லிப்ஸ்டிக்! ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! (Post No.4020)

Written by S NAGARAJAN

 

Date: 21 June 2017

 

Time uploaded in London:-  5-44  am

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்ப சித்திரம்

 

இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

 

ச.நாகராஜன்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தில் ஏராளமான சுவையான செய்திகளைத் தந்துள்ளான்.

 

உற்றுக் கவனித்து ரசிப்போர் வியப்பது நிச்சயம்.

எடுத்துக்காட்டாக அவன் லிப்ஸ்டிக்கையும் ஸ்டிராவையும் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லலாம்.

 

இருபதாம் நூற்றாண்டில் நவ நாகரிக மங்கையர்  மேக் அப் செய்து கொள்ளூம் போது லிப் ஸ்டிக்கைப் பூசாமல் இருப்பது இல்லை.

 

இந்த உதட்டில் பூசும் அழகிய சாயம் பற்றி கம்பன் குறிப்பிடும் பாடல் இது:

 

 

குண்டலக் குழைமுகக் குங்கும கொங்கையார்

வண்டலைத் தெழுகுழற் கற்றைகால் வருடவே

விண்டலத் தகவிரைக் குமுதவாய் விரிதலால்

அண்டமுற் றுளதவூ ரழுதபே ரமலையே

     (அக்ககுமாரன் வதைப் படலம் பாடல் 42- வை.மு.கோ பதிப்பு)

 

 

இப்பாட்டின் பொருள் : குண்டலமென்ற காதணி அணிந்த செவி உடைய முகத்தையுடைய குங்குமக் குழம்பை அணிந்த மார்பகம் கொண்டவரான இராக்ஷஸ மகளிர்  வண்டுகளை அலையச் செய்து  மேல் எழுப்பப் பெற்ற கூந்தல் தொகுதி அவிழ்ந்து காலகளிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க நறுமணமுள்ள ஆம்பல் போன்ற செம்பஞ்சு ஊட்டிய வாய்களை திறந்து விரிவதனால் அந்த இலங்கையில் உள்ளார் அழுத பெரும் குரலோசை மேல் உலகம் வரை எட்டிற்று.

 

 

இலங்கை ராக்ஷஸ மகளிர் செம்பஞ்சுக் குழம்பை வாயில் அழகுக்காகப் பூசியதை கம்ப சித்திரம் காட்டுகிறது.

சிந்தாமணியிலும் கூட ‘அம்மலரடியுங்கையும் அணி கிளர் பவளவாயும் செம்மலர் நுதலு நாவும் திருந்தொளி யுகிரோடங்கே, விம்மிதப்பட்டு வீழ வலத்தகமெழுதியிட்டாள் என்று வருகிறது.

 

 

அலத்தகக் குமுதம் என்பது செங்குமுதம் ஆகும். அந்தக் காலத்திலேயே மகளிர் அனைவரும் செம்பஞ்சுக் குழம்பை வாயில் பூசிக் கொள்வது வழக்கம்  என்பது தெரிய வருகிறது.

அலத்தகம் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது!

 

 Ms Lalita malar maniam of Kualalumpur enjoying tender coconut water with a straw.

 

ஆக லிப்ஸ்டிக்கை சுந்தர காண்டத்தில் கூறிய கம்பன். நாம் இன்று இளநீர் குடிக்கவும், குளிர் பானங்களைக் குடிக்கவும் பயன்படுத்தும் ஸ்டிரா பயன்பாட்டையும் பால காண்டத்தில் உண்டாட்டு படலத்தில் குறிப்பிடுகிறான்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

 

வான் துணை பிரிதலாற்றா வண்டினம் வச்சை மாக்கள்

ஏன்றமா நிதியம் வேட்ட விரவல ரென்ன வார்ப்பத்

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தன ணுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்.

        (பாடல் 19)

 

 

தசரதனுடன் மிதிலை நோக்கிச் சென்றது அவனது சேனை.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறுகிறான் கம்பன்.

 

பிரிய மாட்டாமல் ஆகாயம் வரை வண்டுகள்  மொய்த்துக் கொண்டிருக்கின்றன.கஞ்சனிடத்தில் இருக்கின்ற பெருஞ்செல்வத்தைக் கேட்க வந்துள்ள யாசகர்கள் போல அந்த வண்டுகள் ஆர்ப்பரிக்க சேனைக் கூட்டத்தில் சென்ற ஒருத்தி  தேனைச் சொரிகின்ற தாமரை மலர் போல உள்ள தனது செந்நிற வாயைத் திறந்து  மதுவைப் பருகுவதற்குக் கூசி, செங்கழுநீரின் உள் துளையுள்ள தண்டினால் கிண்ணத்தில் இருந்ததை உறிஞ்சிப் பருகலானாள்.

மதுவைப் பருக நாணிய அயோத்தி மங்கை செங்கழுநீரின் உள் துளை உள்ள தண்டை ஸ்டிராவாகப் பயன்படுத்தினாள். அந்தத் துளை வழியே மதுவை உண்டாள்.

 

 

ஆக லிப்ஸ்டிக்கும், லிப் மூலமாக உறிஞ்சிக் குடிக்கும் ஸ்டிராவும் கூட கம்ப சித்திரத்தில் இடம் பெற்று விட்டதை எண்ணி ரசிக்கலாம்; மகிழலாம்.

 

போகிற போக்கில் கம்பன் தரும் சின்னச் சின்ன தகவல்கள் இவை.

அந்தக் காலத்திலேயே லிப்ஸ்டிக்; அந்தக் காலத்திலேயே ஸ்டிரா!

அழகு தானே!

****

Leave a comment

Leave a comment