பாரதி போற்றி ஆயிரம் – 38 (Post No.4670)

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London- 6-07 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4670

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 38

  பாடல்கள் 218 முதல் 221

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

சங்கு சுப்பிரமணியன், மதிவண்ணன், ஆர்.பி.சாரதி பாடல்கள்

இலக்கியத் தலைவன் பாரதியார்

கம்பனைப் பெற்ற நாட்டில்

  கவிமணம் ஓயு நாளில

வம்பரின் மந்தை தன்னில்

  வளர்த்திட தேச பக்தி

உம்பர் மா உலகதாக

  உயர்த்திடத் தமிழகத்தை

அம்புவி வந்த வீ ர!

  அருங்கவி பாரதியார்!

சங்கு சுப்பிரமணியன்: பாரதியைப் பெரிதும் போற்றி பாரதியின் பாடல்களைப் பரப்பியவர். தேசபக்தர். சங்கு கணேசன் நடத்தி வந்த சுதந்திரச் சங்கு பத்திரிகையில் உடன் இருந்தவர்.

தொகுப்பாளர் குறிப்பு: இந்தப் பாடல் இலக்கியத் தலைவன் பாரதியார் என்ற கட்டுரையின் முடிவில் வரும் பாடல். இது சுதந்திரச் சங்கு 9-9-1931 தேதியிட்ட இதழில் வெளியானது.

இதை குமரிமலர் பத்திரிகையில் திரு ஏ.கே.செட்டியார் பாரதியைப் பற்றிய பழைய இதழ்களில் வந்த கட்டுரைகளை வெளியிடும் போது மீண்டும் வெளியிட்டார்.

நன்றி: குமரி மலர்.

பாரதி

மதிவண்ணன்

வான்வியப்பு! தீத்தெறிப்பு! நீர்ச்சிலிர்ப்பு!                  மலர் வனப்பு! இவையனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த           தேன் படைப்பு பாரதியின் பாடல்! நாட்டின்                சிறுமை கண்டு பொங்கி வந்த அவரின் பாட்டால்   கூன்படைத்து பள்ளத்தில் வீழ்ந்தி ருந்த                குருடர்களும் எழுச்சியுற்று விழியைப் பெற்றார்!                நான் படைத்த பாட்டெல்லாம் அன்னை நாட்டின்             நலம் பாட வந்ததென்றார் பாரதியார்                       இலக்கியத்தில் இருள்படிந்த நேரம் வந்த                இளங்கதிர் தான் பாரதியார்! வெற்றுச் செய்யுள்             கலக்கி வந்த காலத்தில் அமுதைப் பாட்டில்         கலந்தளித்தார்! குயில் பாட்டும் கண்ணன் பாட்டும்  பலமுறையும் படித்தாலும் இன்பம் ஊட்டும்!           பாஞ்சாலி சபதத்துள் வீ ரம் பொங்கும்!                  நிலை வாயில் பாரதியார், பணிந்து சென்றால்           நிச்சயமாய் இலக்கியத்தின் இல்லம் காண்போம்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

 

ஒரு கவிஞனின் வணக்கம்!

மதிவண்ணன்

சொற்பதங்கள் அனைத்துக்கும் பொற்பதங்களைத் தந்தே அற்புதமாய் நடக்கவைத்த விற்பனனே! பாரதியே!       ஊமைக்கு நீயோ உயிர்நாக்கு போன்றவன் தான்          தீமைக்கு என்றாலோ தீ நாக்காய் எழுந்தவன் நீ!      வானத்தைச் சொற்களினால் வளைத்துப் பிடித்தவன் நீ! மோனத்திலும் கவிதை மோகனத்தைக் கண்டவன் நீ!      நெஞ்சப் பூக்களுக்கு நிறக் கவர்ச்சி தந்தவன் நீ!       வஞ்சத்தை மாய்க்கின்ற வாளை எடுத்தவன் நீ!          தேனில் நனைத்தெடுத்த தீயின் சொல் தொடுத்து        வானில் கால் பதித்த மண்ணில் விதைத்தவன் நீ!        சமுதாயச் செவிகட்குச் சரியான நேரத்தில்             அமுதாய கவிகளை அறிவித்த பாவலனே!            மண்ணுக்குப் பாடியவோர் மாகவிஞ! என்மேல் உன்                                   கண்பார்வை வேண்டும்! கவிஞன் வணங்குகிறேன்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 12-12-1982 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

பாரதிச் சுடர்

ஆர்.பி.சாரதி

தமிழெனும் சோலையில்                           தனிமலர் பூத்தது                                     தங்க மலரடியோ!

தங்கம் உருகித்                                      தேனாய்ப் பாய்ந்தது                                   தெய்வக் கற்பனையோ!

கமழுங் கற்பனை                                    கவினிதழ் விரித்தது                                கவிதை அமிழ்தடியோ

அமிழ்தில் குழைந்து                                    அனலிற் கனன்றது                                அற்புதம் பாரடியோ!

பார்மிசை யெங்கணும்                             பேரொளி பாய்ந்தது                                 பாரதிச் சுடரடியோ!

ஆர்.பி.சாரதி: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: ஆர்.பி.சாரதி நன்றி: தினமணி சுடர்

***

 

Leave a comment

Leave a comment