
Picture of Kancheepuram Garuda Sevai
Compiled by London swaminathan
Date: 1 FEBRUARY 2017
Time uploaded in London:- 10-30 am
Post No. 3596
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஜயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், புலியூர்க் கோட்டத்தில், புத்தவேடனு நத்தத்தில், விற்பெற்ற துளுவ வேளாளர் குலத்தில், பூவிருந்த வல்லியார் மரபில், அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவரான வாயிலா நாயனார் பரம்பரையில், சென்னவராய கோத்திரத்தில், அண்ணாசாமி முதலியாருக்கும்-உண்ணாமுலை அம்மாளுக்கும் புதல்வனாக 10-5-1854-ல் பிறந்தார் பூவை கலியாணசுந்தர முதலியார்.
ஒரே நேரத்தில் எட்டு வகை காரியங்களைச் செய்யும் அஷ்டாவதானம் என்னும் கலையில் தேர்ச்சிபெற்ற பூவை கல்யாணசுந்தரம், தாலுக்கா பாடசாலையில் மாணவராக இருந்தபோது, ஆசிரியர் சேஷாத்திரி அய்யங்கார் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல் ஒன்றைக் கற்பித்துக் கொண்டிருந்தார்:
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் யான்முகமாய்
அந்தாதி மேலீட்டறிவித்தே னாழ்பொருளை
சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து
(அந்தாதி மேலீட்டறிவித்தே னாழ்பொருளை
சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து = அந்தாதி, மேலிட்டு, அறிவித்தேன், ஆழ் பொருளை, சிந்தாமல், கொள்மின், நீர், நேர்ந்து– திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி)
என்ற திவ்வியப் பிரபந்த பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கையில் சிறுவன் கலியாணசுந்தரம் கற்பலகையில் (ஸ்லேட்)
சங்கரனே நாரணனைத்தான் படைத்தானம்மாலே
பங்கயனைப் பெற்றெடுத்தான் பார்மிசையில் – துங்கமுடன்
சத்தியமாரணங்கள் சாற்றியது மேயுணர்வீர்
நித்தியத்தைப் பெற்றுய்ய நீர்
(பங்கயன்=பிரம்மா, ஆரணங்கள் = வேதங்கள்)
–எனவெழுதி வாத்தியாரிடம் காட்டினார். அவர் இது யாருடையது என்று கேட்க முதலியார் மவுனமாயினார். பக்கத்திலிருந்த சிறுவர், இது கலியாணசுந்தரம் செய்த கவிதைதான் என்றும் அவர் இப்படிப் பாடல்கள் பல எழுதுவது வழக்கம் என்றும் சொன்னார்கள்.
உடனே அய்யங்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு, இன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை; எங்கே ஒரு கவிதை எழுது பார்க்கலாம் என்றார்.
கலியாணசுந்தரமும் சலிக்கவில்லை.
மெச்சும் புகழ்வரதர் மென்கருடன் மீதேறிக்
கச்சியினிலே அடைந்தார் கம்பீர– முச்சிதமாய்
மன்னியவே கம்பர் வலனுரைகா மாட்சியெனு
மன்னையினைச் சுற்றுவதால்
என்று பாடவே ஆசிரியர் வியப்புற்றார். அழுக்காறுமுற்றார். “ஏகம்பர் வலனுரை காமாட்சி என்னும் அன்னையைச் சுற்றுவதால்” – என்று பாடியதால் கலியாணசுந்தரத்துக்கு சமயத் வேஷம் இருப்பதாகக் கருதி அவருக்கு சரியாகப் பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருந்தார். பின்னர் முதலியார் வேறு பாடசாலையில் சேர்ந்து பயின்றார்.ராமலிங்க சுவாமிகளையும்கண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
1873-ல் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருமயிலைக்கு (மைலாப்பூர்) வந்தபோது
சீர்பெருஞ் சிரபுரத்து மீனாட்சி சுந்தரநற் செம்மலேறே
ஏர்பெருகு நின் வீட்டு வாயலினிற்கின்றே நெனையழைத்துப்
பேர்பெருகுங் கல்விநல மென்மேலு மென்றனக்குப் பிறங்கியோங்க
வார்பெருகு நின்னாசி யினைக்கூறி யன்புடனே யாட்கொள்வாயே
எழுதி அனுப்பியவுடன் பிள்ளை அவர்கள், முதலியாரை அழைத்து அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
கலியாண சுந்தர வென்கண்மணியே நின்பால்
மலிவாகக் கல்வி வளரும்– பொலிவாகப்
பொற்புவியிற் கற்றோர் புகழச் சிவஞான
விற்பனனாய் வாழ்ந்திருக்கவே
–என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிக்கொடுத்தார்.

1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு இலக்கணக் கடல் தசாவதானம் பேறை ஜெகநாதபிள்ளை யவர்களிடம் இலக்கணம் கற்றார்
1876-ஆம் ஆண்டில் சென்னையிலில்ருந்து செங்கல்பட்டுக்குப் புகைவண்டிவிட்டபோது, சக மாணாக்கர் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கவி பாடினார்:
ஆயிரத் தெண்ணூற்றெழுபத்தாறாமாண்டணி செப்டம்பர்
தூயமுற்றிகதி சுக்ரவாரந்தோன்றும் பதினோரு மணியதனில்
பாய வுலகில் பலமாக்கள் பலனையடையப் புகைவண்டி
நேய செங்கை நகரென்னு நிலத்து வந்து நிலவிற்றால்
–என்று எழுதிக்கொடுத்தார்.
உடனே அவரது ஆசிரியர் தசாவதனியார்
பாருங்களோர் நொடியிற் பன்னுமிடம் போய்வரலாம்
வாருங்களென்ன தடை மாநிலத்தீர்
என்று இரண்டு வரிகளை எழுதிச் சேர்த்தார். உடனே முதலியார் மேலும் இரண்டடிகளை எழுதினார்.
நீருங்கள்
காலா நடவாமல் காசு மிகநல்காமல்
மேலாக வாழ்வினி மேல்.
பின்னர் இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல் கோடு சடத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடிப் பரத கண்ட இதிஹாசம், நீதிசாகரம் எனப்பெயரிட்டனர்.
1877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம், ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் இயற்றினார்.
1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.

பதிகங்களைத் தவிர முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. அவ்வவ்வமயங்களிற் பாடிய சாத்து கவிகள் முதலியன 864.
(இவையனைத்தும் இந்த மலர் வெளியிட்ட நாள் வரையுள்ள கணக்கு)
அஷ்டாவதானத்தில் அவர் செய்த செய்யுட்களை அடுத்த பகுதியில் காண்போம்.
–தொடரும்
–subham–