
Written by S.NAGARAJAN
Date: 30 NOVEMBER 2017
Time uploaded in London- 7-02 am
Post No. 4445
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 3
முதல் இரு கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17
இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17
ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?
ச.நாகராஜன்

அத்வைத விளக்கத்தில் ராக, த்வேஷாதிகளைப் பற்றிப் பார்ப்போம்
*
ஐயா, அத்வைத விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்.மூன்று கரணங்கள் என்று சொன்னீ ர்கள் அல்லவா, அவற்றிற்கு ஸ்வயமாகவே கர்த்ருத்வம் உண்டா?
ஸ்வயமாக இல்லை. ராக, த்வேஷாதிகளால் பிரேரேபிக்கப்படுவதனால் உண்டாகிறது.
அப்படியா? ராக, த்வேஷாதிகள் எவை?
ராக,த்வேஷாதிகள் மொத்தம் பதினாறு.
ராகம், த்வேஷம், காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம், ஈருஷை, அசூயை, டம்பம், தருப்பம், அஹங்காரம்,
இச்சை, பக்தி, சிரத்தை என இவை பதினாறாகும்.
இவற்றைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!
ராகம் – பெண்களிடத்தில் சித்த விருத்தி
த்வேஷம் – அபகாரம் செய்தவனுக்கு பிரதியாக திருப்பிச் செய்ய ஆசைப்படுதல்
காமம் – பூமி, வீடு உள்ளிட்டவற்றை வாங்க, சம்பாதிக்க விரும்பல்
குரோதம் – மேற்படி இச்சையை அடைய எதிர்ப்பவரிடம் கோபித்தல்
லோபம் – பொருளை நல்ல காரியத்திற்காகச் செலவழிக்க விரும்பாமல் இருத்தல்
மோஹம் – பணச்செருக்கால் இன்னதைச் செய்யலாம், இன்னதைச் செய்யக்கூடாது என்பதை யோசிக்காமல் மந்த புத்தியுடையவனாக இருத்தல்
மதம்- செல்வச் செருக்கால் தன்னால் செய்ய முடியாத காரியமே இல்லை என்று எண்ணுதல்
மாச்சரியம் – செல்வத்தினால் தனக்குச் சமமாக இருக்கும் ஒருவனைக் கண்டு பொறாமை கொள்ளல்
ஈருஷை – பிறருடைய துக்கம் அவரை விட்டு நமக்கு எப்படி வந்தது என்று எண்ணுகிற சித்த விருத்தி
அசூயை – சுகம் தனக்கே உள்ளது (உரித்தானது), மற்றவர்க்கு இல்லை என்று எண்ணும் சித்த விருத்தி
டம்பம் – ஒரு தர்மம் செய்யும்போது அதில் தனக்கு பிரசித்தி அதிகம் உண்டாக வேண்டுமென்ற சித்த விருத்தி
தருப்பம் – தனக்குச் சமமானவனே இல்லை என்று எண்ணுதல்
அஹங்காரம் – சகல விஷயத்திலும் தனக்குச் சக்தி உண்டு என்று எண்ணுதல்
இச்சை – உண்ணல், கழிதல், கருமம் செய்ய விரும்பல்
பக்தி – குரு, நல்லோர், தேவதைகள் ஆகியோரிடமும் வேத வாக்கியத்திலும் ப்ரீதி கொள்ளல்
சிரத்தை – யாகம் முதலிய கர்மங்களில் நம்பிக்கை கொள்ளல்
இந்தப் பதினாறில் இச்சையைத் தள்ளுவது அசாத்தியம்; (முடியாத காரியம்)
பக்தி, சிரத்தை ஆகிய இரண்டையும் அனுஷ்டித்து, மற்ற பதிமூன்றையும் தள்ள வேண்டும்.

சரி, ஐயா, இந்த ராக, த்வேஷாதிகள் எதனால் வருகின்றன?
அபிமானத்தினால்
இந்த அபிமானம் எப்படி வருகிறது?
அவிவேகத்தினால்.
இந்த அவிவேகம் எப்படி உண்டாகிறது?
தனது உண்மையான சிதாத்ம ஸ்வரூபத்தை அனாதிகாலமாக மறைத்தலும், ஆத்ம ஞானத்தினாலேயே நிவிருத்தியாகத் தக்கதுமாகிய அனாதி அஞ்ஞானத்தினாலும்.
இந்த அஞ்ஞானம் எப்படி வந்தது?
இது அனாதி என்று வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் இதற்குக் காரணம் சொல்வது முடியாது.
இந்த அஞானம் ஆதி இல்லாதது என்றால், அந்தமும் அதற்குக் கிடையாஞ்தா?
அஞ்ஞானத்திற்கு ஆதி இல்லை, உண்மை தான். ஆனால் ஆதி இல்லாவிட்டாலும் கூட அந்தம் உண்டு. எப்படி என்று கேளுங்கள்,
பிராகபாவத்திற்கு ஆதியில்லை, அந்தமுண்டு.
பிராகத்வம்சபாவத்திற்கு ஆதியுண்டு, அந்தமில்லை.
ஒன்றுமே புரியவில்லை, சற்று விளக்கமாகக் கூறுங்கள்!
சொல்கிறேன்.
குடம் உண்டாவதற்கு முன்னர் குடம் இல்லை எனப்படும் அபாவம் வெகு காலமாக இருக்கிறது.
குடம் இல்லை என்னும் அபாவ வாக்கியம் எப்போது உண்டாயிற்று என்பது தெரியாத போதிலும் கூட, குடம் உண்டானவுடனேயே ஆதி இல்லை என்கிற அபாவ வாக்கியத்திற்கு அர்த்தம் உண்டாகி விடுகிறது.

இது தான் பிராகபாவம் எனப்படுகிறது.
அடுத்து, நசிக்கச் செய்வதால் இல்லாமை உண்டாகிறது.
எப்படி என்று பாருங்கள். குடத்தை உடையுங்கள்.குடம் உடைக்கப்பட்டவுடன் குடம் இல்லாமை உண்டாகிறது.
உண்டான இல்லாமைக்கு அந்தமில்லை.
ஆகையால் இதுவே பிராகத்வம்ஸாபாவம்.
ஆகவே, வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றால் உண்டாகும் வியாதிகளுக்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும், மருந்துகளினால் அவைகளை நீக்கிக் கொள்ள முயல்வது போல, அஞ்ஞானத்துக்குக் காரணம் தெரியாவிட்டாலும் கூட,ஞானத்தினால் அது நாசமாகிறது. இது உண்மையே!
இந்த அஞ்ஞானத்தின் ஸ்வரூப லக்ஷணம் எப்படிப்பட்டது?
அது சத்துமல்ல; அசத்துமல்ல. அவயவம் உள்ளதல்ல; அவயவம் இல்லாததுமல்ல. இவ்விரண்டும் சேர்ந்ததுமல்ல. சேராததுமல்ல.
அது அநிர்வாச்சியம். அதாவது வாக்கினால் சொல்லத் தகுந்ததல்லாதது. (சொல்ல முடியாத ஒன்று)
ஏனெனில், ஸ்தூல ஆகாயமே சூக்ஷ்மமானது.
அதிலும் சூக்ஷ்மம் (தன் மாத்திரை என்னும்) அபஞ்சீக்ருத ஆகாயம்,
அதிலும் சூக்ஷ்மம் சத்துவம் முதலிய குணங்கள்,
அவைகளிலும் சூக்ஷ்மம் அஞ்ஞானம்.
ஆகவே இப்படிப்பட்ட சூக்ஷ்மத்திற்கெல்லாம் மூல காரணமாக இருக்கின்ற காரணத்தினால் அவயவம் உள்ளதல்ல.
அன்றியும், அதுவே ஸ்தூல பதார்த்தமாகிய ஜகத்காரமாய் பரிணமிக்கின்ற காரணத்தினால் அவயவம் இல்லாததுமல்ல.
இப்படி அநாதியாகவுள்ள அஞ்ஞானத்தினால் அவிவேகமும் – அவிவேகத்தினால் அபிமானமும் – அபிமானத்தினால் இராக த்வேஷாதிகளும் – இராக த்வேஷாதிகளால் கர்மமும் – கர்மத்தினால் சரீரமும் – சரீரத்தினால் சம்சார துக்கமும் – ஆத்மாவுக்குப் பரம்பரமாக வருகிறது.

ஆஹா!, ஐயா புரிகிறது, நன்றி!
***