
Date: 30 JANUARY 2018
Time uploaded in London- 6-20 am
Written by S NAGARAJAN
Post No. 4678
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை
- செரிங்கட்டிவிதிகள்
ச.நாகராஜன்

இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.
உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.
1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!
கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.
செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.
செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.
மனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.
‘உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.
***