
DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-15 am
Written by S NAGARAJAN
Post No. 4718
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஐந்தாவது உரை
- ஒளி மாசின் பாதிப்பு ச.நாகராஜன்

உலகில் ஒளி மாசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!
சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுடன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.
இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.
உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!
ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!
உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!
தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம் கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால், மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும். ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் இதில் வெற்றி அடைய இன்றியமையாததாகும்.
முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 9, 2018ஒளி மாசை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும் எனத் தோன்றவில்லை. முதலில் ஓளிமாசு என்ன என்பதைப்பற்றி நம்மவர்களிடையே விளக்கிச் சொல்லி விழிப்புணர்ச்சி எழுப்புவதே பெரும்பாடாகும். பின்பு, அதற்கெதிரான நடவடிக்கை பற்றி ஒரு பொதுக்கருத்து உருவாகவேண்டும். பின் அதைச் செயல்படுத்த முனைப்புள்ள அரசு-நிர்வாகம் வேண்டும்!
அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், சுதந்திரம் பறிபோகிறது என்ற குரல் எழும்.
விஞ்ஞானம் என்ற பெயரில் ஒரு பக்கம், ஒரு நிலையில் புதிதாக ஏதோ கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். வர்த்தக நோக்கில் செயல்படும் தொழில் துறை உடனே அதைப் புதிய பொருளாகவோ முறையாகவோ (product or process) புகுத்திவிடும். பின்னார் முதிர்ந்த ஆராய்ச்சியில் அவை தீங்கு விளவிப்பன எனத் தெரிந்தாலும் அவற்றைத் தடைசெய்வதோ, உபயோகத்தைக் குறைப்பதோ நடைமுறையில் சாத்தியமில்லாததாக இருக்கிறது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உணவுப் பண்டங்களில் உபயோகப் படுத்தப் படும் வண்ணங்கள், preservatives, பற்பசை, சோப்பு முதலியவற்றில் இருக்கும் கெடுதல் விளைக்கும் ரசாயனப் பொருள்கள்- இவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இவை எல்லாவற்றையும் மிஞ்சுவது பிளாஸ்டிக். இதன் கெடுதல் தன்மை தெரிந்திருந்தும் இதைத் தடைசெய்ய அரசுக்குத் துணிவில்லை! இதன் பயன்பாட்டைக் குறைக்க பொதுமக்களும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இவ்வளவு கெடுதல் விளைக்கும் பொருளை தயாரிப்பதும், பயன் படுத்துவதும், பின்னர் அதன்
பின்விளைவுகளைச் சந்திக்க செலவுசெய்வதும் எல்லாம் GDP யை அதிகரிக்கும்! என்னே நமது பொருளாதாரம்!
அமெரிக்க சிகரெட் கம்பெனிகள் எந்த வித தடை முயற்சியையும் எப்படியெல்லாம் முறியடித்தன!
“My own view is that in many ways, the tobacco industry invented the kind of special-interest lobbying that has become so characteristic of the late 20th- and earlier 21st-century American politics,” said Allan Brandt, dean of Harvard’s Graduate School of Arts and Sciences.
In the 1950s and 1960s, the lobby centered attention on the notion that the science of tobacco was uncertain, and it called into question each medical and scientific finding that came out as it continued to spend “boatloads” of money in Congress, Brandt noted.
“…….. the tobacco wars are anything but over,” he said.
[ Report from CNN.com, June 19, 2009]
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், இன்னமும் சிகரெட் கம்பெனிகள் லாபகரமாகவே இருக்கின்றன!
அனைவரின் கண்ணுக்கெதிரே நடக்கும் ஒரு தீமையின் விஷயத்தில்,60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டும் இந்த நிலை எனின், ஒளிமாசு போன்ற விஷயத்தில் என்ன சொல்ல முடியும்? DDTக்கு எதிராக எவ்வளவு கடினமாகப் பாடுபட்டனர்! Rachel Carson போன்ற விஞ்ஞானிக்கே மாசு கற்பித்தனரே!
‘நல்லது என்று தெரிந்தும் அதைச் செய்யமுடியவில்லை; தகாது என்று தெரிந்தும் அதைச் செய்யாமலிருக்க முடியவில்லை’ என்று மஹாபாரதத்தில் துரியோதனன் சொன்னது நினைவுக்கு வருகிறது!