கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பன் கவி இன்பம்-4 (Post No.4239)

Written by S.NAGARAJAN

 

Date: 24 September 2017

 

Time uploaded in London- 5-29 am

 

Post No. 4239

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை

4082 – 15-7-17; 4088 – 17-7-17; 4103 – 22-7-17 – இந்த மூன்று கட்டுரைகளின் தொடர்ச்சியாக வெளியாகும் நான்காவது கட்டுரை இது.

 

பண்ணின் சுவை, பாவையரைக் கண்ட களிப்பு, ஞானியர் பெற்ற  இன்பம்- இவற்றைப் பொலிவிழக்கச்  செய்யும் கம்பன் கவிதை!

 

ச.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் அற்புதக் கவி உள்ளம் கம்பனின் பாக்களில் களித்ததோடு நம்மையும் களிக்க வைக்கிறது அழகிய் இனிய பாக்களால்.அவர் தரும் கவிதை வரிசையைத் தொடர்வோம்.

 

 

பாடல் 6

 

வேரி மாமணம் வீசும் தமிழணங்

காரும் ஆரமோ? ஆய்முத்தின் ஆரமோ?

பாரில் வானில் பயில்அழ கும்எழில்

சேரப் பூணும் செழுமணிப் பேழையோ?

 

உரை: (அன்றி இக்கம்பராமாயணத்தைத்) தேனையும் பெருமை பொருந்திய மணத்தையும் வீசுவதும் தமிழன்னை (தன் குழலில்) முடிப்பதுமாய ஒரு பூவாரத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி  அம்மாதா ஆய்ந்தெடுத்துத் தன் மார்பில் அணியும் ஒரு முத்து வடத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி, உலகத்தினிடத்திலும், வானத்தினிடத்திலும் நிரம்பிய அழகெல்லாம் (திரண்டு ஓர் உருவாய பாவை) தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பூணும் இரத்நாபரணங்களைச் சேமித்து வைக்கும் ஒரு பெட்டியோடு ஒப்பிடுவேனோ?

 

 

பாடல் 7

ஓசை இன்பம் ஓர் ஊற்றெடுத் தேமனம்

மாச யின்றிடா வாறு வருதலால்

பூசை இன்பப் புனிதர்க்கும் மேற்புலன்

ஆசை இன்ப அமுதினை ஊட்டுமால்

 

உரை: (இக் கம்பராமாயணக் கவியில் அமைந்த அழகிய) ஓசையினால் வரும் இன்பம் ஒரு ஊற்றெடுத்துப் பாய்ந்து (மனிதர்களுடைய) மனதில் அழுக்கே படியாத வண்ணம் (அதனைப் புனிதமாக்கிச்) செல்லுவதால் சரீர இன்பங்களைப் புல்லியவெனத் தள்ளி தெய்வ வணக்கமே தமக்கு இன்பமாகக் கருதும் பரிசுத்த மஹான்களுக்கும் கூட கண் காது என்னும் இரண்டு உயரிய கலைப்புலன் வழி பருகும் இன்னமுதப் பாய்வில் அஃது ஆசையை உண்டு பண்ணா நிற்கும்.

 

பாடல் 8

 

கூறில் அண்டரும் கொண்ட அமுதினால்

ஈறில் வாழ்க்கையை எய்தினரே னும்கைம்

மாறில் லாமகிழ் மீறுகம் பன்கவிப்

பேறிலா தின்றும் பேதுற் றழுங்கினார்

 

உரை: (இவ்வுலகத்தாரையும் வானுலகத்தாரையும் ஒப்பிட்டுச்) சொல்லுமிடத்து தேவர்கள் தாம் பெற்றுக் கொண்ட அமிர்தத்தினால் மரணமில்லாப் பெரு வாழ்க்கையை அடைந்தனரேயாயினும், இவ்வுலகத்தார் பெற்றுக் கொண்டது போல அவ்வாழ்க்கையை மகிழ்ச்சியாற் சிறப்புறும்படி செய்யக் கம்பனுடைய காவியம் என்னும் பெருஞ்செல்வத்தைத் தாமும்  பெற்றுக் கொள்ளவில்லையே என்று இன்றும் மனம் குழைந்து அலக்கண் உறுகின்றனர்.

பாடல் 9

 

பூவின் மென்மை பொலிவற் றிழிவது

காவின் தண்மை கனன்று தெறுவது

கோவின் தேசெதிர் கூசிக் குலைவது

பாவிற் பாவெனும் கம்பன்மெய்ப் பாட்டினால்

 

உரை: உண்மையான கவியினிமை ஒழுகிக் கவிக்கும் கவியாய் விளங்கும் கம்பன் கவித்தொகையின்  முன்னிலையில் பூவின் மெல்லிய குணமும் அழகிழந்து கீழடைகின்றது; செறிமரக்காவின் குளிர்ச்சியும் கொதித்துச் சூடா நிற்கின்றது; விலையுயர்ந்த ரத்தினங்களின் ஒளியும் ஒளியிழந்து மழுக்கம் அடைகின்றது.

குறிப்பு:- ‘மெய்ப்பாட்டினால்’ என்னும் தொடருக்கு உத்தம கவிஞனாம் கம்பன் தன்னுள்ளக் கருத்தை அல்லாது மனதிற் கற்பிதம் செய் பொருளைத் தன் கவியை வாசிப்போருக்கு அதில் நிரப்பும் சொற்களினால் கண்கூடாதல் செய்யும் வல்லமையும் பெற்று விளங்கினன் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

பாடல் 10

 

 

பண்ணில் வந்த சுவையையும் பாவைமார்

கண்ணில் வந்த களிப்பையும் ஞானியர்

எண்ணில் வந்தநல் லின்பையும் கம்பன்பா

நண்ணி வந்த நலம்நனி தீய்க்குமால்

 

உரை:- கம்பனுடைய கவியோடு பொருந்தி விளங்கும் அழகு, இராகங்களில் நின்றெழும் ஒலியின்பத்தையும், வனப்பு வாய்ந்த மாதர்களைக் கண்ணுறுவதாற் பொறிவழிப் புகுந்து பெருகும் இன்பத்தையும் தத்துவ ஞானிகள் தமது அந்தக்கரண வாயிலாய் அடைந்து அனுபவிக்கும் உயரிய இன்பத்தையும் அழகு கெட்டு இன்பிழக்கச் செய்கின்றது.

*

சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஓசையின்பத்தையும் தரும் ஐந்து பாடல்களில் கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜபிள்ளை

கம்பனது கவி தமிழன்னையில் கூந்தலில் முடிக்கப்பட்டிருக்கும் பூவாரமா என வியக்கிறார்.

அவனது கவிதையில் எழும் ஓசை தரும் இன்பம்  ஐம்புலனை வென்ற மஹான்களுக்கும் கூட கண் மற்றும் செவியின் மீது ஆசையை உருவாக்கும், என அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

 

மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற தேவர்களும் கூட இவ்வுலகில் பிறந்து கம்பனுடைய காவியத்தை ரஸிக்க முடியவில்லையே என்று ஏங்குவர் என்று கூறுகிறார்.

 

பூவின் மென்மை பொலிவை இழக்கும்;  காட்டின் குளிர்ச்சி போய் விடும்; ரத்தினங்கள் ஒளி இழக்கும் – கம்பன் பாட்டின் முன்னே என்று வியந்து கூறுகிறார்.

 

பண்ணில் வந்த சுவை, அழகிய மகளிர் கண்ணில் பட அதனால் ஒருவன் பெறும் இன்பம்,  ஞானியர் அந்தக்கரணத்தில் அனுபவிக்கும் இன்பம் ஆகிய அனைத்தும் கூடக் கம்பன் கவிக்கு முன்னர் அழகு கெட்டு இன்பத்தை இழக்கும் என்று கம்பனை ரஸித்துக் கூறுகிறார்.

 

 

சும்மா சொல்லி விடவில்லை கவிஞர் கே.என்,சிவராஜ பிள்ளை; அனுபவம் பேசுகிறது; அதில் கம்பனின் மஹத்தான தமிழ் தாண்டவம் ஆடுகிறது!

ரஸியுங்கள். அமரரும அடைய முடியா இன்பம் பெறுங்கள்.

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

Leave a comment

Leave a comment