
Date: 31 JANUARY 2018
Time uploaded in London- 6-50 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4682
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
பாடல்கள் 232 முதல் 240
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்
பா வானம் கண்டறியா விடிவெள்ளி!
சீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்
செப்புமொழிக் கவிதந்த பேராளன்
கார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்
கவிச்சுடரின் தரிசனமாய் வந்தனனே
நேர்த்தியுடன் துணிநெய்யத் தறிபோடும்
நிலமறிந்து பயிர்காணும் குறியாளன்
வார்த்திருக்கும் சொற்சிற்பப் பாத்திரமாம்
மாகவிஞன் மந்திரங்கள் சாத்திரமாம்
பாரதிசெவ்வாய் திறந் தருளுடனே
பாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;
சீரதிகம் பெற்றதமிழ்க் குடியுயர்த்தி
செகமுணரத் தமிழ்மணக்க முரசடித்தான்
பண்ணொத்துப் பாட்டுவரும் போதினிலே
பசிதாகம் பறந்தேகும் விதம் போல
பொன்னொத்தக் கவியின்பச் சுவைதந்து
பொழுதுகளை இன்பமய மாக்கினனே
காழ்ப்புதனை மனங் கொள்ளாமல்
கவிக்குலத்து முன்னவரைக் கொலுவேற்றி
பாழ்பட்டு இருளடர்ந்து சிதைந்தநற்
பாமண்டபத் திருப்பணிக்கு அவதரித்தான்
எளிதாக்கித் தமிழ்ப்பாவில் நயம்தந்த
எழுச்சிக்கவி பாரதியார் சொல்யாவும்
உளிதாக்கி தெரித்தகவிச் சிதறலாகும்
ஒப்புக்கே எழுதாத உணர்ச்சிக்கவி
முந்தையரின் புகழ்த்தோணி விட்டங்கே
முத்தமிழும் விரிகடலாய் கிடந்தாலும்
சிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து
தேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்
பாச்சொறிந்து புத்தமுதச் சுவைதந்த
பாவானம் கண்டறியா விடிவெள்ளி
மாக்கவிஞன் எங்கோமான் பாரதியார்
மங்கிடுமோ தமிழணங்கி னொளியிங்கே
வளர்கின்ற பொற்காலம் தமிழிற்கே
வாராதோ எனவிசனிக் கின்ற நாளில்
புலர்கின்ற பொழுதுவரும் ஞாயிற்றின்
புத்தொளியாய் பிறந்தவனே பாரதியாம்.
கவிஞர் K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.
தொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.
நன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்
***