
Written by S NAGARAJAN
Date: 12 July 2017
Time uploaded in London:- 5-31 am
Post No.4073
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
நாட்டைக் காக்கும் நல்லோர்கள்
செட்டியார்கள் வாழ்க!
ச.நாகராஜன்

செட்டியார்கள் வாழ்க என்ற தலைப்பைப் பார்த்தவுடன் நீ ஒரு செட்டியாரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலைத் தான் நான் சொல்ல வேண்டி வரும்.
செட்டியார்களை செட்டியாராக நான் இல்லாத போதும அனைவரும் வாழ்த்த வேண்டும் என்றே சொல்வேன்.
ஒரு ஹிந்துவாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக செட்டியாரை வாழ்த்துவதில் பெருமையுறுகிறேன்.
ஒரு அழியாத பாரம்பரியத்தை அப்படியே மரபு வழுவாமல் பாதுகாத்து வந்ததில் வருவதில் செட்டியார்களின் ப்ங்கு குறிப்பிடத் தகுந்தது.
எனவே அவர்கள் பெருமைக்குரியவர்கள். வாழ்த்துதற்குரியவர்கள்.
காசி முதல் இராமேஸ்வரம் வரை யாத்ரீகர்கள் தங்குதற்கு சத்திரங்கள் கட்டியவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்.
காசி விசுவநாதர் கோவிலில் காலை 4 மணிக்கு திருவனந்தல், 11-30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 9 மணிக்கு சாயரட்சை ஆகிய பூஜைகளும் அபிஷேக அலங்காரங்களும் இவர்களுடைய செலவில் சிறப்பாக இன்றும் செய்யப்படுகின்றன. சிவபெருமான், அன்னபூரணித் தாயார், விசாலாட்சி அம்மன், மற்றும் வாரணாசியிலுள்ள ஏனைய கோவில்களிலும் இவர்கள் கட்டளைகள் உள்ளன

வாரணாசிக்குச் செல்லுபவர்கள் கட்டாயம் பார்த்து இன்புறத்தக்க காட்சி விசுவநாதர் கோவிலில் நிகழும் மாலை ஆரத்தி அல்லது படா பூஜை. இது விரிவான சடங்காகவும், ஆடம்பரமாயும், மிகக் கவர்ச்சியாயும், தமிழ்நாட்டு மரபுப்படியும் செய்யப்படுகின்றது. தொன்று தொட்ட பெருமை மிக்க புனித வாரணாசி நகரின் தெய்வீக வாழ்க்கையில் மிக முக்கியமான எழில் கூடிய காட்சி என்று இதைக் கூறலாம்.
இந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் குறைவின்றி இனிது நடைபெறுவதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கல்கத்தாவிலும், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களின் நகரங்கள் சிலவற்றிலும் மூலதனம் வைத்துப் பெரிய கட்டளைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வாராண்சியில் குடோலியா என்னும் பகுதியிலுள்ள நாட்டுக்கோட்டைச் சத்திரம் (ஹிந்தியில் ‘நாட்கோட் ச்த்ரம் பவன்’ என்பர்) வானுயர்ந்த கல் கட்டிடம்; அதை அறியாதவர் எவரும் இல்லை. இந்த மாளைகையிலிருந்து நாள்தோறும் இருமுறை காலை 11 மணிக்கும் இரவு 8 மணிக்கும் கவின் மிக்க ஊர்வலம் ஒன்று விசுவநாதர் கோவிலுக்குப் புறப்படுகிறது.இந்தை ‘சம்போ’ என்பர்.அபிஷேகத்திற்குத் தேவையான பால், தேன்,பன்னீர், அலங்காரப் பொருள்கள், மலர்கள் ஆகியவை தமிழ் நாட்டு மங்கல இசைக் கருவியான நாதசுரம் முழங்க எடுத்துச் செல்லபப்டுகின்றன. அபிஷேகத்தின் போது தேவார இசைத்தட்டு விசுவநாதர் கோவிலில் ஒலிக்கிறது.
இந்த ஊர்வலம் ஒரு நாள் கூட, ஒரு தடவை கூடத் த்டைபடாமல் நடைபெற்று வந்திருக்கிறது.
1942-ம் ஆண்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் இந்திய நாட்டைப் பெருங் க்லவரத்திற்குள்ளாக்கியது. வாரணாசி நகரம் அந்நாளில் அமைதி குன்றி கொந்தளிப்பாக இருந்தது. ஊர்வலங்கள் தடைப்பட்டன. பலவிதமான கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போதுங்கூட சம்போ குறித்தபடி சென்ற வண்ணமாக இருந்தது, வாரணாசியின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கது.
(ஆதாரம்:- சோமலெ எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் என்ற நூலில் 42ஆம் பக்கத்திலிருந்து இந்த விவரம் இங்கு தரப்படுகிறது)
காசி விசுவநாதர் ஆலயம் மட்டுமல்ல, பல்வேறு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர்கள் செட்டியார்களே. தங்கள் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆலயத்திற்கென அர்ப்பணித்த சமூகம் செட்டியார் சமூகம்.
தங்குவதற்குச் சத்திரம், உண்பதற்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிய தயாளர்களின் குலம் செட்டியார் குலம்.

செட்டியார்களில் குறிப்பிடத் தகுந்தவர்களின் பட்டியலை எடுப்பது என்றால் அது பெரிய புத்தக் தொகுதியாக மாறும்.
என்றாலும் கூட நேதாஜியை முதன் முதலாகம் படம் எடுத்த ஏ.கே.செட்டியாரை மறக்க முடியுமா?
கம்பனில் மனதைப் பறிகொடுத்து முத்தையாவாக இருந்த கவிஞன் கண்ணதாசனாக மாறி தமிழை வளர்த்த கதையைத் தான் சொல்லாமல் விட முடியுமா?
கம்பனுக்காகத் தன் சொந்தப் பெயரான சா. கணேசன் என்பதை கம்பனடிப்பொடியாக மாற்றி கம்பனின் பெருமையைப் பரப்புவதே தன் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு சாதனை படைத்த சா. கணேசனை நினைக்காமல் இருக்க முடியுமா?
தமிழை வளர்த்த கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோரையும் அரசு பதவிகளிலும் வணிக நிறுவனங்களிலும், கல்வி நிலை தனி முத்திரை பதித்த ஏனையோரையும், பதிப்பகங்களில் மனதைச் செலுத்தி புத்தகங்களை ஆயிரக்கணக்கில் வெளியிடும் பலரையும், திரைப்படத் தயாரிப்பில் தன்னிகரற்று வலம் வரும் பலரையும் பட்டியலிட்டு மாளாது.
இன்று கணினியில் சாப்ட்வேர் துறையிலும் செட்டியார்கள் முன்னணியில் நிற்பதைப் பார்க்கலாம்.
தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த செட்டியார்கள் ஹிந்து மதத்தின் தவப் புதல்வர்கள்.
அவர்கள் சிறிதும் தடம் பிறழாமல் தங்கள் முன்னோர் வகுத்த வழியில் செல்ல மன உறுதி பூண வேண்டும்.
அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!