பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)

Written by S NAGARAJAN

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 5-18 am

 

Post No.3474

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 16

 

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் இரண்டாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

 

                        ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

 

திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

 

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த                    கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும் என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

 
சாயல் நினது, வான் நிறை-என்னும் 
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே: 
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் 
எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

 

 

சாயல் நினது, வான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் 
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா 
நின்னொடு புரைய 
அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

 

 

இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

 

அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

என்ன அற்புதமான் பாடல். ஆழ்ந்த பொருளைக் கொண்ட அற்புதமான சொற்கள்.

பல முறை படித்து மகிழ வேண்டிய அழகிய பரிபாடல் பாடல் இது!

*******

Leave a comment

Leave a comment