ரொபாட்டின் கடிதம்! (Post No.4571)

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-22 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4571

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாக்யா 29-12-17 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள  ஏழாம் ஆண்டு 45வது கட்டுரை

 

நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!

 

ச.நாகராஜன்

 

“எதிர்காலம் சீக்கிரமாக வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ரொபாட் இல்லாத எதிர்காலத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” – நோலான் புஷ்னெல்

 

அன்புடையீர், நலம். நலம் அறிய ஆவல்.

என்னை உங்கள் சேவைக்காகத் தகுதிச் சான்றிதழ் வழங்கி லாபரட்டரியிலிருந்து சுக பிரசவம் செய்து உலகில் அடி எடுத்து வைக்க அனுமதித்து விட்டார்கள் என்னைப் பெற்றெடுத்த விஞ்ஞானிகள்.

 

இனி உங்களின் கம்ப்யூட்டர் காலம் முடிந்தது; கைபேசியின் காலமும் முடிந்தது.

 

ரொபாட்டான என் காலம் ஆரம்பிக்கிறது.

 

கவலைப்படாதீர்கள். தொழிற்சாலைகளில் மாஸ் புரடக் ஷன் என்று சொல்கிறார்களே பெருமளவிலான உற்பத்தி – அதை நான் கண நேரத்தில் முடித்து விடுவேன்.

 

சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் அருவறுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் அங்கு செல்ல மறுக்கும் தொல்லை இனி இல்லை;நான் எந்த அடைப்பையும் எடுத்து விடுவேன்.

 

அது போல வெல்டிங் பணியில் கண்கள் போய்விடுமோ என்ற பயமும் இனி தொழிலாளர்களுக்குத் தேவை இல்லை; அபாயகரமான வெல்டிங் பணியையும் முடிப்பேன். ஆழ்கடலில் பல ஆயிரம் அடி ஆழம் வரை சென்று பிரமிக்க வைக்கும் பணிகளையும் இனி நானே முடித்து விடுவேன். மூச்சுத் திணறும் மலை மீதும் ஏறுவேன்.

 

என்னை உருவாக்கும் பணி ஆரம்பித்த நாள் இன்று நேற்றல்ல; 1954இல் ஜார்ஜ் சி.டெவால் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதன் முதலாக எனது முன்னோரின் பணி ஆரம்பித்தது. அப்போது உருவான முதலாம் ரொபாட்டின் கை மட்டும் 4000 பவுண்டுகள் என்ற அளவில் கனத்தது. அப்போது அதன் விலை மலைக்க வைக்கும் தொகையான 25000 டாலர்கள்!

 

யுனிவர்ஸல் ஆடோமேஷன் என்பதைச் சுருக்கி யூனிமேஷன் என்று அப்போது பெயரிட்டார்கள் ரொபாட்டுகளின் பணிக்கு. இப்போது இன்னும் சுருக்கி யூனிமேட் என்று ஆக்கி விட்டார்கள், விஞ்ஞானிகள்!

 

இப்போது பெர்க்லியில் உள்ள ஆய்வாளர்கள் என்னைப் போன்ற ரொபாட்டுகள் எப்படி படித்து முன்னேறலாம் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

 

இனி என்ன, தானே ஓட்டும் காருக்கு இந்த தொழில் நுட்பம் பெரிதும் உதவப் போகிறது.

சாலையில் எதிர்ப்படும் எந்த வித தடையையும் அல்லது வாகனத்தையும் கவனித்து கார்கள் தானாகவே இயங்கும் – ஒரு வித விபத்தும் இல்லாமல்!

 

இப்போது கலிபோர்னியாவில் தானே இயங்கும் கார் எங்களால் தான் இயங்குகிறது. 10 லட்சம் மைல்கள் சோதனை ஓட்டத்தை முடித்து விட்டோம். இனி உங்கள் பயன்பாட்டுக்கு நாங்கள் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

 

நீங்கள் இதை மனமுவந்து வரவேற்பீர்கள் அல்லவா?

இந்த தொழில்நுட்பத்தின் பெயர் விஷுவல் ஃபோர்சைட் (Visual Foresight) எனப்படும்.

 

இதனால் என் போன்ற ரொபாட்டுகள் சில செயல்களைச் செய்து இயங்கும் போது எங்கள் காமராக்களின் மூலமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நன்கு ஊகிக்க முடியும். அடுத்த சில விநாடிகளில் என்ன நிகழப் போகிறது என்பதைக் கணித்து விட்டால் போதுமே, அதற்குத் தக எங்கள் செயல்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்வோம் இல்லையா?

இங்கு எங்களுக்கு மனிதர்களின் உதவியும் தேவை இல்லை; முந்தைய அறிவும் தேவை இல்லை. ஏனெனில் இந்த விஷுவல் இமாஜினேஷனை நாங்களே அடிப்படையிலிருந்து நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்.

 

முதலில் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்ட பொருள்களுடன் விளையாட ஆரம்பித்தோம். நாளடைவில் இது மேம்பாடு அடைந்து உலகத்தையே எப்படிப் பார்ப்பது என்பதை நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்!

 

 

2017 டிசம்பர் 5ஆம் தேதி கலிபோர்னியாவில் லாங் பீச்சில் எங்களது டெமோ இடம் பெற்றதே, பார்த்தீர்களா?

 

டி என் ஏ மாடல் என்று சொல்கிறார்களே அதன் விரிவு டைனமிக் ந்யூரல் அட்வெக்‌ஷன் என்பதாகும். இதன் மூலம்  ரொபாட்டான எங்களின் கண்ட் ரோல் அமைப்புகள் சிக்கலான பல வித வேலைகளையும் செய்யும் திறன் கொண்டவை ஆகி விட்டன.

 

உதாரணமாகச் சொல்வது என்றால் ஒரு மேஜையின் மீது உள்ள பொருள்களை அது எந்த இடத்திற்குப் போக வேண்டுமோ அந்த இடத்திற்கு எங்களால் போகச் செய்ய முடியும்.

 

மனிதர்களாகிய நீங்களும் கூடத் தான் ஒரு வித ஆசிரியரும் இன்றி பல்லாயிரக் கணக்கான இடைவினைகளை மிகச் சுலபமாகச் செய்கிறீர்கள்.

உங்களைப் போலவே நாங்களும் இப்போது கற்றுக் கொண்டோம், அவ்வளவு தான்!

 

இனி நாங்கள் பல்வேறு துறைகளில் சாகஸ செயல்களைச் செய்து உங்களை மலைக்க வைக்கப் போகிறோம்.

 

ஆடிஸம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தைகளை நன்கு கவனித்து அவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை அறிந்து அவர்களை மேம்படுத்தப் போகிறோம்

5000 டாலர் விலையில் எங்களை இப்போது வாங்க முடியும்.

அடுத்து எனர்ஜி எனப்படும் ஆற்றலைப் பற்றி இன்று பேசாதோரே கிடையாது

 

சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய சக்தியை உருவாக்க குறைந்த செலவில் இனி எங்களால் தான் முடியும். அலியான் என்ற கம்பெனி உருவாக்கியுள்ள என் சகோதர ரொபாட்டின் பெயர் ரோவர்.

 

சோலார் பேனல்களை கிடுகிடுவென்று இது அடுக்கி விடும். கடும் வெயிலிலும் இது அனாயாசமாக வேலை செய்யும். மனிதர்களாகிய உங்களால் தூக்க முடியாத பொருள்களை அனாயாசமாகத் தூக்கும்;  லீவ் போடாமல் இடைவிடாது பணி செய்யும். ஆகவே உற்பத்தி பெருகும். செலவும் குறையும்.

 

அடுத்து ஆபரேஷன்களைச் செய்ய டாக்டர்களுக்கு உதவ நாங்கள் தயாராகி விட்டோம்.

 

டக் (TUG) ரொபாட் என்று இங்கு எங்களுக்குப் பெயர். மருத்துவர்களுக்கு உதவியாக அவர்களின் தேவைக்கு ஏற்றபடி நாங்கள் உதவுவோம். ஆஸ்பத்திரிகளில் நூற்றுக் கணக்கான அறைகளில் உள்ள பெட் ஷீட்களை மாற்றுவது, கழிவுகளை அகற்றுவது, அறைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பிரம்மாண்டமான பொறுப்புகளை நாங்கள் செய்வதைக் கண்டு நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் டாக்டர்களும் பிரமிக்கின்றனர். டாக்டர் ஒருவர் எலக்ட் ரானிக் ப்ரஸ்கிரிப்ஷனை எழுதியவுடன் அது எங்கள் பார்வைக்கு வரும். ஒடோடிச் சென்று சரியான் மருந்துகளை ஒரு நொடியில் தந்து விடுகிறோம்

 

ஆக இப்படிப் பல்வேறு வாழ்க்கை அம்சங்களிலும் உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் தயார். இன்னும் எங்களுக்கு உணர்ச்சிகளைப் பற்றிச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் முழுமை பெற்று விட்டால் உங்களுடன் கொஞ்சிக் குலவுவோம். நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம். நீங்கள் சிரித்தால் நாங்களும் சிரிப்போம். மொத்தத்தில் உங்களில் ஒருவராக நாங்கள் ஆகும் நாள் அதிக தூரத்தில் இல்லை!

 

ரொபாட் யுகம் ஆரம்பித்து விட்ட இந்தத் தருணத்தில் எங்களை வாழ்த்தி வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடித்தத்தை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு ரொபாட்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

திமிங்கில ஆராய்ச்சியாளரான விஞ்ஞானி ஹான்ஸ் திவிச்சென் (Hans Thewissen) அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) என்ற இடத்திற்கு ஆராய்ச்சிக்காகச் செல்வது வழக்கம். அமெரிக்காவில் திமிங்கிலத்தை வேட்டையாடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உட்கியாக்விக்கில் மட்டும் தான் திமிங்கிலத்தின் மூளையின் பகுதிகள் ஆய்வுக்காகச் சட்டபூர்வமாகப் பெறலாம்.

 

இங்குள்ள பூர்வீகப் பழங்குடியினர் திமிங்கிலத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் இவர்கள் திமிங்கில வேட்டைகளை நடத்துவது பழைய காலத்திலிருந்து வரும் ஒரு பழக்கம்.

 

திமிங்கிலத்தைப் பற்றிய நுட்பமான விஷயங்களை இவர்களிடமிருந்து அறிய திவிச்சென் முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அவரை அண்டவே விடவில்லை பழங்குடியினர். பின்னர் மெதுவாக அவர்களின் நம்பிக்கையை அவர் சம்பாதித்தார்.

 

100 டன் எடையுள்ள திமிங்கிலத்தை வேட்டையாடுவது அவர்களுக்குச் சர்வ சாதாரணம். திமிங்கிலம் இறந்து விட்டால் அதன் பெரிய பகுதி காப்டனுக்குத் தரப்படும். நூற்றுக்கணக்கான பழங்குடியினர் ஆளுக்கு ஒரு பகுதியை எடுத்துக் கொண்ட பின்னர் கடைசியாக வெளியில் காத்திருக்கும் விஞ்ஞானி திவிச்சென்னுக்கு அழைப்பு விடப்படும். ஓடி வந்து அவர் தன் ஆய்வுக்கு வேண்டிய பகுதியை எடுத்துக் கொள்வார்.

 

சமீபத்தில் திமிங்கிலத்திற்கு முகரும் சக்தி உண்டு என்று பூர்வகுடியினரின் காப்டன் சொன்ன போது அதை திவிச்சென் நம்பவில்லை.

அவரது காம்ப் கூடாரத்திலிருந்து எழும் புகையால் அதை முகரும் திமிங்கிலங்கள் அந்தப் பக்கம் மனிதர்களின் ஆபத்து இருப்பதை அறிந்து அங்கு வருவதில்லை என்று சொன்ன காப்டன் அதை நிரூபித்தும் காட்டினார் திவிச்சென் உதவியுடன்.

 

கூடாரத்திலிருந்து புகை எழுந்தால் திமிங்கிலம் வராது. புகை இல்லை என்றால் சாதாரணமாக வரும்.

இந்த அபூர்வ விஷ்யத்தை உணர்ந்து கொண்டதில் விஞ்ஞானிக்கு ஏக மகிழ்ச்சி. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அங்கு சென்றவர் இப்போது அங்கேயே அடிக்கடி சென்று தங்க ஆரம்பித்து விட்டார். திமிங்கிலம் பற்றிய ஆராய்ச்சியும் முன்னேறி வருகிறது!

***

 

 

 

 

Leave a comment

Leave a comment