
Written by London Swaminathan
Date: 29 September 2017
Time uploaded in London- 7-49 am
Post No. 4255
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.
கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி
கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவ ரின் புறப்பட்டா ரிவர்கணிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி யா ரூமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே
–நாலாம் திருமுறை- தேவாரம், அப்பர்

மூவர் அருளிய தேவாரத்தைப் பல கோணங்களில் படிக்கலாம்.
சம்பந்தர் தன்னைப் பாடினார்
அப்பர் என்னைப் பாடினார்
சுந்தரர் பெண்ணைப் பாடினார்
என்று சிவன் சொல்லுவதாக சிலர் சொல்லுவர்; இது ஒரு கோணம்
தேவாரத்தில் வரும் இயற்கை வருணனை, சிவ பெருமானின் லீலைகள் வருணனை, திருத்தலங்களின் சிறப்பு, அவர்கள் செய்த அதிசயங்கள பற்றிய பாடல்கள், வரலாற்று உண்மைகள், சம்பவங்கள், திருநீறு முதலிய சின்னங்களின் மகிமை, தமிழ் மொழி அழகு, எதுகை, மோனை, பழமொழிகள், அக்காலத் திருவிழாக்கள் — என்று நாம் விரும்பும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நான் படித்தவரை, அதிசய நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தர் தேவாரமும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அப்பர் தேவாரமும் மிக உதவும் என்று கண்டேன்.
சங்கம் பற்றியும், தருமி பற்றியும் அப்பர் பாடியதால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு புகழ்பெற்ற காட்சி நம் கண்களுக்கு முன்னே வருகிறது (திருவிளையாடல் சினிமாவிலும் காணலாம்)
நரியைப் பரியாக்கிய சம்பவத்தை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சொன்னதால், மாணிக்க வாசகப் பெருமான் , அப்பருக்கும் சம்பந்தருக்கும் சற்று முன்னர் வாழ்ந்தவர் என்பதையும் அறிகிறோம்.
மூவர் தேவாரமும் மணிவாசகப் பெருமானின் திருவாசகமும், 12 ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தமும், திருமூலரின் திருமந்திரமும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை . பல அதிசயச் செய்திகள் நிறைந்தவை; பாஸிட்டிவ் எண்ணங்களை உருவாக்குபவை.
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை ‘ — என்று சம்பந்தர் பாடியதைப் படிக்கையில் தற்காலத்தில் ராஜாஜி எழுதி எம்.எஸ். பாடிய “குறையொன்றுமில்லை, கோவிந்தா” என்ற பாடல் நினைவுக்கு வரும்.

சுருங்கச் சொன்னால் ரிக் வேதம், யஜூர் வேதம் போல எங்கே பார்க்கினும் பாஸிட்டிவ் எண்ணங்கள்! வீட்டில் ஒலித்தால் துன்பங்கள் யாவும் கரைந்துபோகும்.
ஒரு பாடலில் அப்பர் பெருமான கரும்பு பிடித்தவனுக்கும் இரும்பு பிடித்தவனுக்கும் என்ன நேர்ந்தது என்று பாடி, “ஏ, சிவ பெருமானே உனக்கு கரும்பு பிடிக்காதா? இரும்புதான் பிடிக்குமா?” என்று வியக்கிறார்.
சிவ பெருமானைப் பாடுகையிலும் கூட அரைத்த மாவையே அரைக்காமல் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லி விடுகதை போடுகிறார் திருநாவுக்கரசர்! நாவுக்கு அரசன் அல்லவா?
இதோ பாடலின் முழுப்பொருள்:–
கரும்பு பிடித்தவர்= மன்மதன்; சிவனால் எரிக்கப்பட்டவர்
இரும்பு பிடித்தவர் = சண்டேசுவர நாயனார்; சிவன் அருள் பெற்றவர்
சுவையான கரும்பாகிய வில்லை உடைய மன்மதனை எரித்து, இரும்பாகிய கோடலியைக் கொண்ட சண்டேசுவரருக்கு அருள்பாலித்த – மகிழ்வித்த — பெருமான் ஈசன் — பொழில் சூழ்ந்த ஆரூரில் வீற்றிருப்பவனே! எனக்கும் உம்மைப் பிடிக்கும்; யாது வேண்டுவது? உமக்கு கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?
–subam–