
Date: 5 FEBRUARY 2018
Time uploaded in London- 6-08 am
Compiled by S NAGARAJAN
Post No. 4702
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 264 முதல் 272
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
சென்னை வாழ்வு,சுதேசமித்திரன் துணையாசிரியர் மற்றும் வ.உ.சி தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்

Picture posted by Bhaskaran Sivaraman
சென்னை வாழ்வு
பணியை ஏற்ற பாரதியார் – அரசவைப்
புலவராய் மூன்றாண் டுதொண்டேற்றார்!
பிணித்த அன்பால் மூன்றுமாதம் – மதுரை
சேதுப திஉயர் நிலைப்பள்ளி
பணித்த தமிழா சிரியராக – நற்பணி
புரிந்து தொண்டு உவந்தேற்றார்!
அணிதவழ் சுதந்தர இயக்கத்தின் – எதிர்ப்பு
எங்கும் திகழ்ந்தது அடக்குமுறை!
அடக்கு முறைகள் நிகழ்ந்ததுகாண் – சென்னை
சுதேச மித்திரன் ஆசிரியர்
திடமிகு சுப்பிரமணியயர் – பாரதி
யாரை அழைத்தார் சென்னைக்கு!
கடமை அதுவென பாரதியார் – உணர்ந்து
கடிது சென்னை சென்றாரே!
நடப்பு உதவி ஆசிரியர் – பணியை
நாட்ட முடனே ஏற்றாரே!
ஏற்றார் எழுத்துப் பணியுடனே – கவியும்
இயற்றி உணர்ச்சி ஊட்டுவித்தார்!
ஆற்றல் பெற்ற பத்திரிகை – சுதேச
மித்திரன் அதுவென அறிந்தனர்காண்!
ஏற்ற மிக்க சொற்பொழிவால் – மக்கள்
இதயந் தன்னைக் கவர்ந்தாரே!
போற்றுதல் பெற்று முதற்பதிப்பு – “வங்கமே
வாழிய” மித்ரனில் மிளிர்ந்தது காண்!
சுதேசமித்திரன் துணையாசிரியர்
மிளிர்ந்த பாக்களால் மித்திரனில் – பாரதி
மக்கள் விழிப்பை மலர்வித்தார்!
களிப்பு மிகுசெய் தியொன்றுகேட்டார் – மூத்தபெண்
பாரதி யார்க்குப் பிறந்தது காண்!
ஒளிர்ந்த பேச்சால் காசியிலே – கோகலே
தலைமை யேற்க முழக்கமிட்டார்!
ஒளிதரு காங்கிரஸ் மாநாடு – கல்கத்
தாவில் நடந்தது பீடுடனே
பீடுற நடந்த மாநாட்டில் – தாதா
பாய்நௌ ரோஜி தலைமையேற்றார்!
நாடியே சென்று உரையாற்றி – கல்கத்
தாவில் பாரதி பங்கேற்றார்!
ஈடிலா தேவி நிவேதிதாவை – பாரதி
டம்டம் நகரில் சந்தித்தார்!
பாடிய பாரதி பாக்களெலாம் – மக்களின்
உணர்வைத் தட்டி எழுப்பினகாண்!
எழுப்பிய பாக்களின் மிகைகண்டு – அஞ்சினார்
சுதேச மித்திரன் ஆசிரியர்!
எழுச்சிப் பாக்களால் இதழுக்கு – தடையும்
வரக்கூ டுமென்று கூறினார் காண்!
பழுதிலா உதவி ஆசிரியர் – பதவியை
பட்டென விடுத்தார் பாரதியார்!
விழுமிய நண்பர் திருமலாச் – சாரியார்
உதவி செய்ய முன்வந்தார்!

வ.உ.சி.தொடர்பு
முன்வந் துதவிய நண்பராலே – பாரதி
மாதவத் தொண்டினைத் தொடர்ந்தேற்றார்!
உன்னத “இந்தியா” வாரஇதழ் – பாரதி
உரிமை யோடு நடத்தினாரே!
நன்றே ஏற்றார் வரவேற்பு – “இந்தியா”
நளினம் பெற்று உயர்ந்ததுகாண்!
புன்னகை பூத்து “இந்தியத்தாய்” – எங்கும்
புதுநடை காட்டிப் பவனி வந்தாள்
பவனி வந்த “இந்திய”த்தாய் – ஒலித்தாள்
பாரதி சுதேச கீதங்கள்!
அவனி போற்றப் பாரதியார் – முழங்கினார்
“இந்தியா” இதழில் கீதங்கள்!
நவநிதி பெற்றது போலெண்ணி – வஉ
சிதம்பர னாரும் சென்னைவந்தார்!
அவயம் புகுந்த சிதம்பரனார் – பாரதி
இருவரும் கட்டித் தழுவினர்காண்!
தழுவிய இருபெரும் புரட்சியாளர் – நண்பர்
தேசத் தொண்டர் கூடினர்காண்!
பொழுதெலாம் சுதந்தரம் வேண்டிநின்றோர் – இருவரும்
பெட்புடன் தத்தம் வழிசென்றார்!
முழுமூச் சுடனே உழைக்கின்ற – வங்கத்
தலைவர் விபின்சந் திரபாலை
இழுமென சென்னைக் குஅழைத்து – வந்து
சொற்பொழி வாற்றப் பணித்தாரே!
( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.