Research Article Written by London swaminathan
Date: 8 December 2016
Time uploaded in London: 9-03 am
Post No.3429
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
தொல்காப்பியர் காலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்நாட்டின் வடக்கு எல்லை மாறவே இல்லை. தமிழன் இந்தியா முழுவதையும் ஆண்டான் என்பதற்கு இலக்கியச் சான்றும் இல்லை, வரலாற்றுச் சான்றும் இல்லை. ஆனால் புனிதமிக்க இமயமலை வரை சென்று அதன் மீது முத்திரை பொறிக்கும் வழக்கம் இருந்தது உண்மையே.
முதலில் இலக்கியச் சான்றுகளையும் பின்னர் மொழி இயல் சான்றுகளையும் காண்போம்
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு
…………………
பொருள்:-
வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).
புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை. இது பற்றி 56 தேசங்கள் கட்டுரையில் முன்னரே எழுதிவிட்டேன். பஞ்ச திராவிடர்கள் என்பது 5 வகை பார்ப்பன மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதையும் தந்து விட்டேன்.
காளிதாசனின் ரகு வம்ச காவியத்திலும் தென் பகுதியில் உள்ள பாண்டிய மன்னரை மட்டுமே குறிப்பிடுகிறான். சேர சோழர்கள் இல்லை!!
கம்பன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்; தொல்காப்பிய காலத்துக்கு மிகவும் பின்னால் வந்தவன் கம்பன். அவனும் வட வேங்கட மலையே (திருப்பதி-திருமலை) தமிழ் நாட்டின் எல்லை என்பான்:-
வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ
பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்
சீதையை த் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.
ஆக, கம்பனும் வட வேங்கட மலையையே தமிழ் மொழி பேசும் நில எல்லையாகக் காட்டுகிறான். வடக்கில் உள்ள வேங்கட மலை எல்லோரும் அறிந்ததே. ஆயினும் தெற்கிலுள்ள குமரி முனை கடலுக்குள் போய் இப்போது கன்யாகுமரியே நமது தென் எல்லையாக இருக்கிறது.

தமிழ் மொழி திருப்பதியைத் தாண்டி ஒலித்ததே இல்லை!
அதீத அன்பினாலும் தமிழ் ஆர்வத்தாலும் —- தமிழ் மொழி பற்றிப் பலரும், இதுதான் உலகின் பழைய மொழி என்றும் இந்தியா முழுதும் இம்மொழி பேசப்பட்டது என்றும் புகழ்வர். ஆயினும் இதற்குச் சான்றுகள் இல்லை.
தமிழன் இமயம்வரை சென்று புலி, வில், மீன் முத்திரைகளைப் பதித்திருக்கலாம். அதெல்லாம் போகும் வழியில் இருக்கும் மன்னர்களிடம் முன் கூட்டியே சொல்லி வைத்து விடுவர். மிகவும் அபூர்வமாக ஓரிருவர் எதிர்த்து சண்டைக்கு வருவர்.
சதகர்ணி என்ற சக்திவாய்ந்த ஆந்திர மன்னர் உதவியுடன், சேரன் செங்குட்டுவன் இமயம் சென்றான். ஊர் பேர் தெரியாத இரண்டு சில்லுண்டி சிற்றரசர்கள் — கனகனும் விஜயனும் — சேரனை எதிர்க்கவே அவர்கள் தலையில் அவன் கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான் என்று நாம் சிலப்பதிகாரத்தில் படிப்போம். இப்படி இரண்டு அரசர்கள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆக இவர்கள் இருவரும் ஏதோ ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசர்களாக இருக்கலாம்.

வடக்கில் திராவிட மொழிகள் இல்லையா?
இப்போது ஒரு கேள்வி எழும். வடக்கிலுள்ள சில மொழிகள், தமிழுக்கு நெருக்கமானவை என்றும் அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்துள்ளனரே. அது எல்லாம் பொய்யா?
தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூல மொழியிலிருந்து உருவனவை. அவைகளின் எச்ச சொச்சங்களை எல்லா இந்திய மொழிகளிலும் காணலாம். இப்படி திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுவோர் ஒரு நூறு சொற்களைக்கூட காட்டமுடியவில்லை. குறிப்பாக வடமேற்கு இந்தியவிலுள்ள பிராஹுய் மொழியைப் பற்றி எழுதி அது, சிந்து சமவெளியில் தமிழ் இருந்ததற்குச் சான்று என்றெல்லாம் பிதற்றுவார்கள். உண்மையில் வியாபாரத்துக்காக சிந்துவெளிக்கு மிகவும் பிற்காலத்தில் சென்ற தமிழ் மக்கள் விட்டுச் சென்ற சில சொற்கள் உள்ளன. அவ்வளவுதான்.
இவர்கள் எதை எதையெல்லாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுகின்றனரோ அங்கெல்லாம் தமிழ் இல்லாத சொற்கள் 70 முதல் 90 சதவிகிதம் வரை உள்ளன. இது பற்றிக் கேட்டால் பிற்காலத்தில் இந்த மொழி கலந்துவிட்டது என்றும் பிதற்றுவர். பூசி மெழுகுவர். துருக்கியில் கி.மு 1400 வாக்கிலேயே சம்ஸ்கிருதச் சொற்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இது போலக் கல்வெட்டுகள் இருந்தால் உண்மையில் அந்த மொழி அங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.
மேலும் இவர்கள் கூறும் எந்த திராவிட மொழிக்கும் எழுத்தும் கிடையாது, இலக்கணமும் கிடையாது, அகராதி, நிகண்டும் கிடையாது. பொய்ப் பித்தலாட்டத்திலேயே இந்த வாதம் நிற்கிறது. ஆழமாக ஆராய்ந்தால் பிராஹுய் மொழி, திரவிட மொழி என்ற வாதமெல்லாம் அடிபட்டுப் போகும். ஆகவே பிற்காலத்தில் வந்த இந்த மொழிகள் — தமிழனுக்கும் வடக்கிற்குமுள்ள தொடர்பை நிலைநாட்டப் போதுமானவை அல்ல.
பழங்குடி மக்களின் நாகரீகத்தை — குறிப்பாக தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் வாழும் பழங்குடி மக்களின் நாகரீகத்தைப் படித்தால் ஆயிரக் கணக்கான பழக்க வேறுபாடுகள் இருப்பதை அறிய முடியும். ஆக இவர்கள் ஒரே இன மக்கள் இல்லை என்பதும் தெளிவு.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஒளிர்க தமிழ்!!!

