மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27 (Post No.3780)

Written by S NAGARAJAN

 

Date: 2 April 2017

 

Time uploaded in London:-  11-23 am

 

 

Post No.3780

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27

 

பாரதியார் பற்றி நினைவு மஞ்சரியில் உ.வே.சாமிநாதையர்!

 

by ச.நாகராஜன்

 

 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின்.நினைவு  மஞ்சரி ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் முதல் பாகத்தில் பத்தாம் கட்டுரையில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி தனது குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் மஹாகவி பாரதியார் பற்றி வ்ரும் பகுதி சுவாரசியமானது. அதை கீழே காணலாம்..

 

ஒருநாள் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி. ஏ. வைத்திய ராமையர் அன்று ‘தமிழின் பெருமை’ என்னும் விஷயத்தைப்பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத் திற்கு வந்திருந்தனர். ஸ்ரீ சுப்பிமணிய பாரதி யாரும் வந்திருந்தார்.

கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், ‘இவர் மிழைப்பற்றி என்ன  பேசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டு மானாற் பேசுவார்’ என்று நினைத்தார்கள். உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத்தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர் பேசலானார்:

தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷை யிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை, ஆழ் வார்கள் திவ்யப்பிரபந்தம் பாடியதும் இதிலேதான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவேயில்லை” என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். அவருடைய பேச்சில் ஒரு பெருமிதமும் கம்பீரமும் இருந்தன. யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத் தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவ ருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது.

கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தை களும் பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை உரைத்து வந்தார்.

அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ண சாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித் தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப்பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப்பற்றிப் பாடத் தொடங்கினார்.

 


செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”


என்பது ஒரு செய்யுள்.

கம்பன் இராமயணம் செய்த பாஷை; திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை’ என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு”


என்றும்,


வள்ளுவன் றன்னை யுலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென் றோமணி யாரம் படைத்த தமிழ்நாடு”


என்றும் பாடினார்.

இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெருமகிழ்ச்சியை அடைந்தார். பாரதி யாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச்செய்து அவற்றைச்சேர்த்து ஆயிரக்கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுள் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர், பாரதியாருடைய கொள்கைகளிற் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறே பலவேறு கொள்கைகளையும் பல வேறு பழ்க்கங்களையும் உடையவர்களாக இருப்பினும் தமிழ் முதலியவற்றில் அறிவுடையவரென்பது தெரிந்தால் மற்றவற்றையெல்லாம் மறந்து பாராட்டு வது கிருஷ்ணசாமி ஐயரது இயல்பு.

 

நினைவு மஞ்சரி நூலை முழுதுமாகப் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தொடுப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0432.html

 

அதில் பத்தாம் கட்டுரையையும் முழுதுமாகப் படிக்கலாம்.

 

 

இந்த நினைவு  மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ள ப்ராஜக்ட் மதுரை என்ற தளம் அருமையான தளம். அதில் சிறந்த தமிழ் நூல்களைப் படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

 

இங்கு, இந்த நல்ல பணியைச் செய்த தமிழ் அன்பர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்ல வேண்டியது கடமை அல்லவா!

***

 

Leave a comment

Leave a comment