
Written by S.NAGARAJAN
Date: 19 NOVEMBER 2017
Time uploaded in London- 6-17 am
Post No. 4410
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரம் தோறும் வெளியாகிறது பாக்யா வார இதழ். அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 39வது கட்டுரையாக 17-11-17 இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.
ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!!
ச.நாகராஜன்
“எதிர்காலம் தங்கள் கனவுகளின் அழகில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே உரித்தாகுகிறது” – எலினார் ரூஸ்வெல்ட்
இன்று உலகையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கும் புத்தகம் ஸூனிஷ்! (Soonish)
ஜாக் மற்றும் கெல்லி வெய்னர்ஸ்மித் (Zach and kelly Weinersmith) எழுதியுள்ள இந்தப் புத்தகம் 17-10-2017 அன்று தான் வெளியிடப்பட்டது.
உலகையே மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்களைப் பற்றி அப்படிப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை நேரடியாகச் சந்தித்து விவரங்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளனர் இந்த இரட்டையர். இவர்கள் தம்பதிகள் என்பது ஒரு சுவையான விஷயம்.
இதில் ஜாக் கார்ட்டுன் வரைவதில் பெயர் பெற்றவர். மனைவி கெல்லியோ ஒரு விஞ்ஞானி. ஒட்டுண்ணியியல் வல்லுநர். (Parasitologist). ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
விண்வெளியில் இனி பறக்கப்போகும் ராக்கட்டுகளின் வடிவமைப்பு எப்படி இருக்கும், ஆஸ்ட்ராய்டுகளில் சுரங்கம் தோண்டி விலை மதிப்புள்ள தாதுப்பொருள்களை எடுத்தல், ஃப்யூஷன் பவர், கம்ப்யூட்டர் மூளை இணைப்பு, ரொபாட்டுகளின் வடிவமைப்பு, சிந்தடிக் பயாலஜி, உடலின் புது அங்கங்களை பிரிண்ட் போட்டுக் கொள்ளுதல் என்பன போன்ற பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி இந்த நூல் விரிவாக விளக்குகிறது.
விண்வெளித் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொண்டால் இன்று விண்ணில் செலுத்தப்படும் ராக்கட்டுகள் ஒரு முறையே செலுத்தப்பட முடியும். ஆனால் எதிர்கால ராக்கட்டுகள் மீண்டும் மீண்டும் விண்ணில் பறக்கத் தக்கவையாக அமைக்கப்படும் ஸ்பேஸ் எலிவேடர் எனப்படும் விணிவெளித் தூக்கி விண்ணில் செல்வதை எளிதாக்கும்!

ஜெர்வின் ஷால்க் (Gerwin Schalk) என்ற விஞ்ஞானியை இந்த இரட்டையர் சந்தித்தனர். ஷால்க் மூளையைக் கம்ப்யூட்டருடன் இணைக்கும் ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறார். அவர் சொல்லும் விவரம் யாராலும் நம்ப முடியாத அளவு பிரம்மாண்டமான விஷயம். இப்போது க்ளவுட் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் போல உலகில் தோன்றியுள்ள மனிதர்களின் அனைத்து மனங்களும் ஒரு க்ளவுடில் இணைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு மனிதரும் அவரது மூளையை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் இறக்கி விடுவார். அதனால் உலகில் பிரம்மாண்டமான மாறுதல் ஏற்படும்.
உடல் அங்கங்களில் குறைபாடு கொண்டவர்களுக்கு மூளை- கம்ப்யூட்டர் இணைப்பு அந்தக் குறைபாடைப் போக்கி விடும்!
ஜெனிடிக் துறை எனப்படும் மரபியல் சம்பந்தமான முன்னேற்றங்களோ வியத்தகு அளவில் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை நிரந்தரமாக அளிக்கும்.
ஜோர்டான் மில்லர் (Jordan Miller) என்ற விஞ்ஞானி அங்கங்களை பிரிண்ட் (Organ printing) போடுவது பற்றி இவர்களிடம் விளக்கினார். இந்த விஞ்ஞானி திசுக்களை வளர்க்கிறார் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.
எதிர்காலத்தில் மனிதர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?
ஒருவர் தனக்குத் தனது கை பிடிக்கவில்லை என்றால் அதை அவரே எரித்துக் கொண்டு, பிடித்த முறையில் கையை டிசைன் செய்து கொண்டு அதை பிரிண்ட் போட்டு கையை உருவாக்கிப் பொருத்திக் கொள்ளலாம். இப்படியே ஒவ்வொரு அங்கமும் உடலில் பொருத்தப்படப் போகிறது!
பறக்கும் கார்கள் என்பதில் மட்டும் 80 வகைகள் இன்றைய ஆய்வில் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது சாத்தியமான ஒன்றாக ஆகி உலகின் போக்குவரத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிச் சாதனை படைக்கும்.
நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி அத்தியாயத்தின் முக்கிய விஷயத்தை விளக்கும். மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைப்பது என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் எப்படி அவை இணைக்கப்படும், இதுவரை அப்படி ஏன் இணைக்க முடியவில்லை என்பன போன்ற செய்திகள் இடம் பெறும். இரண்டாவது பகுதி இந்த முயற்சியில் தோல்விகள் எப்படி ஏற்படலாம் என்பதை விளக்கும். மூன்றாவது பகுதி இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் போது அது எப்படி உலகை மாற்றும் என்பதை விளக்கும். நான்காவது பகுதி நகைச்சுவை ததும்ப கார்ட்டூன்கள் மூலம் இந்த இரட்டையர் ஆய்வின் போது எதிர்கொண்ட நிகழ்வுகளை விளக்கும். நூலில் கார்ட்டூன்களுக்குப் பஞ்சமில்லை.
இந்த மாறுதல்களால் ஒழுக்க சம்பந்தமான ஏராளமான பிரச்சினைகள் எழப் போகின்றன. அங்கங்களை டொனேஷன் தருவது, நினைத்தபடி தனது உடல் அங்கங்களை மாற்றிக் கொள்வது போன்றவை சட்ட சம்பந்தமான பிரச்சினைகளை மட்டும் தரப்போவதில்லை; வாழ்க்கை முறையின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கே ஒரு சவாலை விடப் போகின்றன.
மொத்தத்தில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மனிதனை ஒரு புதிய வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்லப் போகின்றன.
இதை ஒரே வரியில் சொல்வதென்றால் மனிதன், பிரமிக்க வைக்கும் சூப்பர் மனிதன் ஆகப் போகிறான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

பிரபல ஹாலிவுட் நடிகையான ஹெடி லமார் ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, பெரிய விஞ்ஞானியும் கூட. (ஏற்கனவே இந்தத் தொடரில் இவரைப் பற்றிய சில துணுக்குச் செய்திகளைப் பார்த்திருக்கிறோம்.) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதரான இவர் தொலைத் தொடர்பு அமைப்பில் புதிய முறைகளைக் கண்டு பிடித்து நேச நாடுகளுக்கு உதவினார்.
அவரது தந்தை ஒரு வங்கி அதிகாரி. அவர் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆர்வத்துடன் லமாருக்குச் சொல்வார்.
ஹிட்லரின் கொடுமைகள் தாங்காமல் யூதர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியது போல லமாரும் தப்பி ஓடினார். ஆனால் அவர் தனது தாயாரைப் பற்றி வெகுவாகக் கவலைப்பட்டார்.
யூதர்கள் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் தப்பித்து கப்பல் மூலமாக ஓடும் போது ஹிட்லர் குண்டுகள் வீசி அவர்கள் கப்பல்களை அழித்தான். லமார் ஒரு இரகசியமான சங்கேத முறையிலான தொலைத்தொடர்பு முறையை அமைத்து நேச நாடுகளுக்குத் தந்தார். இந்த அமைப்பில் உள்ள ரேடியோ சிக்னல் மூலமாக நேச நாடுகளின் போர்க்கப்பல்கள் தங்கள் டார்பிடோகளைக் கட்டுக்குள் வைக்கும். இந்த அமைப்பு கப்பலிலிருந்து வெளியே செல்லும் ரேடியோ சிக்னல்களின் அலைவரிசையை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் நாஜிகளின் போர்க்கப்பல்களுக்கு நேச நாட்டின் கப்பல்கள் இருக்குமிடம் சரியாகத் தெரியாமல் போனது. அவர்களின் சிக்னலை ஜாம் செய்து, செய்தித் தொடர்பையும் நாஜிக்களால் தடுக்க முடியாமல் போனது. இதனால் நேச நாடுகளின் கப்பல் படைகள் வலுவுள்ளதாக ஆயின.

லமாரின் கணவர் நாஜிக்களுக்கு போர் தளவாடங்களை சப்ளை செய்து வந்தவர். ஆஸ்திரியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கு முன்னர் தன் கணவரிடமிருந்து நாஜிக்களின் டார்பிடோ வகைகளைப் பற்றியும் அவற்றின் வடிவமைப்பையும் நன்கு அறிந்து கொண்ட லமார் தனக்கே உரிய விஞ்ஞான அறிவின் மூலமாக நேச நாடுகளுக்கு புது டார்பிடோவை வடிவமைத்துக் கொடுத்தார்.
இது நாஜிக்களின் வடிவமைப்பை விடச் சிறந்ததாக அமைந்தது.
நடிகை ஒருவர் உலகப் போரில் விஞ்ஞானியாக சேவை செய்தது ஒரு அதிசயமான செய்தி!
***