
Date: 26 DECEMBER 2017
Time uploaded in London- 5-53 am
Compiled by S NAGARAJAN
Post No. 4545
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 16
பாடல்கள் 102 முதல் 107
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்
அமரகவி (பாரதி)
ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ் மக்கள் செய்த வத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்துவோமே.
பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.
வேறு
உள்ளக் கருத்தையெல்லாம் உள்ளபடி யானிந்த
வெள்ளைக் கவியில் விளம்பினேன் -தெள்ளுதமிழ்
வெண்பாப் புலியும் விகடகவியுமெனக்
கண்பார்த்துக் காத்தல் கடன்
வேறு
பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! -அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான் அடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய் அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா!கவி
துள்ளும் மறியைப் போலே, துள்ளும் அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!- பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!
குயிலும் கிளியும்பாட்டில் கூவுமே, அடா! – மயில்
குதித்துக் குதித்துநடம் ஆடுமே, அடா!
வெயிலும் மழையுமதில் தோன்றுமே, அடா! – மலர்
விரிந்து விரிந்துமணம் வீசுமே,அ டா!
அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! – அவை
அழகான முத்தையள்ளிக் கொட்டுமே, அடா!
மலைமேலே மலைவளர்ந் தோங்குமே, அடா!
வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே, அடா!
(நீண்ட பாடல் தொடரும்)
அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.
பாட பேதம்- வரி 4 – பாரதியார் – பாரதியின்
பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (தோற்றம்: 27-7-1876 மறைவு: 26-9-1954) குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்தவர். பல்சுவைப் பாடல்களைப் பாடியுள்ள இவர் தொடாத துறைகள் இல்லை எனலாம். குழந்தை இலக்கியப் பாடல்களை ஏராளமாகப் புனைந்துள்ளார். பல நூல்களுக்கு ஆசிரியர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****