விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (Post No.4668)

WRITTEN by London Swaminathan 

 

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London – 12-41

 

Post No. 4668

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

விநாச காலே விபரீத புத்தி

‘விநாச காலே விபரீத புத்தி’ என்றால் என்ன பொருள்? ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அதாவது கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.

 

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் – என்பதே ‘விநாச காலே விபரீத புத்தி’யின் மொழி பெயர்ப்பு.

 

நான் ‘தினமணி’யில் வேலை பார்த்த காலத்தில் 1975 ஜூன் 25ல் நாட்டில் எமர்ஜென்ஸி (Emergency) எனப்படும் அவசர நிலை பிரகடனமாயிற்று. எதிர்க் கட்சித் தலைவர்களைச் சிறையிலிட்டார் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி. உடனே மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஜெயப் பிரகாஷ் நாராயணன் அளித்த பேட்டியில் ‘விநாச காலே விபரீத புத்தி’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு சரி என்பதை அதற்குப் பின் வந்த நிகழ்ச்சிகள் விளக்கின.

 

 

அப்போது இது சாணக்கிய நீதியில் உள்ள வரிகள் என்று எனக்குத் தெரியாது. இதோ சாணக்கிய நீதியின் முழு வரிகள்:

 

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் எனும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

 

xxx

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!

 

சாணக்கியனுடைய இன்னொரு கொள்கையும் மிகவும் செயல்முறைக்கு உகந்தது. சிலருக்குப் புரியும் வகையில் பதில் தந்தால்தான் புரியும்; சில இடங்களில் ஆடுற மாட்டை ஆடிக்  கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்  கறக்கனும். ஆகவே சாணக்கியன் செப்புவது யாதெனில்,

 

“நல்லது செய்தால் நல்லது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு வன்முறை மூலம் பதில் தர வேண்டும். இதில் தவறேதும் இல்லை. கெட்டவர்களாக இருந்தால் அவர்களைக் கெட்டவர் போல இருந்தே மடக்க வேண்டும்.”

 

ஸம்ஸ்க்ருதத்தில் அவன் ஸ்லோகம் பின்வருமாறு,

க்ருதே ப்ரதிக்ருதம் குர்யாத் ஹிம்ஸனே ப்ரதிஹிம்ஸனம்

தத்ர தோஷோ ந பததி துஷ்டே துஷ்டம் ஸமாசரேத்

-சாணக்கிய நீதி, அத்யாயம் 17, ஸ்லோகம் 2

 

 

பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைத் தாக்கினால், தாக்குதல் மூலம் பதிலடி தர வேண்டும். அதாவது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்!

 

ஆனைக்கும் பானைக்கும் சரி!

 

‘ஆனைக்கும் பானைக்கும் சரி’ என்னும் கதையை நாம் அனைவரும் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறோம். இந்த ஸ்லோகத்துக்கு மிகவும் பொருத்தமான கதை அது. இதுவரை நீங்கள் கேட்டது இல்லை என்றால் இதோ மிக மிக  சுருக்கமாக அந்தக் கதை:–

 

ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானையையும் ஊர்வலத்தில் விட ஆசைப்பட்டார் ஒருவர். யானை வளர்ப்பவரிடம் சென்று ஒரு யானையை ஊர்வலத்துக்கு வாடகைக்கு எடுத்தார். அவருடைய துரத்ருஷ்டம், யானை பாதி வழியிலேயே இறந்து விட்டது.

 

யானையின் சொந்தக்காரன் வந்த போது யானை இறந்த தகவலைச் சொல்லி, ‘ஐயா, யார் தவற்றினால் அது இறந்திருந்தாலும் போகட்டும். நான் அதன் மதிப்பு எவ்வளவோ அவ்வளவை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்’ என்று யானையைக் கடன் வாங்கியவர் சொன்னார். ஆனால் அந்த முட்டாளோ  எனக்குப் பணம் ஏதும் வேண்டாம்; அதே போன்ற ஒரு யானை வேண்டும்; அல்லது செத்துப் போன யானையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று  சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்.

 

யானைக் கடன் பெற்றவரோ பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போதுது அவருடைய  நண்பர் ஒருவர் அவர் காதில் ஏதோ கிகிசுத்தார்.

உடனே யானையைக் கடன்பெற்றவர் சொன்னார்: ‘’கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள நாளை மதியம் வீட்டுக்கு வாருங்கள். யானையைக் கொடுத்து விடுகிறேன்’’ என்றார். மறு நாள் காலையில் கதவின் பின்புறத்தில் புதிய பானைகளையும் பழைய பானைகளையும் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் யானைக் கடன்காரன் வந்து கதவைத் தட்டியபோதும் கதவு திறக்கவில்லை. பதிலும் இல்லை. உடனே யானையக் கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கதவை ‘தடால்’ என்று எத்தி உதைந்தான்; கதவும் திறந்தது. கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் யாவும் சுக்கு நூறாய் உடைந்தன. உடனே வீட்டுக் காரன் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டான. ‘’இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பானைகள்; ஆகவே எனக்கு இப்போதே அந்தப் பானைகள் வேண்டும்’’ என்றான். உடனே யானையைக் கடன் கொடுத்தவன் அதற்கான நஷ்ட ஈட்டைத் தருவதாகச் சொல்லி மன்றாடினான். ஆனால் அவனோ ‘’நீ இறந்து போன யானைதான் திரும்ப வேண்டும் என்றாய்;  நான் உடைந்து போன பானைகளைத் தானே திரும்பக் கேட்கிறேன்’’ என்றான்.

 

இருவரும் நீண்ட நேரம் வாதாடியதால் ஊர் மக்கள், அவர்களை நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதி மன்றத் தலைவர் வழக்கு முழுவதையும்  கேட்டுவிட்டுச் சொன்னார்: “இருவரும் ஈட்டுத் தொகையை அளிக்க முன்வந்தும் மற்றவர்  அதை வாங்க மறுக்கிறீர்கள்; ஆகவே ஒருவரும் ஒருவருக்கும் ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை; யானைக்கும் பானைக்கும் சரி! கோர்ட் முடிந்தது; விசாரணை முடிந்தது. அனைவரும் கலைந்து செல்லல்லாம்”.

 

இதுதான் யானைக்கும் பானைக்கும் சரி என்ற பழமொழியின் பின்னுள்ள கதை

 

–SUBHAM–

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    விநாச காலே விபரீத புத்தி எனக் கேட்டிருக்கிறோம்.ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது அவரது புத்தியும் கெடும் என்பது புரிகிறது. ஆனால் ஒருவருக்கு கெட்டகாலம் வந்தால், அதனால் நேரக்கூடிய தீமை பிறரால் வரும்- அதாவது , ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால், தொடர்புடைய ஒருவரின் மதி கெடும், அதனால் அவருக்குத் தீங்கு நேரும் என்பதை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இதில் முதலில் “பதிகத்தில்” பின்வருமாறு இருக்கிறது:

    வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
    சினை அலர் வேம்பன் தேரான் ஆகிக்
    கன்றிய காவலர்க் கூஉய் “அக்கள்வனைக்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு” என….. [வரிகள் 27-30]

    கோவலன் வினைப்பயனைத் துய்க்கும் காலம் வந்ததால்,
    வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னன். புத்தி தெளியாதவனாக ஆகி.
    சினம் கொண்டு, ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க’ என கொலைத் தொழிலை நிறைவேற்றும் காவலர்களுக்குக் கட்டளை இட்டான். கோவலனுக்கு விநாச காலம், மன்னனுக்கு விபரீத புத்தி!
    ஆனால், பின்னால் பாண்டியனும் உயிர் துறப்பதால், அவனுக்கும் கெட்ட காலம் எனச் சொல்லக்கூடும்.
    ஆனால் இந்தப் ‘பதிக’ப் பகுதி இளங்கோவடிகள் வாக்கல்ல எனச் சிலர் சொல்கிறார்கள்.
    இத்தகைய நீதி வாக்கியங்களை ஆழ்ந்து சிந்தித்தால் பயமே தோன்றுகிறது! தர்மத்தின் போக்கு சூக்ஷ்மமானது!

Leave a comment