
DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-03 am
Compiled by S NAGARAJAN
Post No. 4722
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 48
பாடல்கள் 306 முதல் 317
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
புதுவை விட்டு நீங்கல் மற்றும் மீண்டும் சென்னை வாழ்வு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரண்டு பாடல்கள்
புதுவை விட்டு நீங்கல்
கண்டோம், கேட்டோம் பாரதியின் – சீர்த்தி
காசினி எங்கும் பரவியதே!
புண்ணிய பாரத எல்லைக்குள் – பாரதி
எப்பொழு துவருவார் என்றுநோக்கி
கொண்டனர் கோபம் ஆங்கிலேயர் – அதனால்
காவல் பலமும் கூடியதே!
கொண்ட நாட்டுப் பற்றோங்க – பாரதி
தமிழகம் செல்ல எண்ணினார்காண்!
எண்ணிய எண்ணம் மோலோங்க – பாரதி
அன்பர் பலரிடம் கூறினார்காண்!
நண்பர் பலரும் பாரதியை – நெருங்கி
தமிழகம் செல்லத் தடுத்தனர்காண்!
அண்டியே ஊழ்வினை துரத்திடவே – பாரதி
அனைவ ரிடமும் விடைபெற்றார்!
கண்ணீர் சிந்தக் குடும்பமுடன் – பாரதி
கன்னிப் பாரதம் நுழைந்தார்காண்!
நுழைந்த இடமே வில்லியனூர் – கோழிக்
குஞ்சை நாடிய பருந்துபோல
விழைந்து வந்த காவலர்கள் – பாரதி
குடும்பந் தன்னை சூழ்ந்தனரே!
குழைந்து வாடப் பாரதியைக் – காவலர்
கைது செய்து ஏகினர்காண்!
நுழைத்து கடலூர் சிறைதனிலே – அடைத்து
நலியச் செய்து வருத்தினர்காண்!
வருதிச் சிறையில் அடைபட்டார் – செய்தி
த்வியாபித் தெங்கும் பரவியதே!
உருக்கிய ஈயம் வார்த்தகாது – அதுபோல்
இன்னல் ஏற்றனர் நண்பர்கள்!
வெருவியே தூத்துக் குடிநண்பர் – நாவலர்
சோம சுந்தர பாரதியார்
வருந்தி விரைந்து சென்னைவந்தார் – பாரதி
விடுதலை வேண்டிச் செயல்பட்டார்.
செயல்படு சுதேச மித்திரனின் – உரிமை
அரங்க சாமி ஐயங்கார்
அயரா துழைத்தார்! இருவருடன் – காவல்
அதிகா ரிதுரை கானிங்டன்
தயவும் கூடிட அரும்பணியால் – பாரதி
தன்னிகர் விடுதலை தானேற்றார்!
துயருடன் இருபத் துநான்கு நாட்கள் – பாரதி
சிறையில் காலம் கழித்தாரே!
கழித்தார் பதினோ ராண்டுகாலம் – புதுவை
கொடுத்தது அடைக்கலம் பாரதிக்கு!
அழியாப் பொக்கிசம் கட்டுரைகள் – கவிதை
உணர்ச்சிக் காவியப் படைப்புகள்
எழிலுறு பக்தி கீதங்கள் – விழிப்பினை
யூட்டும் எழுச்சிப் பாடல்கள்
தொழிலே படைப்பாய் கொண்டவராம் – பாரதி
தேச விடுதலை வேண்டினாரே!
மீண்டும் சென்னை வாழ்வு
வேண்டியே துணைவி விருப்பத்தால் – பாரதி
ஊராம் கடையம் சென்றாரே!
தீண்டிய வறுமை போக்குதற்கு – எட்டய
தலமே உகந்தது என்றெண்ணித்
தூண்டிய குடும்பத் துடன்சென்று – தங்கி
தொண்டினைத் தொடர்ந்தார் பாரதியார்
மாண்புடன் சுதேசமித் திரனுக்கு – கவிதை
மீண்டும் அனுப்பி தொண்டேற்றார்.
தொண்டால் உயர்ந்த காந்தியண்ணல் – ஒத்துழை
யாமை இயக்கம் நடத்திவந்தார்!
கொண்டார் பயணம் சென்னைக்கு – அங்கு
கண்டிட விரைந்தார் பாரதியும்!
அண்ணலும் கவிஞரும் சந்தித்து – அறிமுகம்
ஏற்றனர் இராசா சிஇல்லத்தில்!
பண்ணிசை சுதந்திர கீதத்தை – பாரதி
பாடக் கேட்டார் காந்தியண்ணல்.
காந்தி யடிகளைக் கண்டபின்னே – பாரதி
சென்றார் எட்டய புரத்திற்கு!
ஏந்திய செய்தி அழைப்புகண்டார் – மீண்டும்
சுதேச மித்திரன் நாளிதழ்க்கு!
“தேர்ந்த உதவி ஆசிரியர் – பதவி
துரிதமாய் ஏற்க விரைந்துவாரீர்”
தாந்திற மறிந்து கிடைத்தபணி – பாரதி
தொழிற்பணி ஏற்க சென்னைசென்றார்!
சென்னை சென்று பணியேற்றார் – குடும்ப
சீல உறவு நன்றேற்றார்!
இன்னிசை திருவல் லிக்கேணி – பகுதியில்
உற்ற வாழ்விடம் ஏற்றார்காண்
முன்னைய நண்பர் பலருமங்கு – அவர்க்கு
உறுதுணை புரிந்து வந்தார்காண்
பொன்னிற குவளைக் கண்ணனென்பார் – அவரே
பாரதி பணியை ஊக்குவித்தார்.
ஊக்க மேற்ற பாரதியார் – முன்னை
உரைகள், கவிகள், ஒருங்குவித்து
ஆக்கம் பெற்றிடத் தொகுத்தளித்தார் – ஆன்ற
பத்திரி கைப்பணி நன்றேற்றார்!
காக்கும் பார்த்த சாரதியை – வணங்கி
கவிதைத் தேரில் உலவிவந்தார்!
சாக்தம் சக்தி அருளினாலே – வெற்றிச்
செயலில் ஏற்போம்! முரசொலித்தார்!
முரசு கொட்டி சுதந்திரத்தை – வேண்டி
முழக்க மிட்டார் பாரதியார்!
அரசு ஆங்கில ஆட்சிக்கு – அன்றே
எதிர்த்து விடுதலை பாடிவிட்டார்!
விரவிய இந்திய சமுதாயம் – விடுதலை
வேட்கைப் பயனை நன்றிசைத்தார்!
பரவலித் துகண்ணனை வணங்கியபின் – உடைத்த
தேங்காய் பழமுடன் தினம்வருவார்!
(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.
****