விபூதியின் மகிமை பற்றி நீதி வெண்பா! (Post No.4231)

Written by London Swaminathan

 

Date: 21 September 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4231

 

Pictures are taken from various sources; thanks.

 

நீதி வெண்பாவை யார் எழுதினார் என்பது எவருக்கும் தெரியாது. ஆயினும் இதில் அருமையான பாட்டுகள் உள. பல கட்டுரைகளில் இவற்றைக் கொடுத்து வருகிறேன். திரு நீறு பற்றி ஒரு நல்ல பாட்டு உள்ளது. இதை சம்பந்தர் தேவாரம், திருமூலரின் திரு மந்திரத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்.

 

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல் — ஆரமிர்த

சஞ்சீ வியைவிடுத்தே சாகா திருப்பதற்கு

நஞ்சே புசித்ததுபோ நாடு

 

பொருள்:

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்து – சிறப்பான வெண்ணீற்றினால் நெற்றிக்குத் திருக்குறி இடுதலை விட்டுவிட்டு

பேரான முத்தி பெறவிரும்பல்- மேன்மையாகிய வீடு பேற்றை அடைய ஆசைப்படுதல்

ஆரமிர்தசஞ்சீ வியைவிடுத்து – அருமையான அமிர்தம் என்னும் சஞ்சீவி மூலிகை போன்றதை விட்டுவிட்டு,

சாகா திருப்பதற்கு நஞ்சே புசித்ததுபோக- சாகாமல் இருப்பதற்கு நஞ்சையே உண்டது போலாகும்

நாடு – நீ ஆராய்ந்து பார்

 

கருத்து- கடவுளை வழிபட்டு வீடு பேறடைவதற்குச் சைவமும் திருநீறுமே தக்கனவாம்.

 

திரிபுண்டரம்=உயிர்களுக்குற்ற மூன்று மலங்களும் எரிக்கப்பட்டமைக்கு அறிகுறியாக நெற்றியில் மூன்று கோடாக இடப்படும் நீற்றுக்குறி.

திருமந்திரம்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

–திருமந்திரம் 1666

 

 

பொருள்:

எலும்பு மாலையை அணிந்த  சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒளியானது கெடாமல் பூசி மகிழ்வீரானால் முன் வினைகளும் உங்களிடம் தங்கா.

 

சிவகதியும் உங்களை வந்தடையும்.  ஆனந்த மான திருவடியை அடையலாம்.

கங்காளன்= சிவன்; எலும்பு மாலையை அணிந்தவன்.

 

சம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை திரு ஆலவாய்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்  திருஆலவாயான் திருநீறே.

 

முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது  நீறு

சித்தி தருவது  நீறு திரு ஆலவாயான் திருநீறே

 

 

இந்தப் பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. இரண்டு மட்டும் மேலே உளது. எளிய தமிழில் இருப்பதால் பொருள் தேவை இல்லை.

 

-சுபம்–

 

Leave a comment

Leave a comment