மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40 (Post No.4278)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 5–19 am

 

 

Post No. 4278

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40

மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் – சீனி.விசுவநாதன் எழுதியுள்ள ஆய்வு நூல்

 

by ச.நாகராஜன்

 

மகாகவி பாரதியார் சமீப காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கூட அவரைப் பற்றிய செய்திகள் பல தவறாகவே உள்ளன.

இதற்குக் காரணம் பல.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தம் நினைவிலிருந்து கூறிய தகவல்கள் பல. இவற்றில் காலப் பிழை, இடப் பிழை, கருத்துப் பிழை ஆகியவை உள்ளன. இது இயல்பே.

பல செய்திகள் அரசு ஆவணங்களில் புதைந்துள்ளன. பல கட்டுரைகள், கவிதைகள் பழைய கால பத்திரிகைகளில் மறைந்துள்ளன.

இதையெல்லாம் சரி பார்த்து உள்ளதை உள்ளபடி தொகுப்பது உண்மையிலேயே பெரிய காரியம்.

இதற்கு கட்டுக்கோப்பான, நல்ல பண வசதி படைத்த நிறுவனம் ந்ல்லோரால் நடத்தப்பட வேண்டும்.

அது இதுவரை இல்லை.

ஆகவே இந்தக் குறையைப் போக்க பல பாரதி ஆர்வலர்கள் தம்மால் இயன்ற பணியைச் செய்துள்ளனர்.

எந்த வசதியும் இல்லாத குறையை நினைத்துப் பார்த்தால் இது ஒரு இமாலய முயற்சி தான்.

இந்த இமாலய முயற்சியில் ஏறி வெற்றி பெற பல டென்சிங்குகள் முயன்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த பல டென்சிங் ஒருவர் சீனி.விசுவநாதன்.

பாரதி அன்பர்கள் இகுகளில்வரை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இவரது அரிய படைப்புகளில் ஒன்று – மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள்.

272 பக்கங்கள் முதல் பதிப்பு வெளியீடு 1984ஆம் ஆண்டு.

முழு நூலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்படவில்லை.

செய்திகளின் தொகுப்பையே காண்கிறோம். நல்ல முறையில் பொருள்வாரியாக இதைப் பிரித்தால் நன்றாக இருக்கும்.

முதல் பகுதி மகாகவி பாரதி: சில புதிய உண்மைகள் (115 பக்கங்கள்)

அடுத்த பகுதி : சிந்தனைக்குச் சில (157 பக்கங்கள்)

ஏராளமான செய்திகள் அள்ளிக் குவிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.

நம்முடைய்  ஆர்வத்திற்கேற்ப நாம் தான் உரிய முறையில் அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுவையான பல செய்திகளில் சிலவற்றின் விவரம் கீழே தரப்படுகிறது. :

1) பாரதியார் கவிதைகள் பதிப்பு வரலாறு மிகவும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

2) சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன், கர்மயோகி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ள பாரதி படைப்புகளின் அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.

3) ஏராளமான கவிதைகளின் தலைப்புகள் மாறி இருப்பதை சீனி. விசுவநாதன் சுட்டிக் காட்டுகிறார்.

4) ஆங்கிலம் மற்றும் வங்க மொழிப் பாடல்கள் ஒன்பதை பாரதி மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றின் பட்டியலை நூலில் காணலாம்.

5) பாரதி தன் கைப்பட எழுதிய கைப்பிரதிகளின் அடிப்படையில் 90 பாடல்களின் பட்டியலும் நூலில் இடம் பெற்றுள்ளது.

6) பாரதியின் கண்ணம்மா பாடல்களில் செல்லம்மா என்ற வார்த்தையே கவிதைகளில் முதலில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் “அப்பாதுரை மாமா விருப்பப்படி செல்லம்மா என்று வந்த் இடங்கள் எல்லாம் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது” என்பதை ச்குந்தலா பாரதி எழுதியுள்ளார்.

7) பாரதியார் தம் பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று தெளிவு படுத்தியுள்ளார். அவரே எழுதியுள்ள சில பாடல்களின் ராகப் பட்டியலையும் நூலில் காண்கிறோம்.

8) காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் தலைப்பில் முதலில் பராசக்திக்கு ஒரு புலவன் வேண்டுகோள் என்று பாரதி எழுதியிருந்தார். பின்னர் அதை நீக்கி விட்டு காணி நிலம் என்பதையே தலைப்பாக ஆக்கி விட்டார்.

9) பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரது பாடல்கள் சில தெலுங்கு மொழியில் பெயர்க்கப்பட்டன. பிரான்ஸ், இங்கிலாந்து கவியரசர்கள் பார்தி பாட்டை மொழி பெயர்த்தனர். அயர்லாந்து க்விஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்பவர் பாரதியாரின் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

10) என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலை ஆங்கில அரசு மும்முறை மொழிபெயர்த்தது. அந்தப் பாடலின் ஆங்கில வடிவத்தை நூலில் பார்க்கலாம்.

 

11) தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் – ஓர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் தேசபக்தன் வருஷமலரில் திரு எ.எஸ்.நாகரத்தினம் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். ஆனால் என்ன முயன்றும் அது கிடைக்கவில்லை. இப்படி பல அரிய கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் சீனி.விசுவநாதன்.

12) பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட வரலாற்றை நூலில் காண்கிறோம்.

13) குரு கோவிந்தசிம்ஹன் விஜயம் இந்தியா பத்திரிகையில் நான்கு வாரங்கள் தொடர்ந்து பிரசுரமானது. இந்தப் பாடலின் வரலாறை நூலில் காணலாம். லண்டனில் நடந்த குருகோவிந்த சிங்கினுடைய விழா பற்றிய செய்தியை வ.வெ.சு ஐயர் பார்தியாருக்கு அனுப்ப அதைப் பிரசுரித்த பாரதியார் தன் பங்கிற்கு குரு கோவிந்த சிம்ஹ விஜயம் என்ற கவிதையைப் புனைந்து அதைப் பிரசுரித்தார்.

14) ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ பாடலில் இல்லாத கண்ணிகள் நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன – அதன் வரலாறுடன்.

15) நூலின் இறுதியில் “நான் செய்த தவறுகள்” என்ற தலைப்பில் சில தகவல்களைத் தான் “கண்மூடித்தனமாகப்” பின்பற்றித் தந்ததைச் சுட்டிக் காட்டும் சீனி.விசுவநாதன் ஆய்வின் களம் விரிய விரிய தனது தவறுகள் புலப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்  கொள்கிறார்.

இது தான் ஆராய்ச்சியின் நேர்மை.

பாரதியைப் பற்றிய விரிவான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் காலப் போக்கில் கிடைக்கும் கூடுதல் தகவல்கள் -ரஸமான செய்திகள் – உள்ளிட்டவற்றைக் கொண்டு பாரதி நூல்கள் பற்றிய ஆராய்ச்சி விரிவாக நடைபெறலாம்; நடைபெற வேண்டும்  என்று தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார் ஆசிரியர்.

பாரதி ஆர்வலர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.

ஏற்கனவே தாங்கள் படித்தவற்றுள் இருப்பதை “நேர் செய்து” கொள்ள இது ஒரு செய்திக் கருவூலம்.

உடனடியாக இதை பாரதி நூல்களுடன் வீட்டில் சேர்த்து விடலாம்.

***

 

Leave a comment

Leave a comment