மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்! (Post No.3748)

Written by S NAGARAJAN

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:-  5-43 am

 

 

Post No.3748

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள் என்று கூறிய விஞ்ஞானி இல்யா!

by .நாகராஜன்

 

நீடித்த வாழ்க்கையின் ரகசியம் இரண்டு தொழில்துறை வாழ்க்கையைக் கொள்வது தான்! 60 வயது வரை ஒன்று, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இன்னொன்று!”டேவிட் ஒகில்வி

 

மனிதன் இயல்பாகவே 150 ஆண்டுகள் வாழலாம் என்று அடித்துக் கூறிய விஞ்ஞானி ஒருவர் உண்டு. அவர் பெயர் இல்யா இலிசி மெக்னிகோவ் (Ilya Ilyich Mechnikov). (தோற்றம் 15-5-1845 மறைவு 15-7-1916)

 

இள வயதிலேயே அனைவரையும் அசர வைக்கும் அபார மேதையாக அவர் திகழ்ந்தார்.

 

ரஷியாவில் கார்கோப் என்ற நகரின் அருகில் உள்ள குக்கிராமம் ஒன்றில் பிறந்த அவர் சிறு வயதிலேயே இயல்பாகவே அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தி வந்தார். தன் சகோதரர்கள், இதர சிறு குழந்தைகளை தன் முன்னே உட்கார வைத்து சொற்பொழிவாற்றுவார்.

 

 

தாவரவியல், நிலவியல் ஆகிய இரண்டும் அவருக்குப் பிடித்த விஷயங்கள். நான்கு வருடம் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு வருடங்களிலேயே முடித்த அவரிடம் அவரது பேராசிரியர்கள் உனக்குச் சொல்லிக் கொடுக்க ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டனர். 16ஆம் வயதில் நிலவியலில் ஒரு பெரிய பாட புத்தகத்தையே எழுதி முடித்தார். பல் ஆய்வுப் பேப்பர்களை எழுதி விஞ்ஞானிகளின் உலகில் தனக்கென ஒரு பெய்ரை ஏற்படுத்திக் கொண்டார்.

 

 

இவரது மண வாழ்க்கை சற்று சோகமானது. செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் தனது முதல் மனைவியான லுட்மிலாஃப்யோடோரோவிட்சை அவர் சந்தித்தார். காச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த லுட்மிலாவை திருமண தினத்தன்று சர்ச்சுக்கு ஒரு நாற்காலியில் அமர வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவரைக் காப்பாற்ற ஐந்து ஆண்டுகள் அரும்பாடு பட்டார் இல்யா. ஆனால் பலனில்லை அவர் இறந்து போகவே அந்த சோகத்தாலும் கண்பார்வை மங்கிப் போனதாலும் தான் வேலை பார்த்த பல்கலைக் கழகத்தில் பல வித பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் மனமுடைந்து போனார். அளவுக்கு அதிகமாக போதைப் பொருளான ஓபியத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால் மரணமடையவில்லை.

 

 

1880இல் இரண்டாம் முறையாக மணந்து கொண்டார். இந்த இரண்டாம் மனைவிக்கு டைபாய்டு ஜுரம் வரவே அவர் உடல்நிலை மிக மோசமானது. ஆகவே இந்த முறையும் மனமுடைந்து போன இல்யா புது விதமாக மரண்மடையத் தீர்மானித்தார். ஜுரத்தை மீண்டும் வருவிப்பதற்காக டைபாய்டு கிருமிகளை உடலில் ஏற்றிக் கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தார்.

 

 

ஆனால் இந்த  முறையும் அவர் பிழைத்தார். இரண்டாம் அலெக்ஸாண்டர் கொலை செய்யப்பட்டு நாட்டு நிலவரம் சரியில்லாமல் போகவே ரஷ்யாவை விட்டு மெஸினா என்ற இடத்திற்குச் சென்றார். பின்னர் வியன்னவில் பேராசிரியர் க்ளாஸ் என்பவரைக் கண்டு தன் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கூறி அவரால் உத்வேகம் பெற்றார்.

 

 

அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர் கண்டு பிடித்தார்.பாகோஸிடோஸிஸ் எனப்படும் நோய்க்கிருமி விழுங்கி அழிக்கப்படும் முறையை அவர் கண்டு பிடித்தார்.

ஒடிஸா என்ற நகரில் வாழத் தொடங்கிய அவர் உலகின் முதல் பாக்டீரியா சோதனைக் கூடத்தை ஆரம்பித்தார். ஆனால் அரசியல் நிலைமையின் காரணமாக அவர் இருந்த நகரான ஒடிஸாவில் அவரால் நீடித்து வாழ முடியவில்லை.

நிலைமை மிக மோசமாகவே லூயி பாஸ்டர் இருந்த பாரிஸ் நகரம் நோக்கிச் சென்று அவரது லேபரட்டரியிலேயே ஆய்வைத் தொடர்ந்தார். இறுதி வரை அங்கேயே இருந்தார்.

 

 

முதுமையின் மீது அவரது ஆராய்ச்சி திரும்பியது. முதுமையும் தொடர்ந்து வரும் மரணமும் உடலில் மைக்ரோப்களாலு மற்றும் இதர நச்சுப் பொருள்களாலும் விஷ சத்து ஊட்டப்படுவதாலேயே என்பதைக் கண்ட அவர் வெவ்வேறு நாடுகளில் வாழும் மக்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றனர் என்ற ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

 

உடலில் நச்சுத் தன்மை ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று அவர் ஆராய்ந்தார்.  நீண்ட ஆய்வின் முடிவாக, தயிரைச் சாப்பிட்டு ஒரு மனிதன் 150 ஆண்டு காலம் வாழலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். பல்கேரியத் தயிரை சாப்பிடுங்கள்; உடலில் நச்சுத் தன்மை ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். வலுவுடன் 150 ஆண்டுகள் வாழலாம் என்று அவர் கூறினார். தானும் பல்கேரியத் தயிரை சாப்பிட ஆரம்பித்தார்.

 

 

ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் அவரால் நீண்ட நாள் வாழ முடியவில்லை. தனது 71ஆம் வயதிலேயே இறக்க நேரிட்டது.

150 வயது வாழ வழி சொன்னவர் இப்படி ‘அகால மரணம்’ அடையவே அவரது கொள்கைக்கு விஞ்ஞான உலகில் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.

 

என்றாலும் கூட, நோய் இயல், நோய் தடுப்பியல், பாக்டீரியா இயல் என இப்படிப் பல்வேறு துறைகளிலும் அவர் செய்த ஆய்வு தான் நோய் தடுப்பிற்கான முன்னோடி ஆய்வுகளாகும்.

இன்று உலக மக்கள் நோய்களிலிருந்து துரிதமாக நிவாரணம் அடைய அந்த அபூர்வ மேதையே காரணம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

நோபல் பரிசு பெற்ற பிரப்ல விஞ்ஞானி பாரத் ரத்னா சர் சி.வி.ராமன் (தோற்றம் : 7-11-1888 மறைவு: 21-11-1970) 1967ஆம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் த்லைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆய்வு விஞ்ஞானிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

 

அந்தச் சமயம் அவர் பங்களூரில் உள்ள தனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் அசத்தினார்.

 

 

உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, “ சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றும் கூறவில்லையே” என்று கேட்டார்.

 

 

 

இடக்கான இந்த கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.

ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.

“அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள். ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்” என்றார்.

அரங்கம் அனைவரின் கரவொலியாலும் அதிர்ந்து போனது.

அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உட்பட!

***

 

Leave a comment

Leave a comment