
Written by S NAGARAJAN
Date: 19 July 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.4094
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
மஹாத்மாவும் மகா கவியும்
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 35
மஹாத்மாவும் மகா கவியும்! – கல்கியின் கட்டுரைகள்!
ச.நாகராஜன்

பாரதியாரைப் போற்றி கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய தொண்டைத் தமிழ்நாடு நன்கு அறியும்.
அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு காந்தி பக்தராகத் திகழ்ந்ததோடு தனது கல்கி பத்திரிகையில் அவ்வப்பொழுது மஹாத்மாவைப் போற்றி சீரிய கட்டுரைகள் பலவற்றையும் எழுதி வந்தார்.
மஹாத்மாவும் மகாகவியும் என்ற நூல் மஹாத்மாவைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளையும் மகாகவிக்கு எட்டயபுரத்தில் எழுப்பப்பட்ட ஞாபகச் சின்ன விழா பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறது.
தலைப்பைப் பார்த்து மஹாத்மாவும் மகாகவி பாரதியாரும் சந்தித்த விஷயத்தையோ அவர்கள் தொடர்புடனான கட்டுரைகளோ இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைத்தவர் ஏமாந்தே போவர்.
காந்திஜி பற்றிய பத்து கட்டுரைகளும் பாரதியார் பற்றிய எட்டு கட்டுரைகளும் கொண்ட 103 பக்கங்கள் அடங்கிய இந்தச் சிறு நூல் 1957ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
வெளியிட்டோர் : பாரதி பதிப்பகம், தியாகராய நகர், சென்னை -17.
எட்டயபுரத்தில் நடந்த மாபெரும் விழா பற்றி மனம் நெகிழ்ந்து வந்தனம் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை பாரதியார் பற்றிய எட்டுக் கட்டுரைகளில் முதலாவதாக அமைகிறது.
அதில் கல்கி கூறுகிறார்: “ என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின்படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.
அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.

அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம் கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.
கல்கி அவர்கள் தனது சக பத்திரிகாசிரியர்களுடன் தான் நடத்திய விவாதங்களைக் குறிப்பிட்டு அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அனைவரும் இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்புக் கொடுதததற்கு நன்றி தெரிவிக்கிறார்.
“ஸி.ஆர்.சீனிவாசன் அவர்களைப் போன்ற பத்திரிகாசிரியர்களும் வ.ரா போன்ற எழுத்தாளர்களும் மற்றும் பல தமிழன்பர்களும் பல காலமாகச் செய்து வந்த இடைவிடாத பாரதி பிரசாரத்தின் பலனாகத்தான் இப்போது எட்டயபுர ஞாபகச்சின்னம் ஏற்படுகின்றது” – கல்கியின் இந்த வார்த்தைகள் தமிழ்நாடே ஒரு மனதாக மகாகவிக்கு ஞாப்கச்சின்னம் அமைப்பதில் ஈடுபட்டிருந்ததை உணர வைக்கிறது.
அடுத்த கட்டுரை புதுச்சேரியில் பாரதி விழாக் கொண்டாட்டம் நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.
விண்ணுலகில் இருக்கும் பாரதியாரை வ்.வே.சு ஐயர் புதுவைக்கு அழைத்து வருகிறார். ஒரே கோலாகலம். என்ன என்று கேட்கும் பாரதியாருக்கு வ்.வே.சு.ஐயர் “பாரதி விழாக் கொண்டாட்டம் நடக்கிற்து” என்று கூற பாரதியார்.”பாண்டியா! ஆச்சரியத்தினால் மூர்ச்சை அடைந்து விடுவேன்” என்கிறார்.
இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை 1945ஆம் ஆண்டு புதுவையில் நடந்த பாரதியாரின் கோலாகலக் கொண்டாட்ட விழாவை அழகுறச் சித்தரிக்கிறது.
அடுத்த கட்டுரை எட்டயபுரத்தில் என்ற கட்டுரை. பாரதியாரின் ஞாப்கச் சின்னத்திற்கு பிளான் போட்டுக் கொடுத்தவர் எஸ்.எம்.சித்தலே (F.R.I.B.A., F.I.I.A., A.M.T.P.T.) மகாராஷ்டிரா தேசத்தவர். இந்தியா தேசத்திலேயே பிரசித்தி பெற்ற நிபுணர்.
இவரைப் பற்றியும் நிதியைப் பற்றியும் விளக்குகிறது கட்டுரை.
அடுத்த கட்டுரை இரண்டு கவர்னர்கள். “ஹெர் எக்ஸலன்ஸி கவர்னர் சரோஜினி தேவியாரும், மேற்கு வங்க கவர்னர் ராஜாஜியும் மணி மண்டபத் திறப்பு விழாவிற்கு அக்டோபர் 12, 13 தேதிகளில் வரவிருப்பதைச் சுட்டிக் காட்டும் கட்டுரை.

இதோ ஒரு அற்புதம் என்ற அடுத்த கட்டுரை காணி நிலம் வேண்டும் என்று கேட்ட மகாகவிக்கு ஞாபகச் சின்ன மண்டபம் எழுப்பி தமிழ் மக்கள் அவரது காணி நில கோரிக்கையை நிறைவேற்றி விட்டன்ர் என்று கூறும் கட்டுரை!
பேசும் பொற்சித்திரம் என்ற கட்டுரை சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே பாடலின் சிறப்பைப் புகழ்ந்து கூறுகிறது.
கட்டுரையின் கடைசி பாரா:-
“எளிய, கொஞ்சும் தமிழில் பாடப்பட்ட இந்த ஒப்புயர்வற்ற கவிகள் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்; தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு மகாகவி அளித்த ஈடு இணையில்லாத பரிசு; உண்மையாகவே அட்சரலட்சம் பெறக் கூடிய பாடல்கள்.
அற்புதமான் இந்த கல்கியின் வரிகளே அட்சர லட்சம் பெறும்.
ஆனால் பாரதியாரின் இந்தப் பாடல் அவர் குழந்தைகளுக்கு அளித்த பரிசு மட்டும் அல்ல; உலகிற்கே அளித்த பரிசு. தமிழின் உயர்வுக்கு அளித்த பரிசு.
நீண்ட நீடூழி நெடுங்காலம் இந்தப் பாடலின் புகழ் ஓங்கி நிற்பதைத் தமிழர்கள் மனக்கண்ணால் உணரலாம்.
பாடுவோம் கொண்டாடுவோம் என்ற கட்டுரை பாரதி விழாக் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
கடைசிக் கட்டுரையான பாரதியாரின் இலட்சியங்கள் அவரது லட்சியங்களை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்ற நல்லுரையுடன் முடிகிறது.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாரதியாருக்கு உரிய விதத்தில் ஞாபகச் சின்ன மண்டபம் அமைக்க கல்கி எடுத்த முயற்சிகள் ஒரு பெரிய அரிய காரியம்.
அந்தப் பணியில் பாரத நாடெங்கும் உள்ள இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஓரணியில் இணைந்தனர். கல்கியின் கனவு நனவாயிற்று.
பாரதி இயலில் பாரதியார் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்ச்சி எப்படி ஏற்பட்ட்து என்பதை விளக்கும் ஒரு நூல் இது.
பாரதி அன்பர்களுக்கு கல்கியின் வெல்லமெனத் தித்திக்கும் தமிழ்க் கட்டுரைகள் இதில் உள்ளன.
போனஸாக அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய கட்டுரைகள் வேறு! படித்து ஆனந்திக்கலாம்!
***