மருந்தே யாயினும் விருந்தோடுண் (Post No.3802)

Written by London swaminathan

 

Date: 9 APRIL 2017

 

Time uploaded in London:- 6-42 am

 

Post No. 3802

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“மருந்தே யாயினும் விருந்தோடுண்” என்பது கொன்றைவேந்தன் அறிவுரை. இது அவ்வையார் இயற்றியது.

 

இந்த இடத்தில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

1.மருந்தாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடாதே. சாப்பிடுவத ற்குச் சற்று முன்னரோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அந்த மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால பலன் அதிகம் கிடைக்கும் என்பது மேம்போக்கான பொருள்.

 

2.ஆயினும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் மருந்து என்பது அமிர்தம் என்று தெரியவரும். ஏனெனில் வள்ளுவரும் இதே கருத்தைச் சொல்லுகிறார்:-

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று – குறள் 82

பொருள்:

ஒரு விருந்தினர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில்  உங்கள் கையில் சாவா மருத்து (அமிழ்தம்) கிடைத்தாலும் அதைத் தனியே சாப்பிடுவது விரும்பத் தக்கதன்று.

 

வள்ளுவர் சொல்லும் கருத்து புறநானூற்றில்(182)  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  சொன்ன கருத்துதான்:

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே.

 

புற நானூற்றுக் காலத்திலேயே இந்திரர் அமிழ்தம், அது தொடர்பான கதைகள் எல்லாம் தமிழருக்கு அத்துபடி! ஏனெனில் பாரதம் முழுதும் ஒரே பண்பாடு!!

 

விருந்தினர் ஒன்பது

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

 

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

வியத்தல்

அட, அதிசயமே: எங்களைப் போன்ற ஏழை எளிய வர் குடிசைக்கெல்லாம் வரமாட்டீங்கன்னு நினைச்சோம்; எங்களையும் ஒரு பொருட்டா மதிச்சீங்களே, அதுவே பெரிய சந்தோஷம்

நன்மொழியினுரைத்தல்

வீட்டில எல்லாரும் சௌக்கியமா? உங்க உடம்பெல்லாம் எப்படி இருக்கு; முன்னைவிட கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்களே.

திருந்துற நோக்கல்

இதைச் சொல்லும் போது கனிவான , அன்பான பார்வை இருக்க வேண்டும். கடனெழவுக்குச் சொல்லக்கூடாது.

வருகென வுரைத்தல்

உள்ள வாங்க, முதல்ல; அப்புறம் எல்லாம் பேசுவோம்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்னால், நல்லா சாப்பிடுங்க; இவ்வளவு குறைச்சலா சாப்பிடுறீங்களே; இப்ப புரியுது ;நீங்க ஏன் இளைச்சிருக்கீங்கன்னு; நல்லா சாப்பிடுங்க. அடியே! இவருக்கு இன்னும் கொஞ்சம் பாயசம் கொண்டா.

மற்றவன் றன் அருகுற விருத்தல்

அவர் அருகிலேயே மரியாதையுடன் அமர்ந்திருக்க வேண்டும்

போமெனிற் பின்செல்வதாதல்

அவர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது அவர் பின்னால் ஏழு அடி நடந்து சென்று அவரை வழி அனுப்ப வேண்டும் . ரிக் வேதம் இதைச் சொல்கிறது. அதனால்தான் கல்யாணத்திலும் புதுமணத் தம்பதிகள் ஏழு அடி (சப்தபதி) நடந்து செல்வர். கரிகால் சோழன் இப்படி 7 அடி நடந்து போய் வழியனுப்பியதாகச சங்க இலக்கியம் செப்பும் (என்னுடைய பழைய கட்டுரையில் ஏழு அடி மஹிமை பற்றிக் காண்க)

பரிந்துநன் முகமன் வழங்கல்

கடைசியாக அவர் விடை பெறும்போது அவரைப் புகழ்ந்து பல வாக்கியங்கள் சொல்ல வேண்டும். “இன்றைக்கு நாங்கள் நரி முகத்தில் முழித்தோம் போல; தங்களைப் போன்ற பெரியோர் வந்து எங்களை ஆசீர்வதித்ததற்கு நன்றி. இது எங்கள் பாக்கியமே; அடிக்கடி வாருங்கள்; அடுத்த முறை வருகையில் வீட்டில் எல்லோரையும் அழைத்து வரவேணும். மிக்க நன்றி

 

 

விருந்தினருக்கு ஒன்பது கொடுங்கள்!

தவிசு தாள் விளக்கப் புனல்தமக்கியன்ற

அடிசில்பூந்தண்மலர்ப் பாயல்

உவகையினுறையும் இடனுகர் தெண்ணீர்

ஒண்சுடர் எண்ணெய் வெள் ளிலைகாய்

இவைகளொன்பதுந்தன் மனைவயினடைந்தோர்

மகிழ்வுற வினிதனில் அளித்தல்

நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட கடன்

— காசிகாண்டம்

 

 

1.ஆசனம்

2.கால் கழுவ தண்ணீர்

3.முடிந்த அளவு உணவு

4.நல்ல படுக்கை, பாய்

5.இருக்க இடம்

6.தெளிந்த தண்ணீர்

7.விளக்கு

8.எண்ணெய்

9.வெற்றிலை,பாக்கு

இந்த ஒன்பதையும் இல்வாழ்வான் (கிருஹஸ்தன்) என்பவன் , விருந்தாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

–Subham–

 

Leave a comment

Leave a comment