
Date: 26 DECEMBER 2017
Time uploaded in London- 6-04 am
Written by S NAGARAJAN
Post No. 4546
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 6
முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17
இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17
மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17
நான்காம் கட்டுரை எண் 4472 – வெளியான தேதி : 9-12-17
ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17
லக்ஷணா விருத்தி விளக்கம்!
ச.நாகராஜன்
மூன்று விருத்திகளில், முக்கிய விருத்தி, குணவிருத்தி ஆகியவை பற்றிப் பார்த்தோம். இனி லக்ஷணா விருத்தி பற்றிப் பார்ப்போம்.
*
லக்ஷணா விருத்தி என்றால் என்ன? அது எத்தனை வகை? உதாரணங்களுடன் விளக்குங்கள்.
ஜஹல் என்றால் விட்ட என்று பொருள்.
அஜஹல் என்றால் விடாத என்று பொருள்.
ஜஹல் லக்ஷணை, அதாவது விட்ட லக்ஷணை, அஜஹல் லக்ஷனை, அதாவது விடாத லக்ஷணை ஜஹதஜஹல் லக்ஷணை, அதாவது விட்டும் விடாத லக்ஷணை என்று இப்படி லக்ஷணை மூன்று வகைப்படும்.
விளக்கமாகப் பார்ப்போம்.
விட்ட லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.
சொன்ன வார்த்தை ஒன்றின் உண்மையான (வாஸ்தவமான) அர்த்தத்தை விட்டு விட்டு வேறு ஒரு அர்த்தத்தைக் கிரஹிப்பது விட்ட லக்ஷணையாகும்.
கங்கையில் கோஷம் (இடைச்சேரி) இருக்கிறது என்று சொன்னால்,கங்கையின் பிரவாகத்தோடு கூட கங்கையின் கரையில் இடைச்சேரி இருக்கிறது என்பதை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.
இனி விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.
சிவப்புக் குதிரையும் வெள்ளைப் பசுவும் ஓடுகின்றன என்று சொல்லும் போது,
சிவப்பு ஓடுகிறது என்றால் சிவப்புக் குதிரை ஓடுகிறது என்று அர்த்ததைக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்.
இனி விட்டும் விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.
அந்த, இந்த தேவதத்தன் என்றால், முன்னொரு நாள் காசியில் பார்த்த தேவதத்தனே, இப்போது காஞ்சிபுரத்தில் கண்டேன் என்று சொல்வதாகும்.
அந்தக் கால தேசம், இந்தக் கால தேசத்தோடு சமப்படுத்துவது அசாத்தியம் என்று கிரஹிப்பதாகும்.
நல்லது, ‘தத்துவம்’ என்ற இரண்டு பதங்களில் வாச்சியார்த்தம் எது? லக்ஷியார்த்தம் எது?
சொல்கிறேன்.
- மாயை, 2) மாயாபிரதிபிம்பன், 3) மாயைக்கு இருப்பிடமாகிய பிரம்மம் ஆகிய இந்த மூன்றும் சேர்ந்ததே ‘தத்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
- பிரம்மம் மட்டும் ‘தத்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.
‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் எது?
சொல்கிறேன்.
- அவித்தை, 2) அவித்தியாபிரதிபிம்பன், 3) அவித்தைக்கு இருப்பிடமான சாக்ஷி சைதன்னியம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே ‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
- சாக்ஷி கூடஸ்த சைதன்னியம் மாத்திரம் ‘த்வம்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.இது ஜீவேஸ்வரர்களுக்கு விரோதமானபடியால், அவர்களுக்கு உள்ள விருத்தாம்சத்தைத் தள்ளி, அவிருத்தாம்சமான பிரம்ம சைதன்னியமும், கூடஸ்த சைதன்னியமும் ஒன்றானபடியினால் பிரம்மம், கூடஸ்தன் இவர்களை லக்ஷியார்த்தமாகச் செய்தது அகண்டார்த்தமாகிய ஐக்கியமே. அதாவது மாயை, அவித்தை இந்த உபாதியைத் தள்ளுவதால், சச்சிதானந்த ஸ்வபாவ ஆத்ம வஸ்து ஒன்றே மிஞ்சும்.
பரமாத்மா, முன் சொன்ன சரீர த்ரய லக்ஷணன் என்றும் அவஸ்தா த்ரய சாக்ஷி என்றும் , பஞ்ச கோச வியத்ரிக்தன் என்றும் ,சச்சிதானந்த ஸ்வரூபன் என்றும் ஆக இப்படி நான்கு வித லக்ஷணைத்தைச் சொல்லுவானேன்? இதற்கான விளக்கமும், விவரமும் என்ன?
சரீர த்ரய விலக்ஷணமும், பஞ்ச கோச வியத்ரிக் தத்துவமுமே அதத்வியா விருத்தி லக்ஷணம், அவஸ்தா த்ரய சாக்ஷித்வம், தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்த ஸ்வரூப லக்ஷணம்.
அதத்துவிய விருத்தி லக்ஷணம் என்றால் என்ன?
ஆகாயம் முதல் சரீரம் வரையில் காணப்படும் வஸ்துக்களை ‘இதல்ல’, ‘இதல்ல’ என்று தள்ளி விட்டு மிஞ்சிய வஸ்து எதுவோ அதுவே ஆத்மா.
ஆத்ம வஸ்து எது?
இந்த பிரபஞ்சத்திற்கு இருப்பிடமாக எது இருக்கிறதோ அதுவே!
ஸ்வரூப லக்ஷணம் எது?
தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்தம் பூரணம், நித்தியம் ஆத்ம வஸ்துவே
சரீர த்ரயம் எவை?
(த்ரயம் என்றால் மூன்று என்று பொருள்)
1)ஸ்தூல 2) சூக்ஷ்ம 3) காரணம் என்பவையே!
ஸ்தூல தேகம் எது?
எல்லோருக்கும் ப்ரத்யக்ஷமாயும் (காணப்படுகிறவராயும்), அவயவங்களோடு கூடியதாயும் இருப்பதே ஸ்தூல தேகம் ஆகும்.
சூக்ஷ்ம தேகம் எது?
பதினேழு அவயவங்கள் கூடியதே சூக்ஷ்ம தேகம் ஆகும்.
காரண தேகம் (சரீரம்) எது?
அஞ்ஞானமே!
சரீரம் என்றால் என்ன?
நசிக்கிற வஸ்துக்களே!
ஸ்தூல தேகம் தான் அன்னபனாதிகள் இல்லாவிட்டாலும், வியாதி முதலிய ஸமயாதிகளில் நசிக்கும்.
சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகியவை எப்படி நசிக்கும்?
சூக்ஷ்ம தேகத்திற்கு இராக, த்வேஷாதி அந்தக்கரண விருத்தியினால் விரிதலும் அல்லது வளர்தலும், சுருங்குதலும் உண்டு.
இப்படி ஆவதே நசித்தல் ஆகும்.
காரண சரீரத்திற்கு ‘நான் ஜீவன்’ என்பதே விருத்தி.
நானே பிரம்மமாய் இருக்கிறேன் என்பது சுருங்கல். அதுவே நசித்தலாகும்.
சரீரம் என்பதற்கு இந்த விதமாகப் பொருள் செய்கிறீர்கள். சிலர் இதை தேகம் என்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?
தஹிக்கப் படுவது எதுவோ, அதாவது எரிக்கப் படுவது எதுவோ அதுவே என்று சொல் இலக்கண அர்த்தமாகிறது.
சரி, ஸ்தூல தேகத்தை அக்னி எரிப்பதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. சூக்ஷ்ம, காரண தேகங்களை அக்னி எப்படி எரிக்கும்?
தாப த்ரயம் என்னும் எரிச்சலினால்!
தாப த்ரயம் என்றால் என்ன?
மூன்று வித தாபம், எரிச்சல், துன்பம் ஆகியவையே
அந்த மூன்றும் எவை? சற்று விவரமாகச் சொல்லுங்கள்.
அத்யாத்மிகம்,
ஆதி தெய்வீகம்,
ஆதி பௌதிகம்
ஆகிய இந்த மூன்றில் அத்யாத்மிகம் என்பது ஜுரம், தலைவலி போன்றவை.
ஆதி தெய்வீகம் என்பது தெய்வச் செயலால் உண்டாகும் இடி, புயல் போன்றவை.
ஆதி பௌதிகம் புலி போன்றவற்றால் ஏற்படும் துன்பம் போன்றவையாகும்.
சூக்ஷ்ம தேகத்திற்கு பதினேழு அவயவங்கள் உண்டு என்று சொன்னீர்கள்? அவை என்னென்ன?
காது, மெய், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து.
சப்தம், ஸ்பரிஸம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து.
புலன்கள் ஐந்து.
மனம், புத்தி ஆகிய இரண்டு.
ஆக இந்த அனைத்தும் சேர்ந்ததே பதினேழு அவயவங்களாகும். இதுவே சூக்ஷ்ம சரீரம்.
நன்றி, ஐயா, நன்றி! இனி, பிராணன், மனம்,புத்தி ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கேள்விகளைக் கேட்கலாமா?
தாராளமாக! கேளுங்கள் உங்கள் கேள்விகளை!!
***