
Written by London swaminathan
Date: 17 FEBRUARY 2017
Time uploaded in London:- 8-47 am
Post No. 3645
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று –
என்பது கவிஞர் கண்னதாசனின் பழைய திரைப் படப் பாடல்.
குழந்தையும் குட்டி நாயும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடா மனத்தால் என்றும் –
என்பது லண்டன் சுவாமிநாதனின் புதிய பாடல். ஏன்?
புதிய விஞ்ஞானக் கட்டுரை நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் வெளியானதால் உதயமானது புதிய பாடல்!
ஒரு வயதான குழந்தைகளை வைத்து முன்னர் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. யார் மற்றவர்களுக்கு உதவவில்லையோ அத்தகைய கெட்டவர்களை குழந்தைகள் புறக்கணிப்பது அதில் உறுதியானது. அதாவது ஒரு வயதாகும் போது, பெற்றோர்கள் சொல்லித் தராமலேயே, குழந்தைகள் நல்லதையும் கெட்டதையும் அறிந்து தார்மீக முடிவு எடுப்பது தெரியவந்தது.
பிராணிகளுக்கும் இததகைய அறிவு உண்டா என்று ஆராய க்யோடோ பல்கலைக் கழக டேவிட் ஆண்டர்சன் ( Comparative Psychologist David Anderson of Kyoto University) ஒரு ஆய்வு நடத்தினார். அதன் முடிவுகளை நியூ சைன்டிஸ்ட் (New Scientist) பத்திரிக்கை வெளியிட்டது. அதன் சுருக்கம் வருமாறு:–

ஒரு பெட்டியில் ஒரு பொம்மையை வைத்தனர். அந்தப் பெட்டியை இருவர் தனித்தனியே திறப்பதை கபுசின் வகைக் குரங்குகள் (capuchin monkeys) பார்த்தன. இருவரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்த போது வேறுபாடின்றி இருவர் கையிலிருந்தும் சாப்பிட்டன.
மற்றொரு சோதனையில் ஒருவர் பெட்டியில் இருக்கும் பொம்மையை எடுக்கக் கஷ்டப்படுவது போல நடித்தார். அவருக்கு மற்றொருவர் உதவவில்லை; இன்னொரு சோதனையில் அவருக்கு பக்கத்திருந்தவர் உதவுகிறார். இருவரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்தபோது, யார் உதவவில்லையோ அவர் கையிலிருந்து உணவு சாப்பிட குரங்குகள் மறுத்துவிட்டன. அதாவது மற்றவருக்கு உதவாத கெட்டவர்களை அவை அடையாளம் கண்டுகொண்டதோடு வெறுத்தன!
இதே போல பந்துகளை வைத்து நாய்களைச் சோதித்தனர். மூன்று பேர் பந்து விளையாடுகையில் யார் பந்துகளை ஒழுங்காகப் போட்டனரோ அவர்களிடம் உணவு சாப்பிட்டடன. யார் ஒருவர் பந்தைப் போடாமல் ஏமாற்றினாரோ அவர் கையிலிருந்து உணவு சாப்பிட வரவில்லை. அவைகளுக்கும் உதவுபவர், உதவாதவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டு நல்லவரைத் தேர்ந்தெடுக்கும் சக்தி இருப்பது தெரியவந்தது.
காடுகளிலும் கூட எந்த குரங்கு உதவுகிறதோ அவைகளையே மற்ற மிருகங்கள் பின்பற்றுகின்றன. அற உணர்வின் தோற்றம் (Origin of Morality) பற்றி ஆராஅய்ந்த (Frans de Waal of Emory University, Georgia) அறிஞர் இதை முன்னரே தெரிவித்தார். மனிதர்களைப் பார்த்து அவைகள் கற்றுக் கொள்கின்றன என்று.
ஒப்புநோக்கு உள்ளவியல் நிபுணரான ஆண்டர்சன் சொல்கிறார்:-
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டால் அவைகள் முகம் சுழிப்பது இதிருந்து புரிகிறது”

ஆகையால் தோழர்களே!
நீங்கள் நாய்கள் வளர்க்கிறீர்களோ, குரங்குகள் வளர்க்கிறீர்களோ , அல்லது குழந்தைகளைத்தான் வளர்க்கிறீர்களோ அவைகளுக்கு முன்னால் எதையும் அசிங்கமாகச் செய்துவிடாதீர்கள்!
நான் லண்டனில் கூட ரயில்களில் பல குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவைகள் பேசும் பேச்சு எனக்கு வியப்பூட்டும். வீட்டில் அப்பா, அம்மா என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே அவை திருப்பிச் சொல்லுகின்றன!
Journal reference: Neuroscience & Biobehavioral Reviews, DOI: 10.1016/j.neubiorev.2017.01.003