
சீரிஷம் பூவின் படம் (from Ayurveda website)
Written by London swaminathan
Date: 3 FEBRUARY 2017
Time uploaded in London:- 6-41 am
Post No. 3601
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
சம்ஸ்கிருத இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ சீரிஷம் என்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ அனிச்சம் என்றும் கவிகள் பாடி வைத்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே மலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று முடிவுசெய்தேன். எனது ஆராய்ச்சியின் பலனே இக்கட்டுரை.
சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம் பற்றிக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பின்னர் வந்த திரு வள்ளுவர் அனிச்ச மலரை நான்கு இடங்களில் உவமையாகக் காட்டுகிறார்.
இலக்கியங்களில் மென்மைக்கு இலக்கணம் இந்தப் பூக்களே. கடினத்தன்மைக்கு வைரத்தை (வஜ்ரம்) உவமையாக காட்டுவது போல மென்மைத் தன்மைக்கு உவமை அனிச்சம் அல்லது சீரிஷம்.
உலகப் புகழ்பெற்ற காளிதாசன் குமார சம்பவத்திலும் ரகுவம்சத்திலும் சீரிஷ மலரின் மென்மைத் தன்மையை எடுத்துக்காட்டுகிறார்.
பார்வதியை வருணிக்க முனைந்த கவிஞன் காளிதாசன், பார்வதியின் கைகள் சீரிஷ மலரைவிட மென்மையானவை என்பான்—(குமார 1-41)
இன்னொரு அருமையான உவமை பார்வதியின் தவத்தைப் பற்றியது. சீரிஷ மலரானது தேனீக்களின் கால்களைத் தாங்குமேயன்றி, ஒரு பறவையின் கால்களைத் தாங்க முடியுமா? அது போல பூப்போன்ற உடல்படைத்த பார்வதியின் உடலை கடுமையான தவசு தாங்குமா – என்பது காளிதாசனின் உவமை—(குமார 5-4)
ரகுவம்ச காவியத்தில் சுதர்சன மன்னனின் உடல் சீரிஷ மலரைப் போல மென்மையானது என்று சொல்கிறான் (18-45).

அனிச்சம் பூ (according to Wikipedia)
தமிழ் இலக்கியத்தில்
மகளிர் சேகரித்த 99 மலர்களில் அனிச்சம் என்ற மலரையும் சேர்த்து கபிலர் பாடியுள்ளார் (குறிஞ்சிப் பாட்டு, வரி 62)
கலித்தொகையில் (91-1) அனிச்சம் மலர் சூடியது, மாலை சூடியது பற்றி மருதன் இளநாகன் பாடியுள்ளார்.
இதன் பிறகு கம்பராமாயணம் முதலிய பிற்காலக் காவியங்களிலும் இம்மலர் இடம்பெறுகின்றது.
வள்ளுவர் 4 குறள்களில் தெரிவிக்கும் கருத்துகள்:
“மோப்பக்குழையும் அனிச்சம்”(90)– முகர்ந்து பார்த்,,,,,லேயே வாடிவிடும்.
“அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்” (1111)– ஏ, அனிச்சம் பூவே! என் காதலி உன்னைவிட மென்மையானவள்.
(இதைக் காளிதாசன் பார்வதி பற்றிச் சொன்னதோடு ஒப்பிடலாம்)
“அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்” (1115)– காம்போடு அனிச்சம் பூவைச் சூடிவிட்டாள் என் காதலி. எடை தாங்காமல் அ வள் இறந்து போய்விடுவாள்.
“அனிச்சம்…. மாதர் அடிக்கு நெருஞ்சி பழம்” (1120)– அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் கூட இப்பெண்ணின் பாதங்களில் நெருஞ்சிப் பழம் போலக் குத்தும்!
அனிச்சம் பூ எது? என்று சிலர் ஆராய்ச்சி செய்து சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் சிலர் சீரிஷ மலர் எது என்று படம் போட்டுள்ளனர். அதுவே சரி என்று தோன்றுகிறது. இதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்
- அனிச்ச மலர் என்று இவர்கள் குறிப்பிடும் மலர் முகர்ந்தால் வாடுவதில்லை
2.இது மற்ற பூக்களைப் போலவே மென்மை படைத்தது. உண்மையில் இதைவிட மென்மையான தமிழ் மலர்கள் உண்டு
- சீரிஷ மலரின் படம் ஓரளவுக்கு தமிழ்ப் பாடல் வருணனைக்கு அனுசரணையாக உளது. களிதாசன் சொல்லுவது போல தேனீக்கள் மட்டுமே உட்கார முடியும்
4.கபிலரும் இளநாகனும் சொல்லக்கூடிய அனிச்சம் தலை யில் அணிவது; மாலையாகச் சூடுவது. ஆனால் WEBSITE வெப்சைட் காட்டும் அனிச்சம் அணியப்படுவதுமில்லை; பூஜைக்கு உதவுவதுமில்லை
5.மேலு வெப்சைட் WEBSITE காட்டும் அனிச்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை.
6.எல்லாவற்றிற்கும் மேலாக சீரிஷம் படத்தையும் அனிச்சம் படத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் சீரிஷமே மென்மை என்பது தெரிகிறது
- சீரிஷம் என்ற பெயரை இன்றும் வட இந்தியப் பெண்கள் பெயரில் வைக்கின்றனர். தமிழர்களோவெனில் மற்ற மலர்களின் பெயர்களை பெண்களுக்குச் சூடுகின்றனர். ஆனால் அனிச்சம் என்று பெயர் வைப்பதில்லை.
- கடைசியாக அனிச்சம் என்பது தமிழ் சொல்லா என்று ஐயுற வேண்டியுள்ளது. அந்த ஒலியை ஒட்டிய தமிழ்ச்சொல் எதுவும் (அனி) சங்க இலக்கியத்தில் இல்லை. அனிச்சம் மட்டுமே உள்ளது. இது ஒரு பெரிய புதிரான மலர்தான்.
வள்ளுவன் சொன்னது போல அனிச்சமே! நீ வாழி! (“நன்னீரை வாழி அனிச்சமே”-குறள் 1111)
Botanical name of both the flowers as identified in the websites:
Sirisham – Albizia lebbek (East Indian Walnut); Family-Mimosaceae
Anicham- Anagallis arvensis (Scarlet Pimpernel); Family- Primulaceae
–சுபம்–