை நல்லதிர்ஷ்டமாக மாற்றவும் செய்கிறார்கள்.
இந்த நான்கு விதிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நாளடைவில் தோல்விகளைச் சந்திப்பதே இல்லை. அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது இயல்பான வாழ்க்கைப் பழக்கமாக ஆகி விடுகிறது என்கிறார் வைஸ்மேன்.
இதற்கான ஏராளமான உதாரணங்களை அவர் அடுக்கிக் கொண்டே போகிறார். ஆகவே அவர் சொல்வதைக் கேட்டுக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டசாலி ஆவது நிச்சயமே!
எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!
–Subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 17, 2016நாளின் தொடக்கத்தில் இந்த நல்ல விஷயத்தைப் படிக்க நேர்ந்ததே அதிர்ஷ்டம்தான்! பட்டுக்கோட்டையாரின் பாடல் தமிழ் சினிமாவில் வந்த இலக்கியத்தரம் வாய்ந்த எளிய பாடல்; சுமார் 60 வருடங்களாகியும் மனதைவிட்டு நீங்காமலிருக்கிறதே!
இந்த அறிவுரை நமக்கு மிகவும் தேவை. கர்மம், விதி என்று சொல்லி சாதரணமுயற்சிகளைக்கூடச் செய்யாமல் பலர் காலம் கழிக்கிறார்கள். முயற்சி செய்து முடியாவிட்டால் விதி எனலாம்; முயற்சியே செய்யாவிட்டால் அது நமது ஈன மதியே அல்லவா!
முயற்சி செய்து முன்னேறியவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் படிப்பினை பெறலாம்.ஆங்கிலத்தில் இம்மாதிரி பல புத்தங்கள் இருக்கின்றன. Tom Butler Bowdon ” 50 Success Classics” என்ற புத்தகத்தில் இத்தகைய பல புத்தகங்களின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருகிறார்!
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று சொன்னாலும், உழைப்பு எல்லோருக்கும் ஒரேவிதமாக பலனளிப்பதில்லை! ஓரளவுக்கு எண்ணியே கருமம் துணியவேண்டும் என்றும் பெரியோர் சொல்கின்றனர். உண்மையான நெஞ்சுரத்திற்கும் அசட்டுத் துணிச்சலுக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா? ( being bold v. being foolhardy!) Edmund Spenser ” Faerie Queene” ல் எழுதிய ” Be Bold, Be Bold- But Not Too Bold” என்ற வரிகள் நினவுக்கு வருகின்றன.
And as she lookt about, she did behold
How over that same dore was likewise writ,
Be bold, be bold, and every where Be bold,
That much she muz’d, yet could not construe it
By any ridling skill, or commune wit.
At last she spyde at that roomes upper end,
Another yron dore, on which was writ,
Be not too bold; whereto though she did bend
Her earnest mind, yet wist not what it might intend.
அதே சமயம் Tennyson, Ulysses என்னும் கவிதையில் சொல்லும் வரிகளும் தெம்பூட்டுகின்றன:
Tho’ much is taken, much abides; and tho’
We are not now that strength which in old days
Moved earth and heaven, that which we are, we are;
One equal temper of heroic hearts,
Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield.
முயற்சி செய்து முன்னேறுவோமாக! Fortune favours the brave!
Santhanam Nagarajan
/ November 17, 2016ஆஹா! மிக அருமையான கருத்துக்கள். நன்றி, நஞ்சப்பா அவர்களே! முயற்சி திருவினையாக்கும். உண்மையே! டெனிஸனின் டு ஸ்ட்ரைவ் டு ஸீக், டு ஃபைண்ட் அண்ட் நாட் டு ஈல்ட் என்பது காலத்தால் அழியாத மஹா வரிகள். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர். என்றாலும் சில சமயம் கடினமாக உழைத்தாலும் ப்லன் கிடைக்காமல் போகிறதே இங்கு தான் ஆம் எனில் ஆம் போம் எனில் போம் என்ற வரிகள் வருகிறது. என்றாலும் உலகம் முயற்சி உடைய வீரர்களுக்கே. இல்லாவிடில் சோம்பேறிகள் அல்லவா இருப்பர். ஆக நாம் இப்படி முடிக்கலாம் : யத்ன பிரய்த்னமு மானவ தர்மமு; ஜெயா அபஜெயம் தெய்வாதீனமு! ந்ன்றி, உங்களின் அருமையான எட்மண்ட் ஸ்பென்சர் மற்றும் டெனிசனின் மேற்கோளுக்காக. திரு சுவாமிநாதன், திரு நஞ்சப்பா அவர்களின் கருத்துக்களையும் கட்டுரையின் பின் இணைப்பாக அவர் பெயருடன் இணைக்க முடியுமா?