
Date: 27 JANUARY 2018
Time uploaded in London- 6-51 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4666
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.
பாடல்கள் 214 முதல் 217
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
நா.சீ.வரதராஜன் பாடல்கள்
பாரதியின் பராசக்தி
ஆதார சக்தியினை, அணுவில், காற்றில்,
அனைத்திலுமே கலந்தவளை, அமுதை, ஞான
மாதாவை, பிணி தீர்க்கும் மருந்தை, வாழ்வில்
மலர்ச்சியினை, உயிர்ச்சுடரை, உணர்வை, பண்டை
வேதாகமம் சொல்லும் பொருளை, மூன்று
விதம்கிளைத்து வினைபுரியும் மூலத்தைத்தான்
நாதாந்த வடிவான சக்தி என்றே
நாவினிக்கப் பாரதியார் பாடக் கண்டோம்!
விண்டுரைக்க அரியவளாய், கோள்கள் சுற்ற
விரிந்திருக்கும் வான்வெளியாய், வானில் காற்று
மண்டலமாய், உயிர்ப்பு தரும் மழையாய், பின்னர்
வாழ்வழித்துப் பாழ்விளைக்கும் வெள்ளக் காடாய்,
பண்டுமுதல் இன்றுவரை பகலைச் செய்யும்
பரிதியெனும் ஒளியருளாய், உழைக்கும் போதில்
மண்டுகின்ற பலதொழிற்கும் ஆற்றல் கூட்டும்
மாமாயப் பெருவலியாய் அவளைக் கண்டோம்!
காலமெனும் பெருவனத்தில் அண்டக்கோளக்
கவின்மரத்தில் முரல்வண்டாய் அவளைக் காட்டும்
கோலமுறும் அவள்வடிவம் அன்பே என்னும்
கூடுகின்ற இன்பமவள் படிமம் என்னும்.
ஞாலமிதும், விண்ணகமும், திசைகள் யாவும்,
நல்லவற்றில், அல்லவற்றில், அவளைக் காணும்!
மூலமவள், முடிவுமவள் என்றே பாடும்!
மூண்டுவிட்ட பக்திச்சொல் நடனம் ஆடும்!
ஊழிக்கூத்துப் பாடலில் அன்னை
உருவம் பொலிவாய் அசைகிறது -கவி
ஓசையில் நெஞ்சே கசிகிறது!
உறுமிக் கொண்டே ஞானச் சுடராய்
உயரும் ஒளியே தெரிகிறது – பின்
ஊர்த்துவ நடனம் புரிகிறது!
பாழும் பதறித் திசைகள் சிதறிப்
பரவும் கூத்தும் விரிகிறது – தமிழ்ப்
பாடல் விந்தை புரிகிறது!
பண்ணில், சொல்லில், உமையைச் சிவனைப்
பற்றிக் கொண்டே படர்கிறது – உயர்
பரவச நிலையை அடைகிறது!
கவிஞர் நா.சீ.வரதராஜன் : அமரர் நா.சீ.வரதராஜன் பெருங் கவிஞர்.பல நூல்களை இயற்றியவர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர். இவரது புனைப்பெயர்:பீஷ்மன்; பிறப்பு : 20-5-1930
தொகுப்பாளர் குறிப்பு : கல்கி வார இதழில் வெளியாகியுள்ள பாடல் இது. வெளியான ஆண்டு 1978.
நன்றி: கல்கி வார இதழ்; நன்றி: அமரர் நா.சீ.வரதராஜன்
***