
Date: 16 FEBRUARY 2018
Time uploaded in London- 5-49 am
Compiled by S NAGARAJAN
Post No. 4749
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 358 முதல் 366
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
பாரதியின் மொழிப்பற்று
பாகாக இனிக்கின்ற பாக்கள் தந்த
பாரதியின் கவித்தொகுப்பில் நுழைந்தே யானும்
சாகாத தெய்வமொழி தமிழே என்று
சாற்றுதற்கு வாய்ப்பினையே உவந்து ஏற்றேன்
ஆகா!இத் தமிழ்ப்பாக்கள் அனைத்தும் என்றும்
அழியாத படைப்பென்றே அதன்சீர் போற்றி
மாகாளி பராசக்தி அருளை வேண்டி
மனமுவந்து இசைக்கின்றேன் மகிழ்ந்து கேட்பீர்!
வீடுதோறும் நூலகமும் இருத்தல் வேண்டும்
வீடுதோறும் கலைக்கூடம் அமைத்தல் வேண்டும்
நாடுமுற்றும் மொழிப்பற்று வளர்ந்தே யோங்க
நகரெங்கும் பள்ளிகளும் பெருக வேண்டும்
நாடுகின்ற தொழிலாலே வளமை யேற்க
நமக்குவேண்டும் மொழிப்பற்று என்று கூறி
பாடுகின்ற பாக்களிலே உணர்ச்சி யூட்டி
பக்குவமாய் பாரதியும் இசைக்கக் கேட்டோம்
மொழிப் பற்று தெய்வபக்தி தேசப்பற்று
முப்பற்றும் பாரதியார் முழங்கக் கண்டோம்
மொழிகளிலே முத்திறத்தைச் சாற்று பான்மை
முத்தமிழுக் கீடில்லை புவியி லெங்கும்
எழிலாகப் பழங்கதைகள் நித்த நித்தம்
இயம்புவதால் பயனில்லை! வீணே நேரம்
அழியாத புகழ்நாட்டும் புதுமை நூல்கள்
அருந்தமிழில் இயற்றிடவே வழியுங் கண்டோம்.
அமிழ்தமென அருந்தமிழில் விருந்து வைத்தே
அனைவரையும் சுவைக்கவைத்த கவிஞர் ஏறே!
தமிழேதான் உயிர்மூச்சாய் ஏற்கச் செய்து
தாய்நாட்டை உயர்நாடாய் போற்றச் செய்ய
இமிழ்கடல்சூழ் உலகமெலாம் தமிழே ஓங்க
எந்நாளுங் கவிபாடிப் பாடுபட்ட
தமிழகத்தின் தீரனேஉன் தொண்டு வாழ்க!
தீந்தமிழின் மொழிப்பற்றை வளர்த்தாய் போற்றி!
அடுத்தடுத்து துன்பந்தான் அடைந்திட்டாலும்
அதற்கஞ்சா வேங்கைபா ரதியே யன்றோ!
எடுத்திட்ட எழுதுகோலால் எவரும் போற்ற
ஏடுதனில் கவியாறே ஓடக் கண்டோம்
விடுத்திட்டார் கவிக்கணையை பகைவர் மீது
விழிப்புணர்வை நம்நெஞ்சில் பாயச் செய்தார்
கொடுத்த அவர் பாட்டடையின் தேனைத் துய்த்து
கிளர்ந்தெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வோம்!
ஈனமுள எண்ணமெலாம் நீங்கி மாந்தர்
இன்பநிலை எய்திட நல் வழியைக் காட்டி
கானயிசை ஏழ்கடலின் உள்ளும் வீசக்
கனித்தமிழ்த்தே னிசைத்த எம்பா ரதியே வாழ்க!
வானார்ந்த பொதியின்கண் வளர்ந்து செல்வ
வளமையெலாம் பெற்றுயர்ந்த தமிழின் மாண்பை
ஆனாத நூற்கடலை, வியந்து போற்றும்
அருமைமிகு பாரதியின் திறமே வெல்க!
மனத்தினிலே வாய்மைதான் தோன்றிவிட்டால்
மணக்கின்ற சொல்லைத்தான் உதிர்ப்போ மன்றோ!
புனிதமிகு பாரதியின் பிறப்பைக் காணப்
புரிந்ததுவோ அருந்தவமோ பார தந்தான்.
புனலினது பெருக்கைப்போல் உணர்ச்சி வெள்ளம்
புவியினிலே பாரதியின் பாட்டி லுண்டு
இனிதுவந்து தமிழமுதைச் சுவைத்து யாமும்
இங்கமரர் சிறப்பினையே பாடக் கேட்டோம்!
எண்ணத்தில் தூய்மையுடன் வாழ்த்துக் காட்டி
இணையில்லா மொழிப்பற்றை நமக்கு ஊட்டி
பண்ணிசைக்கும் யாழைப்போல் சிந்து பாடி
பாரதத்தின் விடுதலைக்கே உணர்வை யூட்டி
மண்ணகத்தில் பக்திநெறி தழைக்கச் செய்து
மாத்தொண்டு புரிந்துவந்த கவிஞர் வாழ்க
அண்ணலுக்கும் ஆண்டாண்டு விழாவெ டுத்து
அகிலமெங்கும் அவர்பெருமை பாடு கின்றோம்.
பத்ரையின் மாற்றொத்த பொன்னைப் போன்ற
பாரதியின் பாநயத்தை இன்னுஞ் சொல்ல
முத்தனைய கவிகளுமே எனக்குப் பின்னே
முகிழ்த்திடவே காத்திருக்க யாமும் கண்டோம்!
தித்திக்கும் தமிழ்மொழியின் மாண்பைக் கண்டோம்
திகட்டாமல் சுவைத்திடவே உங்க ளைப்போல்
சித்தமுடன் செவிசாய்க்க விரும்பு கின்றேன்
சபையோரே! விடை தருவீர் வணக்கம்! நன்றி!
தொகுப்பாளர் குறிப்பு:
எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத்தில் 11-12-2001-இல் கலைமாமணி விக்ரமன் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் அருட்கவிஞர் காசி பாடியது.
மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலின் இறுதியில் இந்தப் பாடல் உள்ளது. நூலின் விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை
****